under review

ஞானரதம்

From Tamil Wiki
Revision as of 13:34, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
ஞானரதம்

ஞானரதம் ( 1970-1987) தமிழில் வெளிவந்த சிற்றிதழ். ஜெயகாந்தன் இதன் ஆசிரியராக இருந்தார். தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கியப்படைப்புக்கள் இதில் வெளிவந்தன

வரலாறு-

ஜனவரி 1970-ல் ஜெயகாந்தனை ஆசிரியராகவும் தேவ.சித்ரபாரதியை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு ஞானரதம் மாத இதழ் வெளிவரத் தொடங்கியது. இதழின் ஆசிரியர் குழுவில் ஞானக்கூத்தன் இருந்தார். முதல் ஆறு மாத காலம் ஞானரதம் சிறிய அளவில் (கிரவுன் சைஸ்) வெளிவந்தது.

7-வது இதழிலிருந்து ஒவ்வொரு இதழையும் ஒவ்வொருவர் தயாரிக்கும் முறையை தேவ சித்திரபாரதி கைக்கொண்டார். இதழின் அளவும் பெரிதாகியிருந்தது அப்போதைய ஆனந்த விகடன் அளவில் வெளிவந்தது.ஞானக்கூத்தன், வல்லிக்கண்ணன், பரந்தாமன் ஆகியோர் 7, 8, 9-வது இதழ்களை தயாரித்தனர். ஒன்பது இதழ்களுக்குப் பின் ஒரு இடைவெளி. பிப்ரவரி 1972-ல் பத்தாவது இதழிலிருந்து ஜெயகாந்தன் விலகிக்கொண்டார். தேவ. சித்ர பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் இதழ் வெளிவரத் தொடங்கியது.

மே – ஜூலை, 1974-ல் 37 - 39-வது இதழுடன் ஞானரதம் நின்றது. அந்த இதழ் சோல்செனிட்சின் சிறப்பிதழ் என்று வெளிவந்தது. அதில் கடைசிப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

"1974- ஆகஸ்டு முதல், இப்போது இலக்கியத் துறைப் பத்திரிகையாக மட்டும் உள்ள ஞானரதம் மானிட இயல்கள் (Humanities) அனைத்துக்குமான பத்திரிகையாகப் பரிணாமம் பெறுகிறது. இதற்கிசைவாக திரு. கந்தர ராமசாமியின் தலைமையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட புதிய ஆசிரியர் குழு ஆகஸ்டு 1974- முதல் பொறுப்பேற்கிறது. ஆகஸ்டு முதல், ஞானரதம் இதே அளவில் 80- பக்கங்களுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலை அம்சங்களுடன் வெளிவரும். தனி இதழ் விலை ரூ. 2/- ஆண்டுச் சந்தா ரூ.12/- இருக்கும்." அந்த எண்ணம் நிகழவில்லை.

மீண்டும் 1983-ன் பிற்பகுதியில் இருமாதம் ஒருமுறை இதழாக வெளியீட்டைத் தொடங்கியது. 1986-ல் க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவரத் தொடங்கியது. ஜனவரி 1987-ல் மீண்டும் ஞானரதம் நிறுத்தப்பட்டது.

உள்ளடக்கம்

ஞானரதம்

ஜெயகாந்தன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரையிலும் 'முன்னோட்டம்’, 'உரத்த சிந்தனை’ (கேள்வி – பதில் பகுதி), கவிதைகள் தொடர்ந்து எழுதினார். ஜி. நாகராஜன் எழுதிய நாளை மற்றுமொரு நாளே நாவல் தொடராக வெளிவந்தது. ஜி. நாகராஜன் சிறுகதைகள், கவிதைகளும் ஞானரதத்தில் எழுதினார். ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார். ஞானரதம் வெளியிட்ட க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்பிரமணியன் ஆகியோரது மணி விழா மலர்கள் முக்கியமானவை. ரசனை என்ற பகுதியில், ரசனைக்கு அடிப்படையான சில ஆரம்பப் பயிற்சிகளை விளக்கும் நோக்கத்துடன் வெங்கட் சாமிநாதன், 'அனுபவம், வெளிப்பாடு, நவீன ஓவியம்' என்ற தலைப்பில் 7-வது இதழ் முடிய தொடர் கட்டுரை எழுதினார்.

ஆறாண்டுகள் இடைவெளிக்குப்பின் சுந்தர ராமசாமி எழுதிய 'பல்லக்குத் தூக்கிகள்’ சிறுகதை ஞானரதம் ஆகஸ்ட் 1973 இதழில் வெளியானது. எழுத்தாளர்களின் 'உரத்த சிந்தனை’ பகுதி தொடர்ந்து வெளியானது. அக்டோபர் 1973 இதழில் 'ரசமட்டம்’ பகுதியில் சுந்தர ராமசாமியின் 'ஆந்தைகள்’ கவிதை பற்றி ந. முத்துசாமி எழுதியது சர்ச்சையைக் கிளப்பியது (அக்கவிதை க.நா.சுப்ரமணியத்தை குறிப்பிடுவதாக ந. முத்துசாமி எழுதினார்) அது தொடர்பாக நகுலன், சுந்தர ராமசாமி இருவரும் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி எழுதவேண்டியதாயிற்று. க.நா.சுப்ரமணியம் ஆசிரியராக இருந்தபோது க. நா. சுப்ரமணியத்தின் வள்ளுவனும் தாமஸும் நாவல் தொடராக வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில் க. நா. சுப்ரமணியம், வண்ணநிலவன் இருவரின் பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தவையாக இருந்தன என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page