under review

பழ. முத்தப்பன்

From Tamil Wiki
Revision as of 23:51, 19 February 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பழ. முத்தப்பன்
பழ. முத்தப்பன் உரை (படம் நன்றி: ஜி. ஆதிமூலம், ஃப்ளிக்கர் தளம்)

பழ. முத்தப்பன் (பழனியப்பன் முத்தப்பன்) (மே 13, 1946 – செப்டம்பர் 18, 2021) எழுத்தாளர், பதிப்பாளர், உரை ஆசிரியர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார். சித்தாந்தச் செம்மல் உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் அனைத்துக்கும் ஒரே தொகுப்பாக பழ. முத்தப்பன் எழுதிய உரை குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

பழ. முத்தப்பன், மே 13, 1946 அன்று, செட்டிநாட்டில் உள்ள புதுவயலில், பழனியப்பச் செட்டியார் - லட்சுமி ஆச்சி இணையருக்கு இளைய மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை புதுவயலில் உள்ள சரசுவதி வித்யாசாலை பள்ளியில் படித்தார். கண்டனூர் சிட்டாள் ஆச்சி பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார். அருணந்தி சிவாச்சாரியார் நூல்களை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பழ. முத்தப்பன் மணமானவர். மனைவி அழகம்மை. மகன்: பேராசிரியர் மு. பழனியப்பன். மகள்: மீனாட்சி.

கல்விப் பணிகள்

பழ. முத்தப்பன், மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரியில் 1969 முதல் 1987 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில், 1987 முதல் 2003 வரை பேராசிரியர் மற்றும் முதல்வராகப் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் 2003 முதல் 2012 வரை, திருச்சி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார்.

பழ. முத்தப்பன் மயிலம் கல்லூரியில், தனது பணிக்காலத்தில் தொல்காப்பியம், நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், ஒப்பிலக்கியம், இக்கால இலக்கியம், இடைக்கால இலக்கியம் நம்பியகப்பொருள் போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் குறிப்பேடுகளைத் தயாரித்தளித்தார். தமிழாசிரியர்கள் பி.லிட் பட்டம் பெற்று தம் பணியில் உயர வழிகாட்டினார். மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் போது தமிழ் மட்டுமல்லாமல், பிற துறைகளிலும் மாணவர்கள் சேர்ந்து பயில ஆவன செய்தார். கிராமப்புற மாணவர்கள் பலர் வந்து பயிலும் வகையில் கல்லூரியை விரிவாக்கினார். கணேசர் செந்தமிழ்க் கல்லூரியை முனைவர் பட்ட ஆய்வு மையமாக உருவாக்கினார்.

பழ. முத்தப்பன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

பழ. முத்தப்பன் பாட நூல் குறிப்பேடுகள், உரை நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்களை எழுதினார். நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார். சைவ சித்தாந்த்திலும் பன்னிரு திருமுறைகளிலும் ஆழ்ந்த புலமை மிக்கவர். அருணந்தி சிவாச்சாரியாரின் அந்தாதி இலக்கியங்கள், அருணந்தி சிவாச்சாரியர் நூல்கள் ஓர் ஆய்வு போன்ற இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. காரைக்குடி கம்பன் கழகத்தில் பழ. முத்தப்பன் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பே ‘கம்பனில் நான்மறை’ என்ற நூல்.

சொற்பொழிவு

பழ. முத்தப்பன் சிறந்த சொற்பொழிவாளர். இலக்கியங்கள் குறித்தும், சைவ சித்தாந்த சாத்திரங்கள், திருவாசகம் போன்ற திருமறைகள் குறித்தும் தமிழ்நாடெங்கும் பயணப்பட்டுச் சொற்பொழிவாற்றினார். பல கருத்தரங்குகளில், மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலந்துகொண்டார். மலேயா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றினார்.

ஆய்வுகள்

பழ. முத்தப்பன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ’மணிமேகலைக் காப்பிய காலச் சமுதாயமும் மக்கட் பண்பாடும்’ என்ற தலைப்பில் பயிற்சிப் பயிலரங்கம் ஒன்றை நடத்தினார். செம்மொழி மத்திய நிறுவனம் சார்பில், ‘சங்க இலக்கியங்களில் சைவ சமயக் கூறுகள்’ என்ற தலைப்பில் பழ. முத்தப்பன் செய்த ஆய்வு, சைவ சமயத்தின் தொன்மையை, சிறப்பைப் பலரும் அறிந்து கொள்ள உதவியது.

பழ. முத்தப்பனின் வழிகாட்டலில் பல மாணவர்கள் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றனர். பழ. முத்தப்பன் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பழ. முத்தப்பனுக்கு சேக்கிழார் விருது

அமைப்புப் பணிகள்

பழ. முத்தப்பன் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சிப் பேராசிரியராகs செயல்பட்டார். லால்குடி, சிதம்பரம், நெய்வேலி, சேலம், ஓசூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மையங்களில் சைவ சித்தாந்தம் குறித்துப் பாடம் நடத்தினார்.

லால்குடி திருவருட் சபையில் திங்கள் தோறும் இரண்டாவது சனிக்கிழமை சிந்தாந்தப் பாடம் நடத்தினார். சென்னை கந்தகோட்டம் திருக்கோயிலில் திங்கள் தோறும் மூன்றாவது செவ்வாய்க்கிழமை திருவிளையாடற் புராணம் குறித்து விரிவுரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துபட்டிச் சிவன் கோயில், உறையூர் ஐவண்ண நாதர் திருக்கோயில் எனப் பல ஆலயங்களில் பெரிய புராண விரிவுரை, திருவாசக முற்றோதல் பணி போன்ற பணிகளை மேற்கொண்டார்.

பொறுப்புகள்

  • செயலாளர், ஸ்ரீ சரசுவதி சங்கம், புதுவயல், சிவகங்கை மாவட்டம்
  • செயலர், ஸ்ரீசரசுவதி வித்யாசாலை பள்ளி
  • தலைவர், திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழு, உறையூர், திருச்சி
  • செயற்குழு உறுப்பினர், ஐவண்ண நாதர் வார வழிபாட்டுக் குழு, உறையூர், திருச்சி
  • முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர், அரிமா சங்கம், மெட்ரோபாலிடன், திருச்சி
  • உறுப்பினர், தமிழகப் புலவர் குழு, திருச்சி.

விருதுகள்

  • குன்றக்குடி ஆதீனம் வழங்கிய தமிழாகரர் விருது
  • கி.வா. ஜகந்நாதன் அளித்த பட்டிமன்ற மாமணி பட்டம்
  • திருவாவடுதுறை ஆதீனம் அளித்த சித்தாந்தச் செம்மணி பட்டம்.
  • திருச்சி தமிழ்ச்சங்கம் அளித்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை விருது
  • உறையூர் ஐவண்ணநாதர் திருக்கோயில் வார வழிபாட்டுக் கழகம் வழங்கிய சிவஞானச் செம்மல் பட்டம்.
  • மயிலை சின்னண்ணக் குடில் அறக்கட்டளை அளித்த சைவசித்தாந்த ஞான தேசிகர் பட்டம்
  • ஸ்ரீ ரங்கம் செண்பகத் தமிழரங்கு வழங்கிய மேகலை மாமணி பட்டம்
  • சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் அ.ச. ஞானசம்பந்தம் அறக்கட்டளை அளித்த ‘சிறந்த பேராசிரியர்’ விருது
  • விழுப்புரம், வளவனூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய பட்டிமன்ற மாமணி பட்டம்.
  • சேக்கிழார் விருது
  • தமிழ் மொழிச் செம்மல்
  • சிவஞானக் கலாநிதி
  • கற்பனைக் களஞ்சிய நம்பி
  • தொல்காப்பியச் செம்மல்
  • சிவநெறிச்செம்மல்
  • சித்தாந்தக் கலைச்செல்வர்

மறைவு

பழ. முத்தப்பன், செப்டம்பர் 18, 2021 அன்று தனது 75 ஆம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

பழ. முத்தப்பன் சிறந்த உரையாசிரியர். மாணவர்களும் ஆசிரியர்களும் எளிதில் பொருளுணர்ந்து கொள்ளும் வகையில் தனது உரைகளை எழுதினார். சித்தாந்த சாத்திர அறிஞராகவும், இலக்கியப் பேச்சாளராகவும் செயல்பட்டார். சித்தாந்தம் குறித்து விரிவாக ஆய்வு செய்து பல நூல்களை எழுதினார். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம், தமிழண்ணல் சிறந்த தமிழறிஞர்களாகச் செயல்பட்ட நகரத்தார்கள் வரிசையில் பழ. முத்தப்பனும் இடம் பெறுகிறார்.

நூல்கள்

ஆய்வு நூல்கள்
  • முப்பொருள் இயல்பு
  • சிந்து இலக்கியம்
  • திருமுறைகளில் அகக் கோட்பாடு
  • சிவஞான முனிவரின் அந்தாதி இலக்கியங்கள்
  • அருணந்தி சிவாசாரியார் நூல்கள் ஓர் ஆய்வு
  • கோவை இலக்கியம்
  • கம்பனில் நான்மறை
  • நகரத்தார் திருமணச் சடங்குகள்
  • வள்ளுவம் - கட்டுரைத் தொகுப்பு
உரை நூல்கள்
  • ஞானாமிர்தம்
  • சிவஞான சித்தியார்
  • திருக்கோவையார்
  • சைவ சித்தாந்த சாத்திரங்கள்
  • அழகர் கிள்ளை விடு தூது
  • திருமந்திரம் நூறு பாடல்கள் - சித்தாந்த உரை
  • காந்தி பிள்ளைத் தமிழ்
  • கல்லாடம்
  • பரபக்கம்
  • திருவிளையால் புராணம்
  • பெரிய புராணம்
பதிப்பித்த நூல்கள்
  • இன்றைய நோக்கில் பதினெண்கீழ்க் கணக்கு.
  • கருத்தரங்கக் கட்டுரைக்கோவை

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.