பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்
- பொன்ராஜ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொன்ராஜ் (பெயர் பட்டியல்)
- பாலசுப்பிரமணியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலசுப்பிரமணியன் (பெயர் பட்டியல்)
பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் (நவம்பர் 22, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தொடர்ந்து கதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
பாலசுப்பிரமணியன் பொள்ளாச்சியில் பொன்ராஜ், சரஸ்வதி இணையருக்கு நவம்பர் 22, 1979-ல் பிறந்தார். ஒத்தக்கால் மண்டபத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப்படிப்பை முடித்தார். தனியார் வங்கியில் மேலாளராகப் பணி புரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் ஜோர்ஜ் லூயி போர்கேஸ், ஹெர்மன் மெல்வில், புதுமைப்பித்தன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார். அவரது முதல் படைப்பு ஆனந்த விகடனில் 2007-ல் வெளிவந்த 'ஆப்பிள்' என்னும் சிறுகதை. ’கனவு மிருகம்’, ’துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இரு புனைவுத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இதற்குப் பின்னர் கல்குதிரையில் 'பிரமிடுகளை அளக்கும் தவளை’ வெளியானது.
பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் கவிதைகளும் எழுதியுள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் அறிவியல், தத்துவம் , இசை, சினிமா, ஓவியம் ஆகியவற்றின் பல்வேறு புதிய புலங்கள் என பல தளங்களில் பரிச்சயமும் உள்ளவர்.
இலக்கிய இடம்
"வாசிப்பினூடாக அறிவியல், தத்துவம், வரலாறு, என சகல அறிவுத்துறைகளோடும் மேலும் நுகர்வியத்தின் புதிய பண்பாட்டு மற்றும் அறிவுக் களங்களோடும் மூர்ச்சிக்கும் புனைவுச் சாகசங்களை பாலசுப்ரமணியத்தின் புனைவுகள் பரிசோதிக்கின்றன. ’அறிவார்த்தம், பரிசோதனை, கனவுத்தன்மை, புனைவதீதம், தடையற்ற சுதந்திரம்’ இக்கதைகளின் தன்னியல்பான அழகுகள். பழமையடைந்து வரும் 'அன்பு’, ’நீதியியல்’ போன்றவற்றின் காலாவதித் தேதியை அறிவித்தபடி, வரலாற்றால் ஒட்டுமொத்தமாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் மனிதனை அவனது உயிர்க்கூறான வேட்கை, வன்முறை, நுகர்விச்சை, இயல்பூக்கங்களோடு அவை பரிசீலிக்கின்றன." என பிரவீண் பஃறுளி, ராஜாஜி, கார்த்திக் பாலசுப்பிரமணியன், சிவசெந்தில்நாதன் ஆகியோர் மதிப்பிடுகின்றனர்.
நூல் பட்டியல்
- கனவு மிருகம்
- துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
- பிரமிடுகளை அளக்கும் தவளை
வெளி இணைப்புகள்
- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்: நேர்காணல்: வனம்
- காதலிழந்த காலத்தின் இசை: கவிதை: கனலி
- பாலசுப்ரமணியன் பொன்ராஜுடன் ஒரு நேர்முகம்: நரோபா: பதாகை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Jul-2024, 09:57:53 IST