பெரி. சிவனடியான்
பெரி. சிவனடியான் (செப்டம்பர் 07, 1929 - மார்ச் 19, 2004) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர். சிறார்களுக்கான படைப்புகளையும் எழுதினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
பெரி. சிவனடியான், செப்டம்பர் 07, 1929 அன்று, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வீரசேகரபுரத்தில், சிவ. பெரியண்ணன் - பெரி. விசாலாட்சி இணையருக்குப் பிறந்தார். கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். புதுவயலில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாசாலையில் தொடக்கக் கல்வி கற்றார். கண்டனூர் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி படித்தார். 1948-ல், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை வகுப்புப் பயின்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
பெரி.சிவனடியான், 1955-ல், பொள்ளாச்சியில் உள்ள எரிசினம்பட்டி காந்தி கலா நிலைய உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓயு பெற்றார்.
ஜூன் 08, 1958-ல், செல்வமணியை மணம் செய்துகொண்டார். மகன்: பெரியணன். மகள்கள்: விசாலாட்சி, தெய்வானை.
இலக்கிய வாழ்க்கை
பெரி. சிவனடியான், ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது தனது பள்ளி ஆசிரியரும் கவிஞருமான ஜான் ஸ்டீஃபன் மூலம் கவிதை ஆர்வம் கைவரப் பெற்றார். திருவள்ளுவர், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோரைத் தனது கவிதை முன்னோடிகளாகக் கொண்டார். முதல் கவிதை 'குமரன்' இதழில் வெளியானது. சொ. முருகப்பா அக்கவிதையை வெளியிட்டு சிவனடியானை ஊக்கப்படுத்தினார். நண்பர் தேனப்பன் நடத்திவந்த 'எழில்' என்ற கையெழுத்து இதழில் பல கவிதைகளை எழுதினார். தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த 'பொன்னி' இதழில் பல கவிதைகளை எழுதினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
எழில், அருவி, அழகு, வாழ்க்கை, கலை, கலைமன்றம், தென்றல், தென்றல் திரை, மாதவி, இனமுழக்கம், தமிழ்ச்செய்தி, கண்ணதாசன், முல்லைச்சரம், திராவிட நாடு போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். இசைப் பாடல்கள் பலவற்றை எழுதினார். அவை குறுந்தகடுகளாக வெளியாகின.
ஹிந்தி எதிர்ப்புக் கவிதைகள் பலவற்றை எழுதினார். தமிழின மீட்சி இயக்கத்திற்காகப் பல பாடல்களை எழுதினார். தொடக்க காலத்தில் நாத்திகராக இருந்தபோது இறைவனை நிந்தித்தும் பின்னர் ஆன்மிகவாதியாகப் பரிணமித்போது இறைவனைப் போற்றியும் பல பாடல்களை எழுதினார்.
மேடையுரை
பெரி. சிவனடியான் சொற்பொழிவாளராகவும், கவி ஆளுமையாகவும் பல மேடைகளில் பங்குபெற்றார். பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். பட்டிமன்றப் பேச்சாளராகவும், நடுவராகவும் செயல்பட்டார். பல ஆன்மிக நிகழ்வுகளில் சிறப்புரையாற்றினார். 500-க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
பெரி. சிவனடியான், 1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்குபெற்றார். 1995-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நாடகம்
பெரி.சிவனடியான நாடக ஆசிரியராகவும், நாடக இயக்குநராகவும் செயல்பட்டார். 'அவளுக்காக' என்ற நாடகத்தை எழுதினார். இந்நாடகமே 14, 1951-ல், புதுவயல் ஸ்ரீ சரஸ்வதி சங்க நாடகக் குழுவினரால் அரு. ராமநாதன் முன்னிலையில் அரங்கேற்றமானது. தொடர்ந்து இந்நாடகம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பம்பாய், கல்கத்தா, மலேசியா போன்ற பகுதிகளிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
விருதுகள்
- திருப்பனந்தாள் பாவலர் மன்றம் வழங்கிய 'சிந்தனைக் கவிஞர்' பட்டம்
- மதுராந்தகம் குருபழநி ஆதீனம் வழங்கிய 'கவிஞரேறு' பட்டம்
- தமிழக அரசு வழங்கிய 'திருக்குறள் நெறித்தோன்றல்' விருது
- தமிழக அரசின் பாவேந்தர் விருது
மறைவு
பெரி.சிவனடியான், மார்ச் 19, 2004 அன்று காலமானார்.
நினைவு
பெரி.சிவனடியானின் வாழ்க்கை வரலாற்றை முனைவர். மு. பழனியப்பன் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து 2016-ல் வெளியிட்டது.
மதிப்பீடு
"சிவனடியான் சிவனடியான் என்கின் றாரே
சிவனுக்கோ இவனடியான்? இல்லை; இல்லை
இவன்பாடும் பாடல்களைச் சிவனும் கேட்பான் என்பதனால்
இவனுக்கே சிவன்அடியான்"
என்று கண்ணதாசன் சிவனடியானைப் புகழ்ந்துரைத்தார். பெரி. சிவனடியான், சமூகச் சிந்தனை சார்ந்த பல கவிதைகளை எழுதினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறியப்பட்டார். பிற்காலத்தில் பல தெய்வத் துதிகளையும், பாடல்களையும் எழுதினார். கல்வியாளர், பேச்சாளர், மரபுசார்ந்த இலக்கியப் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- அவளுக்காக (நாடகம்)
- வான்மதி (குறுங்காவியம்)
- சிவனடியான் கவியரங்கக் கவிதைகள்
- கனிக்குவியல்
- முருகாஞ்சலி
- சக்தி சரணங்கள்
- சக்தியும் மைந்தனும்
- அன்பு (கட்டுரைகள்)
- பரமகுருசுவாமி பதிகம்
- பெரி.சிவனடியான் கவிதைகள்
- அமராவதிப் புதூர் அருள்மிகு கருப்பர் வழிபாட்டுப் பாடல்கள்
- அருள்மிகு அய்யப்பன் சரணக்கோவை
- சக்தி விருத்தங்களும் சந்நிதி வெண்பாக்களும்
- முயல்வது மதி, முடிப்பது விதி (கட்டுரை நூல்)
- சக்கரை குருசுவாமியின் ஆன்மிக வாழ்வும் சபரிமலை பாதயாத்திரையும்
- பாடி ஆடு பாப்பா
- படிக்க நடிக்க சிறுவர் கதைப்பாட்டு
உசாத்துணை
- இருபதாம் நூற்றாண்டின் நூறு தமிழ்க்கவிஞர்கள், முனைவர் ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு; முதல் பதிப்பு: 2004.
- சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான், எழுத்தாக்கம்: முனைவர் மு. பழனியப்பன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2016.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2026, 06:34:39 IST