under review

கருணாகரன்

From Tamil Wiki
Revision as of 23:57, 11 October 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Normalized selected wikitext line breaks;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கருணாகரன்

கருணாகரன் (பிறப்பு: செப்டம்பர் 05,1963) தமிழில் எழுதிவரும் கவிஞர். ஈழத்தைச் சேர்ந்தவர். இலக்கிய இதழ்களில் பணியாற்றியவர். இலக்கியச் செயல்பாட்டாளர்.

பிறப்பு,கல்வி

கருணாகரன், கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி என்னும் கிராமத்தில் செப்டம்பர் 05, 1963-ம் ஆண்டு கந்தையா சிவராசா - சிவராசா சின்னையா சிவபாக்கியம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கருணாகரனின் இயற்பெயர் சிவராசா சிவகருணாகரன். கருணாகரனின் தந்தை வழி தாத்தா கந்தையா, பாட்டி செல்லம்மாபிள்ளை. அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டம் இடைக்காட்டைச் சேர்ந்தவர்கள். கருணாகரனின் தாய் வழி தாத்தா சின்னையா, பாட்டி கதிராசிபிள்ளை இயக்கச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

கருணாகரன் இயக்கச்சி அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் (இயக்கச்சி மகா வித்தியாலயம்) தொடக்கக் கல்வியையும், பளை மகா வித்தியாலயத்தில்(பளை மத்தியகல்லூரி) இடைநிலை கல்வியையும் படித்தார்.

தனிவாழ்க்கை

கருணாகரன் 1987-ம் ஆண்டு வசந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். ஹேமந்த்(1987) மற்றும் மகிழ்(1996) என இரு மகன்கள் உள்ளனர்.

இதழியல் பணி

கருணாகரன் 1984 முதல் 1987-ம் ஆண்டு வரை ஈழப்புரட்சி அமைப்பான ஈரோஸின் இதழான பொதுமை இதழில் பணியாற்றினார். பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கலை, இலக்கிய, சமூக இதழான வெளிச்சம் இதழில் 1991 முதல் 2003-ம் ஆண்டு வரை ஆசிரியராகப் பணி செய்தார். 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் செயல்பாடுகள்

கருணாகரன் 1980-ல் பள்ளியில் படிக்கும்போது இடதுசாரி அரசியலில் அறிமுகம் ஏற்பட்டது. 1982-ல் ஈழப்புரட்சி(ஈரோஸ்) அமைப்புடன் அறிமுகமானது. அந்த இயக்கத்தில் அரசியல், ஆயுதப் பயற்சி பெற்று போராளியாகச் செயல்பட்டார். இலங்கை - இந்திய உடன்படிக்கையை அடுத்து வந்த அரசியல் சூழலில் சற்றுத் தணிவான நிலை ஏற்பட்டது. ஆனாலும் சூழலின் நெருக்கடியால் தொடர்ந்து அமைப்பில் செயல்பட்டார்.

1990 ஜூனில் ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) இயக்கம் அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பாலகுமாரனால் அதிகார பூர்வமாகக் கலைக்கப்பட்டது. அதனோடு அரசியற் பணி, போராட்டப் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.

இலக்கிய வாழ்க்கை

கருணாகரன் தன் பள்ளிக் கல்விக் காலத்தில் இயக்கச்சியில் வசித்த இரத்தினசிங்கம், பத்மநாதன் ஆகியோரால் வாசிப்பில் ஈடுபாடு கொண்டார். முதல் கவிதை தினகரன் (கொழும்பு) பத்திரிகையில் 1981 இல் பிரசுரமானது. தொடர்ந்து நா.விசுவலிங்கம் மூலமாக மல்லிகை இதழில் எழுதினார். முதல் நேர்காணல் கவிதை இதழில் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்" மகிழ் பதிப்பகத்தின் வாயிலாக 1999 இல் வெளியிடப்பட்டது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்குச் செலுத்திய முன்னோடிகளாக டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கே. டானியல், நகுலன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2011 - கரை எழில் விருது (கரைச்சி கலாச்சாரப் பேரவை)
  • 2014 - மொழி விருது (தோப்பு இலக்கிய வட்டம்)
  • 2023 - அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசு (கடவுள் என்பது துரோகியாயிருத்தல்)
  • 2025 - சிறந்த கவிதை நூலுக்கான இயல் விருது (காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்)

இலக்கிய இடம்

கருணாகரனின் 'பலியாடு' கவிதைத் தொகுப்பை, "மீண்டும் மீண்டும் இக்கவிதைகள் அழிவின்முன் திகைத்து நிற்கும் கவிமனதின் சித்திரத்தை அளிக்கின்றன. இலக்கற்ற அழிவு. அழிவில் வினோத இன்பமொன்றைக் கண்டுகொண்ட மனங்கள் கொண்டாடும் அழிவு. அன்றாடக் கொலைகள், அழுத்தமிழந்துபோன குருதி, எவரும் கேட்காத கதறல்கள், மீட்பற்ற கைவிடப்படுதல்கள்...நுட்பங்களை நோக்கிச் செல்லாத நேரடியான அப்பட்டமான வரிகள் இவை. பலசமயம் புலம்பல்கள். சிலசமயம் மூர்க்கமான ஆவேசங்கள்.

கருணாகரனின் இக்கவிதைகளை போரழிவு குறித்து எழுதப்பட்ட பலநூறு ரத்தம் தோய்ந்த வரிகளில் இருந்து விலக்கி நிறுத்துவது அவரில் அவ்வப்போது மட்டும் கூடும் ஆழமான கவித்துவத்தின் மௌனம். வரலாற்று அலைகளினூடாக ரத்தம் பெருகிச்செல்லும் காட்சியைக் கண்டபிரமிப்பிலிருந்து எப்போதாவது மீளும்போது அவரது குரல் தனக்குள் அடங்கி அழுத்தமான சுயதரிசனமாக ஆகிறது." என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதை தொகுப்புகள்

  • ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் (மகிழ் - 1999)
  • ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள் (மகிழ் - 2003)
  • பலியாடு (வடலி - 2009)
  • எதுவுமல்ல எதுவும் (மகிழ் - 2010)
  • ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள் (கருப்புப்பிரதிகள் - 2012)
  • நெருப்பின் உதிரம் (மகிழ் - 2014)
  • இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் (காலச்சுவடு - 2015)
  • படுவான்கரைக் குறிப்புகள் (மகிழ் - 2015)
  • நினைவின் இறுதி நாள் (புது எழுத்து - 2020)
  • உலகின் முதல் ரகசியம் (புலம் - 2020)
  • கடவுள் என்பது துரோகியாயிருத்தல் (யாவரும் - 2021)
  • இரவின் தூரம் (நடு - 2021)
  • மௌனத்தின் மீது வேறொருவன் (தாயதி - 2021)
  • அருளப்பட்ட மீன் (பரிசல் - 2022)
  • காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள் (2024)

சிறுகதை தொகுப்புகள்

  • வேட்டைத்தோப்பு (கயல்கவின் 2014)

கட்டுரை தொகுப்புகள்

  • இப்படி ஒரு காலம் (கரைச்சி கலாச்சாரப்பேரவை - 2014)
  • அன்பின் திசைகள் (மகிழ்- 2018)
  • எதிர் (கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் - வேரல் புக்ஸ் - 2022)

நேர்காணல்

  • புகைப்படக்காரன் பொய் சொல்வதில்லை (எதிர் பதிப்பகம் - 2016)

தொகுப்பு நூல்கள்

  • வெளிச்சம் சிறுகதைகள்
  • வாசல் ஒவ்வொன்றும் (சிறுகதைகள்)
  • வெளிச்சம் கவிதைகள்
  • ஆனையிறவு கவிதைகள்
  • செம்மணி கவிதைகள்
  • எஸ்.போஸ் படைப்புகள்
  • அ.செ.மு (சில கதைகள்)

மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இவரது படைப்புகள்

  • 'இப்படி ஒரு காலம்' என்ற கட்டுரைத் தொகுப்பு Mathaga Wanniya (வன்னி நினைவுகள்) என்ற பெயரில் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:28:26 IST