under review

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 07:39, 14 September 2023 by Tamizhkalai (talk | contribs)

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை (1861-1917) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

நாகப்பட்டணம் மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் ரக்தி வீராஸ்வாமி பிள்ளையின் மூத்த மகனாக 1861-ஆம் ஆண்டு வேணுகோபால் பிள்ளை பிறந்தார்.

நாதஸ்வர பயிற்சியை முதலில் தந்தை ரக்தி வீராஸ்வாமி பிள்ளையிடம் துவங்கி மூன்று வருடங்கள் பயின்றார். பின்னர் கீழ்வேளூர் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளையிடம் ஏழாண்டுகள் குருகுலவாசமாக நாதஸ்வரம் பயின்றார்.

தனிவாழ்க்கை

வேணுகோபால் பிள்ளைக்கு முத்துக்குமார பிள்ளை, தண்டபாணி பிள்ளை என்ற இரு தம்பிகளும், அஞ்சுகம் என்றொரு தங்கையும் இருந்தனர். அஞ்சுகம் அம்மாள் நாதஸ்வர இசை உலகின் குருகுலமாக இருந்த கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் மனைவி.

கோட்டூர் ஸ்வாமிநாத நாதஸ்வரக்காரரின் மகள் மாரிமுத்தம்மாளை வேணுகோபால் பிள்ளை மணந்தார். மாரிமுத்தம்மாளின் தங்கையை மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை மணந்திருந்தார். வேணுகோபால் பிள்ளையும் சின்னப்பக்கிரிப் பிள்ளையும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதில்லை.

வேணுகோபால் பிள்ளைக்கு குஞ்சிதபாதம், நடராஜசுந்தரம் என்ற இரு மகன்களும், பாப்பாத்தியம்மாள் என்ற மகளும் இருந்தனர். கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையின் மகளை குஞ்சிதபாதம் பிள்ளை மணந்தார். நடராஜசுந்தரம் பிள்ளையின் மகன் நாதஸ்வரக் கலைஞர் கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை.

இசைப்பணி

வேணுகோபால் பிள்ளை சிதம்பர நடராஜர் ஆலயத்தின் ஆஸ்தானக் கலைஞராக இருந்தார். அக்கோவின் திருவிழாக்கள் அனைத்திலும் வாசிப்பவர். ஏராளமான கீர்த்தனைகள் அறிந்திருந்த வேணுகோபால் பிள்ளையின் வாசிப்பில், தானம், ரக்தி, பல்லவி, சிக்கலான ஸ்வரப்பிரஸ்தாரங்கள் எல்லாம் தனிச்சிறப்பாக இருந்தன.

வேணுகோபால் பிள்ளை மைசூர், ராமநாதபுரம் அரண்மனைகளில் தங்கத் தோடாக்கள், பதக்கங்கள் போன்ற பல சன்மானங்களைப் பெற்றவர். வேணுகோபால் பிள்ளை தமிழகத்திலிருந்து முதன்முறையாக சிங்கப்பூருக்கு கச்சேரி வாசிக்க சென்ற நாதஸ்வரக் கலைஞர். 1906-ல் தனக்கு உடன்வாசிக்க ஒரு நல்ல தவில் கலைஞர் வேண்டுமென தன் மைத்துனர் கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் சொன்னபோது, அவர் பன்னிரண்டு வயதான நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை அழைத்துவந்து சேர்த்துவிட்டார். குருகுலவாசம் போல மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு லயசம்பந்தமான பல அரிய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார் வேணுகோபால் பிள்ளை .

மாணவர்கள்

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை ராஜபிளவை உண்டாகி 1917-ஆம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page