அத்வைதம்

From Tamil Wiki

அத்வைதம் (பொயு7/8 ஆம் நூற்றாண்டு) (அத்துவிதம், இரண்டின்மை நோக்கு) இந்திய வேதாந்த மரபின் ஒரு வளர்ச்சி நிலை. சங்கரரால் முன்வைக்கப்பட்டது. பிரம்மம்- பிரபஞ்சம், ஆத்மா- பரமாத்மா ஆகிய இருமைநிலைகள் உயிர்கள் கொள்ளும் மாயையே என்றும், உண்மையில் இருப்பது பிரம்மம் என்னும் இரண்டின்மை மட்டுமே என்றும் அது கூறியது. சங்கர மரபு அத்வைதம் சார்ந்த மடங்களை நிறுவியது. அத்வைத மரபுடன் உரையாடியும் முரண்பட்டு விலகியும் பிற்கால வேதாந்தங்கள் உருவாயின. நவீன காலகட்டத்தில் அத்வைதத்தில் இருந்து நவவேதாந்த மரபுகள் உருவாயின.

ஆசிரியர்

அத்வைத வேதாந்தத்தின் முதலாசிரியர் சங்கரர். அவருக்கு முன்னரே வேதாந்தம் இருந்தாலும் அத்வைதம் என்று சுட்டப்படும் குறிப்பான தத்துவ சிந்தனை மரபு அவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய ஆசிரியர்கள் அச்சொல்லை பயன்படுத்தியிருக்கின்றனர்.

பெயர்

சொற்பொருள்

அத்வைதம் என்பது அ+த்வைதம் என்று பிரியும். த்வைதம் என்றால் இரண்டுவாதம். அத்வைதம் என்றால் இரண்டின்மை வாதம். பிரம்மம்- பிரபஞ்சம் ஆகியவை இரண்டல்ல, பரமாத்மா- ஜீவாத்மா ஆகியவை இரண்டல்ல, பிரம்மம் மட்டுமே உள்ளது என்னும் பார்வையால் இப்பெயர் அமைந்தது

அத்வைதம் வேதாந்தத்தின் வளர்ச்சியடைந்த வடிவம். அத்வைத வேதாந்தம் என்றே பொதுவாகச் சொல்லப்படுகிறது. வேதாந்தத்தில் பின்னர் உருவான பலவகையான தத்துவ சிந்தனைகளில் இருந்து வேறுபடுத்தும்பொருட்டு அத்வைதம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. அத்வைதம் பிரம்மம் மட்டுமே உள்ளது, எஞ்சியவை எல்லாமே மாயைதான் என்னும் உறுதியான நிலைபாடு கொண்டது.

பிற சொற்கள்

வேதாந்தம் புருஷவாதம், பரமபுருஷவாதம், பிரம்மவாதம் என்று பல்வேறு பெயர்களில் சுட்டப்பட்டது. பொதுவாக வேதாந்தம் என்றபெயர் உள்ளது. அபேத தர்சனம், கேவலவாதம், கேவலத்வைத வாதம் ஆகியபெயர்களும் உள்ளன. அத்வைதத்தை மறுப்பவர்கள் அதை மாயாவாதம் என்பதுண்டு. பிரம்மமே பிரபஞ்சமாக உருப்பெயர்வடைந்தது என்று சொல்வதனால் தத்துவார்த்தமாக அத்வைதம் விவர்த்த வாதம் (உருப்பெயர்வு வாதம்) எனப்படுகிறது.

மூலம்

அத்வைதம் என்னும் சொல்லின் தொடக்கம் எங்கே என்பது குறித்து விவாதங்கள் உள்ளன

  • பௌத்த அறிஞர் ரிச்சர்ட் கிங்( Richard King) மாண்டூக்ய உபநிடதத்தில் அத்வைதம் என்னும் சொல் முதலில் வருகிறது என்று கருதுகிறார்
  • வேத அறிஞர் ஃப்ரிட்ஸ் ஸ்டால் ( Frits Staal ) பிருகதாரண்ய உபநிடத ஆசிரியர் யாக்ஞவல்கியர் அத்வைதம் என்னும் சொல்லை பயன்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்
  • அத்வைதம் என்னும் சொல் பௌத்த விவாதங்களில் உள்ளது. புத்தரின் பெயர்களில் ஒன்று அத்வைதன் என்பது

பொதுப்பயன்பாடு

அத்வைதம் என்னும் சொல் பொதுவாக எல்லாவகையான ஒருமைவாத நிலைபாடுகளையும் சுட்டுவதற்கு இந்திய தத்துவ மரபில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சங்கர அத்வைதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தத்துவசிந்தனையில் பலவகையான இடர்களை உருவாக்குகிறது.

  • சைவ மரபில் காஷ்மீரி சைவம், நாத் சைவ மரபு போன்றவை சிவ-சக்தி என்னும் மையப்பொருட்களில் சிவத்தை மட்டுமே முதன்மைப்படுத்துபவை. ஆகவே அவை சில நூல்களில் அத்வைதம் என அழைக்கப்படுகின்றன.
  • வைணவ மரபில் விஷ்ணு என்னும் பரம்பொருள் மட்டுமே உள்ளது, ஜீவாத்மா அதன் லீலையே என்று வாதிடும் தரப்புகளும் தங்களை அத்வைதம் என்று அழைக்கின்றன. உதாரணமாக வல்லபரின் வைணவம் சுத்தாத்வைதம் என அழைக்கப்படுகிறது.
  • சில யோகமுறைகளில் யோகநிலையில் பேருணர்வு உருவாவதை அத்வைதம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். மந்திரமும் மந்திரத்தைச் சொல்பவனும் ஒன்றாகும் நிலை, யோகத்திலமர்பவன் தன்னிலையை முற்றிலும் இழக்கும் நிலை போன்றவை இவ்வாறு கூறப்படுகின்றன.

தொடக்கம்

பின்னணி

அத்வைத மரபின் ஆசிரியர் என சங்கரர் (பொயு 7/8 ஆம் நூற்றாண்டு) கூறப்படுகிறார். வேதாந்தம் இந்திய சிந்தனை மரபில் ரிக் வேதகாலத்தில் கவித்துவ தரிசனமாக உணரப்பட்டு, ஆரண்யகங்களில் விவாதிக்கப்பட்டு, உபநிடதங்க்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுபிரம்மசூத்திரம் வழியாக வரையறை செய்யப்பட்டு, பகவத்கீதை வழியாக பிற மெய்ஞானங்களுடன் உரையாடி இந்திய சிந்தனை மரபின் மையத்தத்துவங்களில் ஒன்றாக நிலைகொண்டது. சமணம் பௌத்தம் ஆகிய மதங்கள் பொமு 3 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் எழுச்சியடைந்தபோது வேதாந்தம் பின்னடைவைச் சந்தித்தது. பௌத்த மகாயானப் பிரிவின் யோகாசார மரபுடன் தொடர்ந்து உரையாடி வளர்ச்சி அடைந்தது. சங்கரரின் காலகட்டத்தில் முழுமையாக மறுஆக்கம் செய்யப்பட்டு அத்வைதம் என்னும் பெயர் பெற்றது.

சங்கரருக்கு முன்

சங்கரருக்கு முந்தைய அத்வைத ஆசிரியர்களாக கௌடபாதர் , கோவிந்த பகவத்பாதர் ஆகியோர் சங்கரரால் குறிப்பிடப்படுகிறார்கள். சங்கரரின் சமகாலத்தவரும், அகவையால் மூத்தவருமான மண்டனமிஸ்ரர் குறிப்பிடத்தக்க அத்வைதியாக கூறப்படுகிறார். அத்வைதம் முன்னர் புருஷவாதம், பரமபுருஷவாதம், பிரம்மவாதம் என்று பல்வேறு பெயர்களில் சுட்டப்பட்டது. பொதுவாக வேதாந்தம் என்றபெயர் உள்ளது.

சங்கரர்

சங்கரர் கேரளத்தில் காலடி என்னும் இடத்தில் பிறந்தார். காஞ்சிபுரம் கல்விகற்றார். கௌடபாதர் மரபைச் சேர்ந்த கோவிந்த பகவத்பாதரின் மாணவராக வேதாந்தம் பயின்றார். சங்கரர் வேதாந்தத்தின் முதன்மை நூல்களான மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) ஆகியவற்றுக்கு எழுதிய உரைகள் (பஷ்யம்) வழியாகவும், வேதாந்தம் சார்ந்து எழுதிய விவேகசூடாமணி போன்ற நூல்கள் வழியாகவும் அத்வைதக் கொள்கையை நிலைநாட்டினார்.

சங்கரர் குறித்த கதைகள் அவர் காஞ்சிபுரம் முதல் வடக்கே கேதார்நாத் வரையிலும் கிழக்கே புரி முதல் மேற்கே துவாரகை வரையிலும் இந்தியாவெங்கும் சென்று ஞானசபைகளில் பௌத்தர்கள், தார்க்கிக மதம் மற்றும் பூர்வ மீமாம்சம் சார்ந்தவர்களை வாதத்தில் வென்று அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டினார் என்று சொல்கின்றன. மேற்குமலைத்தொடரில் உள்ள கோகர்ணம் என்னும் இடத்தில் அவருக்கு அனைத்தறிவர் (சர்வக்ஞர்) என்னும் பட்டம் அளிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

சங்கரருக்குப் பின் அவருடைய மாணவர்கள் அத்வைத வேதாந்த தரிசனத்தை விரிவாக முன்னெடுத்தனர். சங்கரர் உருவாக்கிய சிருங்கேரி, கேதார்நாத், புரி, துவாரகை மடங்கள் வேதாந்தத்தை நிலைநாட்டும் அமைப்புகளாக திகழ்ந்து வருகின்றன. மேலும் பல மடங்கள் சங்கர மரபைச் சேர்ந்தவையாக உள்ளன.

இணைக் கலைச்சொற்கள்

அத்வைத தரிசனம் மேலைநாட்டு தத்துவசிந்தனை சார்ந்த வெவ்வேறு கலைச்சொற்களைக் கொண்டு விளக்கப்படுகிறது. அச்சொற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அத்வைதத்தைப் பார்ப்பவை, சில வகை மாறுபாடுகளும் கொண்டவை

Nondualism

அத்வைதம் என்பதை நேர்மொழியாக்கமாக Nondualism என மேலைச்சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இரண்டுநிலையை மறுக்கும் சிந்தனை என அத்வைதத்தை புரிந்துகொள்ள முடியாது. இரண்டுநிலை என்பது மாயை என அது சொல்கிறது. அது இரண்டுநிலைக்கு எதிரான சிந்தனை அல்ல. அது ஒரு நேர்நிலை தரிசனம்.

Monism

ஒருமைவாதம் (Monism) என்னும் சொல் கிரேக்க மரபில் பிளேட்டோ முதலியோரில் இருந்து தொடங்கும் ஒரு சிந்தனை. இங்குள்ள அனைத்தும் ஒன்றில் இருந்து தோன்றியவை, அடிப்படையில் ஒன்றேயானவை என வாதிடுவது இந்த கொள்கை. வெவ்வேறு வகையான ஒருமைவாதங்கள் மேலைச்சிந்தனையில் பிற்காலத்தில் உருவாயின. அத்வைதம் மேலைச்சிந்தனையில் உள்ள ஒருமைவாதம் அல்ல. இங்குள்ள அனைத்தும் தொடக்கத்தில் ஒன்றேயாக இருந்தன, அடிப்படையில் ஒன்றே என அத்வைதம் சொல்லவில்லை, மாறாக பன்மை என்னும் தோற்றமே மாயை என்றும், ஒன்றேயான அது ஒருபோதும் பன்மையாக ஆகவில்லை என்றும், அது ஒருமைபன்மை என்னும் நிலைக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்கிறது.

Absolutism

அத்வைத வேதாந்தத்திற்கான கலைச்சொல்லாக முழுமுதன்மைவாதம் ( Absolutism) என்பதை நடராஜகுரு முதன்மையாகப் பயன்படுத்துகிறார். பிரம்மம் ஒன்றே உள்ளது, பிறிதில்லை என்னும் மறுக்கமுடியாமையை முன்வைப்பதனால் இச்சொல்லை அவர் பயன்படுத்துகிறார். ஒவ்வொன்றிலும் நாம் உணரும் மறுக்கமுடியாமையே பிரம்மம் என்னும் வரி அவர் எழுத்தில் உள்ளது. ஆனால் முழுமுதன்மைவாதம் என்பது ஒரு வாதத்தரப்போ தத்துவநிலைபாடோ அல்ல, அது ஓர் அகநிலை அறிதல் என்னும் வேறுபாடு கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிறப்புக்கூறுகள்.

சப்தப்பிரமாணம்

சங்கரர் நேர்க்காட்சி (பிரத்யட்சம்) அனுமானம் (ஊகம்) சுருதி (முன்னறிவு) ஆகிய மூன்று பிரமாணங்கள் (அறிதலடிப்படை) களில் சுருதி என்னும் முன்னறிவே அறிவுக்கு அடிப்படையாக அமையமுடியும் என்று வாதிடுகிறார். சங்கரவேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்று இது. தன்னுடைய கொள்கைகள் சுருதிகள் என்னும் வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் உள்ளவையே என்று சங்கரர் சொல்கிறார். முன்னர் அறியப்பட்ட உண்மையின் நீட்சியாகவே புதிய உண்மை நிலைகொள்ளும் என்று கூறுகிறார். சப்தம் (சுருதி) என்பதே முன்னறிவாக வேதாந்த ஞானத்துக்கு நிலைகொள்கிறது என நிறுவுகிறார்

ஞானகாண்டம்

சங்கரர் அவர் காலகட்டத்தில் ஓங்கியிருந்த வேதவேள்விகள், ஆலயவழிபாடுகள், பலிகள் மற்றும் சடங்குகள், யோகமுறைகள் ஆகியவற்றை முழுமையாக நிராகரிக்கிறார். வேதங்களை தன் கொள்கைக்குச் சான்றுகாட்டும்போது வேதங்களின் சாரம் வேதாந்தமே என்று நிறுவி வேதாந்த மூலநூல்களான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவற்றையே எடுத்தாள்கிறார். வேதங்களின் ஞானகாண்டம் என்னும் அறிவுவாதத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். பிரம்மஞானம் அடைவதே வீடுபேறு என்று வகுக்கிறார்.

தத்துவ அலகுகள்

அத்வைத வேதாந்தத்தின் சில தத்துவ அலகுகள் அதை முழுமையாக விவாதிக்க இன்றியமையாதவை

  1. பிரம்மம் : முழுமுதன்மை. பிரபஞ்சத்தின் காரணம், பிரபஞ்சமாக மாயையால் தோன்றுவது, பிறிதொன்றிலாத முழுமை. பிரம்மம் என்னும் கருதுகோள் கவித்துவமாக ரிக்வேதத்தில் முன்வைக்கப்பட்டு பிற்பாடு உபநிடதங்களால் விரிவாக்கப்பட்டு பிரம்மசூத்திரத்தால் வரையறைசெய்யப்பட்டது. பின்னர் எல்லா இந்து மதப்பிரிவுகளும் தங்கள் தெய்வங்களை பிரம்மத்தின் வடிவங்கள் என விவரித்துக்கொண்டன.
  2. ஜகத் : பிரபஞ்சம். பொருட்களும் அவற்றின் செயல்களும் அடங்கியது. புலன்களாலும் ஊகங்களாலும் அறியப்படுவது. கடுவெளியாகவும், அலகிலாப்பொருள்வெளியாகவும், உலகமாகவும், இயற்கையாகவும், நம்மைச்சூழ்ந்துள்ள அன்றாட உலகமாகவும் திகழ்வது.
  3. மாயை : இல்லாத ஒன்று இருப்பதாகத் தோன்றுதல். அதற்கு உணரும் தரப்பில் உள்ள மயக்கநிலையும் உணரப்படுவது அவ்வாறு தன்னை அறியத்தருவதும் காரணம். மாயை என்பது உயிர்களின் தரப்பில் இருந்து நோக்கினால் ஒரு மாபெரும் நிகழ்வு. பிரம்மத்தின் தரப்பில் இருந்து நோக்கினால் அது பிரம்மத்தின் ஒரு மீச்சிறு சாத்தியக்கூறு மட்டுமே.
  4. அவித்யை: அறியாமை. கல்லாமை அல்ல. உயிர்களிடம் மாயையின் விளைவாக பிரிக்கமுடியாத இயல்பாகவே இருக்கும் பிரம்மத்தை அறியமுடியாத தன்மை, பிரம்மத்தில் இருந்து தன்னை வேறுபடுத்திப்பார்க்கும் தன்மை. அன்றாட உலகம் அவித்யையால்தான் உருவாகி வருகிறது
  5. அத்யாஸம் : ஓர் உள்ளத்திலுள்ள முன்னறிவின் கூறு பின்னர் வரும் அறிதல்களில் படர்ந்து அதை அறிய உதவுவது. அத்யாஸம் வழியாகவே பிரபஞ்சம் அறியப்படுகிறது. அவித்யையின் ஓர் அடிப்படை அத்யாஸம் (உதாரணம் சிவப்பு உணவின் நிறம் என்பது மனிதனின் பிரக்ஞையில் இயற்கையில் இருந்தே வந்து முன்னறிவாக நீடிக்கும் ஒன்று. ஆகவே சிவப்பான ஒரு உலோகப்பொருளை அவன் இனிதானதாக உணர்கிறான்)
  6. அத்யாரோபம் : முன்னறிவை பின்னர் அறியும் அறிதல்கள்மேல் ஏற்றிக்கொள்வது. அத்யாஸம் என்பது அத்யாரோபத்திற்கு வழியமைக்கிறது (உதாரணம், உணவின் நிறம் சிவப்பு என்னும் முன்னறிவால் சிவப்பான ஒரு பொருளை எடுத்து மனிதக்குழந்தை உண்ண முயல்வது)
  7. அபவாதம் : இல்லாதவற்றை இருப்பதாக எண்ணிக்கொள்வது. அத்யாரோபம் அபவாதமாக ஆகிறது. இப்பிரபஞ்சம் உண்மையில் இல்லாத ஒன்றாயினும் உயிர்கள் அவற்றை இருப்பதாகவே உணர்கின்றன.
  8. ஃபாஸம்: இப்புடவி உண்மையில் உள்ளது என ஐம்புலன்களாலும், ஆறாவது புலனாகிய மனதாலும் எண்ணுவது. மாயையால் இவ்வுலகை படைத்துக்கொள்வது. அத்யாசம், அத்யாரோபம் ஆகியவற்றால் ஃபாஸம் நிகழ்கிறது.
  9. ஃபானம் : மாயையினால் உண்டு என உருவகிக்கப்படும் இவ்வுலகை பலப்பலவாக விரித்துக்கொள்வது ஃபானம். ஃபானம் என்பது சம்ஸ்கிருதத்தில் ஒரு கூட்டுநாடக வடிவம். கேலிக்கூத்துத்தன்மையையும் அடையும். இங்கே இச்சொல் இப்பிரபஞ்சம் கற்பனையால் முடிவில்லாமல் விரிந்து கொள்வதைச் சுட்டுகிறது
  10. சாமான்யம்- விசேஷம் : ஓர் உண்மை அன்றாடதளத்தில் இருக்கும் நிலை சாமான்யம். அதுவே தத்துவதளத்தில், யோகவிழிப்பில், மெய்ஞான தளத்தில் இருக்கும் நிலை விசேஷம். இப்பிரபஞ்சமும் உலகமும் உண்மையில் உள்ளது என்பதும், அதன் அனுபவங்களும் சாமான்ய தளம். இவை மாயையே என்பதும், பிரம்மமே உண்மையிலுள்ளது என்பதும் விசேஷ தளம்.
  11. முமுக்க்ஷு : ஞானசாதகன். பிரம்மஞானத்தின் பொருட்டு வாழ்க்கையை அளித்தவன். பிரம்மஞானத்தின் பாதையில் இருப்பவன். யோகி, பக்தன், வேள்வி செய்யும் ஹோதா, தவம் செய்யும் ரிஷி ஆகிய பல உருவகங்களுக்கு மாற்றாக தூயஞானத்தின் பாதையில் வீடுபேறுநோக்கிச் செல்பவன் என்னும் பொருளில் சங்கரர் இச்சொல்லை பயன்படுத்தினார்.
  12. அகங்காரம்: அகம் என்றால் தான். அகங்காரம் என்றால் தான் எனும் உணர்வு. அத்வைத வேதாந்தத்தில் அனைத்து உலகியல் அறிதல்களுக்கும் அடிப்படையாக இருப்பதும், அறிதல்களில் இருந்து அறிவு என்பதை அடைவதும், அறிவு என தன்னை தொகுத்துக்கொள்வதும் அகங்காரமே. அவித்யையே சாமானியனிடம் அகங்காரமாகிறது. அகங்காரமே அத்யாசமாகிறது. அத்யாரோபமாக ஆகி இப்பிரபஞ்சமெனும் பொய்மையை உருவாக்கி அவனுக்கு அளிக்கிறது.அகங்காரத்தை கடத்தலே பிரம்மஞானத்தை அடைவதற்கான பயிற்சியாகும்.
  13. நிர்வாணம்: நிர்வாணம் என்பது பௌத்தக் கலைச்சொல். வீடுபேறு அடையும் நிலை. நிர்வாணம் என்பது அனைத்தையும் உதிர்த்துவிட்ட நிலை என்று பொருள். மாயையையும், அதன் விளைவான ஃபாஸம் ஃபானம் ஆகியவற்றையும் உதிர்த்து ஞானத்தை அடைந்து விடுதலைகொள்வதே நிர்வாணமாகும்.

அடிப்படைக் கருத்துக்கள்

அத்வைதத்தின் அடிப்படைக் கருத்துக்களை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம். தன் நூல்களில் இக்கருத்துக்களை சங்கரர் சொல்கிறார்

  • அழிவற்றதும் தூயதும் பேரறிவானதும் அனைத்திலுமிருந்து அப்பாற்பட்டதும் அனைத்துமானதும் அனைத்தாற்றல் கொண்டதுமான பிரம்மம் என்பது உண்டு (12 )
  • புலன்களுக்குச் சிக்குவது பருவடிவ பிரபஞ்சமே. பிரம்மம் காரியம், பிரபஞ்சம் காரணம். இந்தக் காரணகாரிய உறவில் காரியமே நமக்கு அறியக்கிடைக்கிறது. காரியத்தில் இருந்து காரணத்தை உய்த்துணரவே முடிகிறது. அதை அனுமானம் எனலாம். அந்த அனுமானத்திற்கு ஆதாரம் முன்னறிவு. சுருதி எனப்படும் வேதச்சொல் ஒரு அதிகாரபூர்வ முன்னறிவு.
  • பிரம்மத்தை அறிந்தால் பிற எல்லாமே அறியப்படலாகும் என உபநிடதங்கள் சொல்கின்றன. பிரம்மம் ஒன்றே அறியத்தக்கதும் அறியக்கூடுவதுமான உண்மை என்பதற்கு அது சான்று. (சாந்தோக்ய உபநிடதம் சான்று காட்டப்படுகிறது)
  • உடல் முதலியவை அவித்யை என்னும் அறியாமையின் உருவாக்கங்கள். நீர்க்குமிழிகள் போல அவை நிலையற்றவை. மெய்ஞானத்தின் வழியாக ’தூய பிரம்மமே நான்; என்னும் தன்னுணர்வை அடைவதே வீடுபேறு ( 11)

சங்கரரின் வரிகள்

சங்கரர் மூலநூல்களுக்கு எழுதிய உரைகள், மற்றும் அவருடைய வேதாந்த நூல்களில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுவரும் சில வரிகள் உள்ளன. அவை சங்கரரின் தரப்பை அறிய உதவியானவை.

  • பிரம்மமே சத்யம், பிரபஞ்சம் மாயை. உயிரே பிரம்மம், வேறொன்றுமில்லை (பிரம்ம சத்ய, ஜகன்மித்ய, ஜீவோ பிரம்மைவ நா பர: ( 4)
  • பிறப்புகளை தோற்றுவிப்பதே அது (ஜன்மாத்யஸ்ய யத:) (14)
  • புடவியென இங்குள்ளவையெல்லாம் பிரம்மம் மட்டுமே (பிரம்மைவேதம் விஸ்வம் சமஸ்தம் இதம் ஜகத்) ( 5)
  • அழியாதவையும் அழிபவையுமானவற்றை பிரித்தறிக, இகத்திலும் பரத்திலும் செயல்களின் விளைவென அமையும் அனுபவங்களில் விலக்கம் கொள்க. மனதையும் புலன்களையும் ஆட்சி செய்க. வீடுபேறுக்கான நோன்புகொள்க. ( நித்யாநித்ய வஸ்துவிவேக: இஹாமுத்ரார்த்தபோகவிராக: சமதமாதி சாதன சம்பத் முமுக்‌ஷுத்வம் ச) (7)
  • யோகத்தாலோ சாங்கியத்தாலோ மதச்செயல்களாலோ வெறும் கல்வியாலோ வீடுபேறடைவது இயல்வதல்ல .பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயெனும் ஞானத்தை அடைவதன்றி வேறு வழியில்லை (ந யோகேன ந சாம்க்யேன கர்மணா நோ ந வித்யா பிரஹ்மாத்மைகத்வயோகேன மோக்ஷ: ஸித்யாயதி நான்யதா) (8)

சங்கரரின் உவமைகள்

அத்வைதத்திற்கு சங்கரர் சில உவமைகளைப் பயன்படுத்துகிறார். அத்வைதம் என்பது அகவயமான கொள்கை என்பதனால் அதை உவமை (உபமானப் பிரமாணம்) வழியாக நிறுவலாம் என்பது நியாயவியல் சார்ந்த நெறிமுறை. சங்கரர் பயன்படுத்தும் உவமைகள் பலவும் முன்பே வேதாந்திகளாலும் பௌத்தர்களாலும் பயன்படுத்தப்பட்டவை

  • கயிற்றரவு: சங்கரர் கயிறா பாம்பா என்னும் உளமயக்கை இப்பிரபஞ்சத்தை உண்மை என நம்பி மயங்குவதன் உதாரணமாகக் குறிப்பிடுகிறார்
  • குடவானம் - விரிவானம் (குடாகாசம் மடாகாசம்). ஜீவாத்மா பரமாத்மா உறவுக்கு சங்கரர் இந்த உவமையை பயன்படுத்துகிறார்
  • தாமரையிலை நீர் : உயிரிநிலையாமைக்குச் சங்கரர் பயன்படுத்தும் உவமை. தாமரையிலை மேல் நீர்த்துளி ஒளிகொண்டு இருக்கிறது. மானுடவாழ்க்கை அதைப்போல தற்காலிக ஒளிகொண்டது (நளிநீ தலகத ஜலமதி தரளம், தத்வத் ஜீவனம் அதிசய சஃபலம்)
  • வயலும் நீரும் : வயலில் தேங்கும் நீர் வயலின் சதுரம், நீள்சதுரம் போன்ற அமைப்பை கொள்வதுபோல பிரம்மம் பொருட்களில் அவ்வடிவை அடைகிறது
  • கடலும் அலையும்: கடலில் அலைகள் உருவாகின்றன. அலைகளையும் துளிகளையுமே காணமுடிகிறது. ஆனால் அவை கடல் என்னும் முடிவிலியின் ஒரு தோற்றமே. அதைப்போலத்தான் பிரம்மம் பிரபஞ்சமாகவும் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது. (12 )
  • முத்துச்சிப்பி- வெள்ளி. முத்துச்சிப்பியை மணலில் காண்கையில் அது வெள்ளி என தோற்றம் அளிக்கிறது. (பிரபஞ்சம் பிரம்மம் என தோற்றமளிக்கிறது)
  • பொன்னும் நகையும் : பொன்னை நகைகளாக ஆக்கும்போது அதில் வெவ்வேறு வடிவங்களும் அழகுகளும் பயன்களும் உருவாகின்றன. அவற்றை நகைகளாகவே பார்க்கிறோம். ஆனால் அவற்றின் மதிப்பு பொன் என்பதே. (பிரம்மம் பிரபஞ்சமாக ஆவதன் உவமை)

உட்பிரிவுகள்

அத்வைதத்தின் மூலநூல்களாகிய சங்கரரின் உரைகளையும், நூல்களையும் அவருடைய மாணவர்களும், அவர் வழிவந்தவர்களும் விளக்க முற்பட்டபோது வெவ்வேறு சிந்தனைமுறைகள் உருவாகி வந்தன. அவற்றில் இரண்டு

அமைப்புகள்

சங்கரர் அத்வைதத்தை நிலைநாட்டுவதற்காக நான்கு முதன்மை மடங்களை நிறுவினார் என்று பிற்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. இச்செய்தியை சங்கரரின் வாழ்க்கையைப் பற்றி பின்னாளில் எழுதப்பட்ட நூலான சங்கர திக்விஜயம் குறிப்பிடுகிறது.. இந்த மடங்களுடன் காஞ்சி மடம் உட்பட பிற மடங்களும் உள்ளன. இவை சங்கரரின் அத்வைத தரிசனத்தை இந்து மதப்பிரிவுகளின் வழிபாடுகளுடன் இணைத்து அவற்றின் மையத்தத்துவமாக நிலைநிறுத்தின.

  • சிருங்கேரி (தெற்கு)
  • கேதார்நாத் (வடக்கு)
  • புரி (கிழக்கு)
  • துவாரகை (மேற்கு)

மறுப்புகள்

உசாத்துணை

குறிப்புகள்

Sthaneshwar Timalsina Purusavada

வைராக்ய சதகம் மூலமும் பொழிப்புரையும் இணையநூலகம்

சங்கரர் பிரம்மசூத்திர பாஷ்யம் பகுதி 1/1,2

4 விவேகசூடாமணி, பிரம்மஞானவல்லரிமாலா

5 மனீஷாபஞ்சகம் (manIShApanchakam oline)

6 பிரம்மசூத்திர பாஷ்யம் பகுதி 2/1.3

7 பிரம்மசூத்ர பாஷ்யம் (பகுதி 1/1-1)

8 விவேகசூடாமணி 5, 58

ஆத்மபோதம். சங்கரர்

பிரம்மசூத்ர பாஷ்யம் பகுதி 2/1-3

12 பிரம்மசூத்ரபாஷ்யம் பகுதி 1/1-2

14 விவேகசூடாமணி