under review

அரூ

From Tamil Wiki
Revision as of 12:35, 19 June 2026 by Ramya (talk | contribs) (→‎தொடக்கம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அரூ சின்னம்

அரூ (2018 - 2023) தமிழில் வெளிவந்த கனவுருப்புனைவு (speculative fiction) காலாண்டு மின்னிதழ். சிங்கப்பூரில் வசிக்கும் ராம்சந்தர், சுஜா செல்லப்பன், பெல்ஜியத்தில் வசிக்கும் நா.பாலா ஆகியோரின் ஆசிரியத்துவத்தில் வெளியானது.

தொடக்கம்

அரூ மின்னிதழ் அக்டோபர் 2018-ல் துவங்கப்பட்டது. சிங்கப்பூரில் வசிக்கும் ராம்சந்தர், சுஜா செல்லப்பன் பெல்ஜியத்தில் வசிக்கும் நா.பாலா ஆகியோர் அரு மின்னிதழின் ஆசிரியர்களாக இருந்தனர். சிங்கப்பூர்த் தங்கமீன் வாசகர் வட்டத்தின் மாதாந்திர சந்திப்புகளின் வழி நண்பர்களாகிய இம்மூவரும் தமிழ் இலக்கியத்தில் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கும் எண்ணத்துடன் அரூ இதழை நிறுவினர்.

அரூ என்கிற பெயர் 'அரூபத்தின்' சுருங்கிய வடிவம். "தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த 'அரூ'. நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் போன்றதொரு முயற்சிதான்," என்று அரூ இதழின் அறிமுகப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கம்

கனவுருப்புனைவை (speculative fiction) மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட மின்னிதழ். தமிழில் அறிவியல் புனைவு (science fiction) மற்றும் மிகுபுனைவு (fantasy) சார்ந்த படைப்புகளை வெளியிடும் நோக்கத்துடன் இவ்விதழ் உருவாக்கப்பட்டது.

உள்ளடக்கம்

அரூ கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், கட்டுரைகள், மொழியாக்கங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், வரைகதை எனப் பல்வகைக் கலை வடிவங்களுக்குமான களமாகச் செயல்பட்டது. சுயாதீனமாகச் செயல்பட்ட இவ்விதழில் பல நாடுகளிலிருந்தும் சுமார் 150 படைப்பாளிகளின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. கவிதை, உலக சினிமா, உலக இலக்கியம் குறித்துக் கட்டுரைத் தொடர்களும் ஓவியத்தொடர்களும் வெளியாகின. புனைவு, கவிதை, நாடகம், வரைகதை, ஓவியம், சினிமா போன்ற பல்வேறு கலைகளைக் குறித்தும் பல விரிவான நேர்காணல்கள் அரூவில் வெளியாகியுள்ளன. ஆங்கிலத்தில் செய்யப்பட்ட சில நேர்காணல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

செயல்பாடுகள்

அறிவியல் புனைவு

அரூவில் 80-க்கும் மேற்பட்ட கனவுருப்புனைவு சிறுகதைகளும் குறுங்கதைகளும் வெளியாகியுள்ளன. நாஞ்சில் நாடன், அம்பை, யுவன் சந்திரசேகர், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற மூத்த எழுத்தாளர்களின் கனவுருப்புனைவுகள் இவ்விதழில் பிரசுரமாகின. அரூவில் எழுதிய இளம் எழுத்தாளர்கள் பலரும் பின்னர் கனவுருப்புனைவு தொகுப்புகளை வெளியிட்டனர்.

அரூ அறிவியல் சிறுகதை போட்டி

தமிழில் அறிவியல் புனைவை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2019-ல் துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர் மற்றும் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு கதை நடுவராலும் மற்றொரு கதை அரூ குழுவாலும் பரிசுக்குத் தேர்வுசெய்யப்பட்டது.

நேர்காணல்கள்

புனைவு, கவிதை, நாடகம், வரைகதை, ஓவியம், சினிமா போன்ற பல்வேறு கலைகளைக் குறித்தும் பல விரிவான நேர்காணல்கள் அரூவில் வெளியாகியுள்ளன.

வரைகலை

ஒவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஓவியத்தொடர், சிங்கப்பூர் எழுத்தாளரும் ஓவியருமான க்வீ லீ சுவிவின் 'அடாசு கவிதை' வரைகதைத்தொடர், கவிஞர் தேவதேவனின் 'கவிதையின் மதம்' கட்டுரைத்தொடர், எழுத்தாளர் கணேஷ் பாபுவின் 'திரைகடலுக்கு அப்பால்' கட்டுரைத்தொடர் போன்றவை இவ்விதழில் தொடர்ந்து வெளிவந்தன. அரூவில் வெளிவந்த கவிஞர் தேவதேவனின் கவிதை குறித்த கட்டுரைத் தொடர் பின்பு 'கவிதையின் மதம்' என்கிற அச்சுத்தொகுப்பாகவும் தன்னறம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

அரூ 4வது நூல்
நூல் பதிப்பு
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 2019 எழுத்து பிரசுரம் - 2019-ல் நடந்த முதல் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கதைகளின் தொகுப்பு. முன்னுரை: ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன். படைப்பாளிகள்: அஜீக், நகுல்வசன், தன்ராஜ் மணி, கே. பாலமுருகன், கோ. கமலக்கண்ணன், சுசித்ரா, ரா.கிரிதரன், ரூபியா ரிஷி, கிரிதரன் கவிராஜா, பெரு. விஷ்ணுகுமார்.
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 (எழுத்து பிரசுரம்) - 2020-ல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் தொகுப்பு. முன்னுரை: சாரு நிவேதிதா, படைப்பாளிகள்: கோ. கமலக்கண்ணன், கவிஜி, சத்யானந்தன், தன்ராஜ் மணி, நிவேதினி நாகராஜன், கே. பாலமுருகன், பார்கவி, பிரபாகரன் சண்முகநாதன், மாயா, க. முரளிதரன், மௌனன் யாத்ரிகா, யவனிகா ஶ்ரீராம், ஆர். ராகவேந்திரன், விஜய ராவணன், லெ. ரா. வைரவன்.
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 2021 (எழுத்து பிரசுரம்) - 2021-ல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளின் தொகுப்பு. முன்னுரை: யுவன் சந்திரசேகர், சரவணன் விவேகானந்தன். படைப்பாளிகள்: கமலதேவி, சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி, சுசித்ரா, பிரபாகரன் சண்முகநாதன், முரளிதரன், லோகேஷ் ரகுராமன், வளன், விஜய் வேல்துரை, விஜய ராவணன், விஸ்வநாதன் மகாலிங்கம், வேணு தயாநிதி.
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 4 (எழுத்து பிரசுரம்) - 2023-ல் நடந்த அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் தொகுப்பு. முன்னுரை: பாலசுப்ரமணியன் பொன்ராஜ். படைப்பாளிகள்: வெற்றிராஜா, ஜெகன்மித்ரா, தருணாதித்தன், நகுல்வசன், கேஷவ், ரம்யா, ரகு ராமன், மாயா, பெரு.விஷ்ணுகுமார், ராம்பிரசாத், கே.பாலமுருகன், மதிஅழகன் பழனிச்சாமி, ஆர்.ராகவேந்திரன், விசயநரசிம்மன், கார்த்திகேயன்.

இலக்கிய இடம்

தமிழில் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவு இலக்கியத்தை முன்னெடுப்பதில் அரூ இதழின் பங்கு குறிப்பிடத்தக்கது. 2018-க்குப் பிறகு தமிழில் அறிவியல் புனைவுக்கான வாசகர் வட்டம் விரிவடைந்தது. அரூ போட்டிகள் வழி புதிய படைப்பாளிகள் தோன்றினர். நூல் பதிப்புகள் வழி தரமான அறிவியல் புனைவுகள் பரவலான வாசகர்களை அடைந்தன.

கட்டுரைகள், நேர்காணல்கள் வழி அறிவியல் புனைவு குறித்த உரையாடல்களை அரூ முன்னெடுத்தது. கடந்த 20 ஆண்டுகளில், "தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல்" நிகழ அரூவின் அறிவியல் புனைவு முன்னெடுப்புகள் உதவியுள்ளதாக எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

"நூற்றைம்பது ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில், ஊகப்புனைவு என்ற வகைமையை ஒரு புதுப்பரிமாணமாகச் சேர்த்துக் கொண்டிருக்கும் 'அரூ' மின்னிதழ்க் குழுமத்தின் தொண்டு உண்மையாகவே போற்றற்குரியது" என சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் குறிப்பிட்டுள்ளார்.

இதழ் நிறுத்தம்

மே 2023-இல் வெளியான 16-வது இதழைத் தொடர்ந்து இவ்விதழ் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2026, 10:49:50 IST