under review

ஒருசிறைப் பெரியனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஒருசிறைப் பெரியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்றும் முறையே ஒரு பாடல் வீதம் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

ஒருசிறைப் பெரியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் சில ஏடுகளில் ஒருசிறைப் பெயரினர் என்றும் ஒருசிறைப் பெரியன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

ஒருசிறைப் பெரியனார் பாடிய பாடல்கள் நற்றிணை(121), குறுந்தொகை( 272) மற்றும் புறநானூறில்(137) இடம்பெற்றுள்ளன. நற்றிணை 121-ம் பாடல் தலைவியை பிரிந்ததனால் துயருற்று திரும்பி வந்துக்கொண்டிருக்கும் தலைவனிடம் வருத்தமுற வேண்டாம் விரைந்து தேரை செலுத்தி இல்லம் சேர்வோம் என தேர்ப்பாகன் கூறுவதாக முல்லைத் திணையில் அமைந்துள்ளது. குறுந்தொகை 272-ம் பாடல் ஆறுதல் கூறிய தோழனிடம் தலைவியின் தமையன்மார் பால் தான் கொண்டிருக்கும் அச்சத்தை தலைவன் கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. புறநானூறு 137-ம் பாடல் நாஞ்சில் வள்ளுவன் என்னும் சிற்றரசனின் குலச்சிறப்பையும் படைவளத்தையும் நாட்டுவளத்தையும் புகழ்ந்து பாடுவதாக பாடாண் திணையில் இயன்மொழி துறையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை - 121
  • காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தி எரித்து விவசாயத்திற்கு தேவையான நிலத்தை உருவாக்குவர். அந்நிலங்களை முதையல் என அழைப்பர். முல்லை நில மக்கள் முதையல் நிலத்தில் வரகு விதைகளை உழுது விதைத்து பயிர் செய்வர். வரகு பயிர்கள் ஈரிலை விட்டு முளைத்து வளமாக விளைந்திருக்கும்.
  • வரகு பயிர்களைத் தின்னும் பெண் மானைத் தேடிவந்து ஆண் மான் அதனோடு கூடி இன்பம் துய்க்கும்.
  • போர் முடிந்து தம் மனைவியரைக் காணவரும் ஆடவர் காட்டாற்று பாதைகளை கடந்து வருவது இயல்பு. அவர்களுக்கு மனைவியர் இல்லத்தில் இரவுணவை விருந்து வைத்து கணவருடன் கூடி மகிழ்வர்.
குறுந்தொகை - 272
  • குறிஞ்சி நிலத்தில் மான்களை வேட்டையாடுவதற்காக சீழ்க்கையொலி எழுப்பி, கற்களை வீசி மான் கூட்டத்தை கலைந்து போகச் செய்வர். அப்படிப் பெண்மானை பிரிந்து தனித்தோடும் ஆண் மான் மேல் அம்பு எய்து கொன்று இறைச்சியை எடுத்து செல்வர். தலைவியின் தமையன்மார் அத்தகு இயல்பு கொண்டோர் என சொல்லப்பட்டுள்ளது.
  • உவமை: தலைவியின் கண்கள் மானை கொல்லும் அம்புகளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
புறநானூறு - 137
  • நாஞ்சில் நாடு பெரிய மலைகளும் சிறிய அருவிகளும் சூழப்பெற்ற வளம்மிக்க பகுதி. அங்கே கோடைக்காலத்தில் வெப்பம் மிகுந்திருந்தாலும் மழையும் பெய்வதால் குளங்களில் மலர்கள் பூத்து நிறைந்திருக்கும். வேங்கை மரங்கள் பூத்து குலுங்கும். வேங்கை மலர்களின் மகரந்தங்கள் ஆற்று நீரால் கடலுக்கு கொண்டு செல்லப்படும்.
  • நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்த விதைகள் வறட்சியால் சாகாது. கரும்பைப் போல் தழைத்து வளரும். நாஞ்சில் வள்ளுவனை தேடிவந்த இரவலரும் அதுபோல் பயன்பெறுவர். எனவே நாஞ்சில் வள்ளுவனும் அவனது பெற்றோரும் வாழ்த்தப்பட்டுள்ளனர்.
  • பெருமுரசுகளையும் யானைப்படையையும் கொண்டு கடல்வரை தமது நாட்டின் எல்லையை விரிவுப்படுத்தி உள்ள மூவேந்தரைப் பாடாது நாஞ்சில் வள்ளுவனைப் போற்றுவதன் மூலம் அவனது சிறப்பு கூறப்படுகிறது.
  • உவமைகள்: குளங்களில் மலர்ந்த மலர்கள் பெண்களின் கண்ணுக்கும் ஆற்று நீரின் நிறம் நீலமணிக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது.

பாடல் நடை

நற்றிணை - 121

  • திணை: முல்லை
  • கூற்று: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது

விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே:
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய,
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!

குறுந்தொகை - 272

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: கழறிய(இடித்துரைத்த)பாங்கற்குக் கிழவன்(தலைவன்)உரைத்தது.

தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட
வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்கண்
நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.

புறநானூறு - 137

  • திணை: பாடாண் திணை
  • துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2025, 10:55:36 IST