under review

கோமதி சுப்ரமணியம்

From Tamil Wiki
Revision as of 00:11, 17 March 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
எழுத்தாளர் கோமதி சுப்ரமணியம்

கோமதி சுப்ரமணியம் (ஆகஸ்ட் 25, 1925 – மே 23, 2011) எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். வானொலிக்காகப் பல்வேறு நாடகங்களை எழுதினார். இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்.

பிறப்பு, கல்வி

கோமதி சுப்ரமணியம், திருநெல்வேலியில், ஆகஸ்ட் 25, 1926 அன்று நம்பிராஜ பிள்ளை – சிவகாமி இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஆங்கிலம், ஹிந்தியில் புலமை பெற்றார்.

சுகி சுப்ரமணியம் - கோமதி சுப்ரமணியம்

தனி வாழ்க்கை

கோமதி சுப்ரமணியத்திற்கு அவரது பதினைந்தாம் வயதில் திருமணமானது. கணவர், எழுத்தாளர் டி.என். சுகி சுப்பிரமணியன். இவர்களுக்கு மூன்று மகள்கள்; மூன்று மகன்கள். மகன்களில் எம்.எஸ். பெருமாள், சுகி சிவம் ஆகியோர் எழுத்தாளர்கள்.

கோமதி சுப்ரமணியம் சிறுகதைகள்

இலக்கிய வாழ்க்கை

கோமதி சுப்ரமணியம் தன் தந்தை வாங்கி அளித்த ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் இதழ்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். திருமணமானதும் கணவர் டி.என். சுகி சுப்பிரமணியன் தந்த ஊக்கத்தால் எழுதத் தொடங்கினார். முதல் கதை ‘மனக் கண்ணாடி’ கல்கி இதழில் வெளியானது. எழுத்தாளர் கல்கி கடிதம் எழுதி தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். கல்கி முதன்முதலாக நடத்திய சிறுகதைப் போட்டியில் கோமதி சுப்ரமணியத்தின் ‘பாட்டி சொன்ன கதை’ இரண்டாவது பரிசு பெற்றது. தொடர்ந்து கலைமகள், அமுதசுரபி, குமுதம், சுதேசமித்திரன், தினமணி கதிர் போன்ற இதழ்களில் சிறுகதைகள், தொடர்களை எழுதினார். சக்தி, வள்ளி போன்ற புனை பெயர்களிலும் எழுதினார்.

கோமதி சுப்ரமணியம், இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் ‘துரோகமா?’, ‘பாசம் என்கிற சொல் எதற்கு?’ ஆகிய சிறுகதைகள் ‘முத்திரைக்கதை’களாக வெளிவந்தன.

மொழிபெயர்ப்பு

சரஸ்வதி ராம்நாத் ஹிந்தியில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பில் கோமதி சுப்ரமணியத்தின் படைப்பு ‘மம்தா’ என்கிற தலைப்பில் இடம்பெற்றது. சரஸ்வதி ராம்நாத் எழுதிய ‘தமிழ்நாட்டு பெண் எழுத்தாளர்கள்’ என்கிற ஹிந்தி நூலில் கோமதி சுப்ரமணியத்தின் படைப்புகளும், கட்டுரைகளின் கதைச் சுருக்கங்களும் இடம்பெற்றன.

வை.மு.கோதைநாயகி, லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா போன்றோர் கோமதி சுப்ரமணியத்தின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள். கோமதி சுப்ரமணியம் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

கோமதி சுப்ரமணியம் நாவல்

நாடகம்

கோமதி சுப்ரமணியம், தனது கணவர் டி.என். சுகி சுப்பிரமணியன் அகில இந்திய வானொலியில் பணியாற்றியதால் வானொலிக்கு நாடகங்கள் எழுதாமல் இருந்தார். அதேசமயம் இலங்கை வானொலிக்கு கால்மணி, அரைமணி நேர நாடகங்களை எழுதி அனுப்பினார். அவை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பாகின.

நேயர்களின் வரவேற்பு காரணமாக ‘குணநாயகத்தின் குடும்பம்’ என்கிற ஐம்பது வாரத் தொடர் நாடகத்தை இலங்கை வானொலிக்காக எழுதினார். கணவர் பணி ஓய்வு பெற்றதும் சென்னை – புதுவை வானொலிகளிலும் சென்னை தொலைக்காட்சியிலும் நாடகங்கள் பலவற்றை எழுதினார்.

திரைப்படம்

குமுதம் வார இதழில் கோமதி சுப்ரமணியம் எழுதிய ‘சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள்’ என்கிற சிறுகதை, இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனால். ‘மாலதி’ என்ற பெயரில் திரைப்படமானது.

விருதுகள்/பரிசுகள்

  • ‘சாகாத வாழ்வுக்கு சஞ்சீவி’ சிறுகதை, கல்கி ஆகஸ்ட் மாதச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • ‘தியாகத்துக்கு ஒரு தனயன்’ சிறுகதை, கல்கி நெல்லை மாவட்ட சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.
  • குமுதம் இதழின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குமுதம் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் ‘பந்தயம்’ என்கிற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

மற்றும் பல பரிசுகள்.

மதிப்பீடு

கோமதி சுப்ரமணியம் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். பெண்களையும், குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி எழுதினார். லக்ஷ்மி தொடங்கி வேங்கடலட்சுமி, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன், சியாமளா பாலகிருஷ்ணன், அநுத்தமா ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் எழுத்தாளர்கள் வரிசையில் கோமதி சுப்ரமணியமும் இடம் பெறுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • ஒரே குடும்பம்
  • நெஞ்சே நினைப்பதெப்போ?
  • நினைவுகள் ஆயிரம்
  • அவனும் குழந்தைதான்
  • வாரிசு
  • புதிய உறவு
  • பிருந்தாவனம்
  • பாசத்தை கடந்த பகை
  • பணம் கொத்திய மனிதர்கள்
  • நெஞ்சில் குடியிருக்கும்
  • தொடரும் பயணங்கள்
  • டாக்டர் சாவித்திரி
  • சிந்தனைச் செல்வம்
  • சிந்தனைச் சிற்பங்கள்
  • குணநாயகத்தின் குடும்பம்
  • கிரகப்பிரவேஷம்
  • உறவைத் தேடும் உள்ளங்கள்
  • வளம் தரும் உறவுகள்
  • உறவுகள் பலவிதம்
  • மைத்துனி
  • பூஜைக்குரிய மலர்
  • கிரகணம்

மற்றும் பல

சிறுகதைத் தொகுப்பு
  • மனக்கண்ணாடி
  • அறிவுக்கு அப்பால்
  • இனிக்கும் சிறுகதைகள்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.