மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்)
மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) இந்திய தத்துவ மரபில், வேதாந்த சிந்தனை முறையிலுள்ள மூன்று தத்துவ இயக்கங்கள். பிரஸ்தானத்ரயி என இவை அழைக்கப்படுகின்றன. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவை இந்த மூன்று தத்துவ அமைப்புகள். இவை தத்துவத்ரயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
அமைப்பு
இந்திய தத்துவ மூலநூல்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. சுருதி பிரஸ்தானம், நியாயப்பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம். இவையே முறையே மூன்று தத்துவ அமைப்புகள் அல்லது இயக்கங்கள்.
சுருதி பிரஸ்தானம்
வேதங்களுக்குப் பின்னர் உருவானவையே தத்துவநூல்கள். வேதங்கள் சுருதி எனப்படுகின்றன. வேதங்கள் சுருதி எனப்படுவதற்கான காரணங்கள் இவை. இறைச்சக்திகளிடமிருந்து நேரடியாக பெறப்பட்டவை, எழுதப்படாமல் செவிவழியாகவே நிலைகொள்பவை, மாற்றமற்ற உண்மைகளைச் சொல்லும் அடிப்படை நூல்கள். தத்துவநூல்களுக்குள் உபநிடதங்கள் சுருதிகள் எனப்படுகின்றன. பிரம்மசூத்திரம் போன்ற நூல்களிலேயே உபநிடதங்கள் சப்தம் (சுருதி) என்று சொல்லப்பட்டுள்ளன. உபநிடதங்களை தத்துவத்துள் மூலநூல் இயக்கம் (சுருதி பிரஸ்தானம் ) என்பது வழக்கம்.
நியாயப் பிரஸ்தானம்
பிரம்ம சூத்திரம் உபநிடதங்கள் சொல்வனவற்றை வகுத்து கொள்கைகளாக்கி, ஒற்றைவரிச் சூத்திரங்களாக அளிக்கும் தத்துவநூல். இது சாங்கியம் உள்ளிட்ட பிற நூல்களுடன் விவாதிப்பது. ஆகவே தர்க்கம் சார்ந்தது என்னும் பொருளில் இது நியாயப் பிரஸ்தானம் என அழைக்கப்படுகிறது. பிரம்மசூத்திரம் போன்ற பிற நூல்கள் இருந்திருக்கலாம். பிரம்மசூத்திரத்தை ஒட்டி அதன் உரையாகவும், விரிவாக்கமாகவும் வேறு நூல்கள் உள்ளன. அவற்றை தர்க்க இயக்கம் (நியாயப் பிரஸ்தானம்) என்பது வழக்கம்.
நியாயம் என்பது தர்க்கவியல். அது ஆறு தரிசனங்களில் ஒன்று. நியாயவியலின் வழிமுறைகளை பிரம்மசூத்திரம் கடைப்பிடிப்பதனால் இது நியாயப் பிரஸ்தானம் எனப்பட்டது.
ஸ்மிருதி பிரஸ்தானம்
மூலநூல்களை ஒட்டி, விரிவாக்கி எழுதப்படும் நூல்களே ஸ்மிருதிகள். பின்னர் நெறிநூல்களுக்கு இப்பெயர் அமைந்தது. தத்துவத்தில் இருந்து வாழ்க்கைக்கான வழிகாட்டலை திரட்டி முன்வைக்கும் நூலே பொதுவாக ஸ்மிருதி எனப்படுகிறது. பகவத் கீதை அத்தகைய படைப்பு. அது உபநிடதங்களின் அதே அமைப்புகொண்டது. அதையும் உபநிடதம் எனலாம். ஆனால் அது உபநிடதங்களின் வழிநூல். வழிகாட்டிநூலும் கூட. மகாபாரதத்திலுள்ள பீஷ்ம நீதி, விதுர நீதி போன்றவையும் ஸ்மிருதிகள் என்றே சொல்லப்படுகின்றன. கீதையையும் அதையொட்டிய மற்ற நூல்களையும் நெறிநூல் இயக்கம் அல்லது வழிநூல் இயக்கம் (ஸ்மிருதி பிரஸ்தானம்) என்பார்கள்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2025, 08:15:31 IST