under review

இராசராச சோழன் உலா

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராஜராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜராஜன் (பெயர் பட்டியல்)

இராசராச சோழன் உலா (12-ம் நூற்றாண்டு) உலா நூல்களுள் ஒன்று. 391 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

நூல் தோற்றம்

இராசராச சோழன் உலா, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட சோழ மன்னர்கள் மீதான உலா நூல்களில் மூன்றாவதாக இயற்றப்பட்ட நூல். (முதல் இரண்டு உலா நூல்கள், விக்கிரம சோழன் உலா; குலோத்துங்க சோழன் உலா). இராசராச சோழன் உலா, சோழர்களின் வரலாற்றைக் கூறுவதுடன் இரண்டாம் இராசராச சோழன் மன்னனின் வீரம், கொடைச் சிறப்பு, ஈகைத்திறன், ஆலயப் பணிகள், போர்த்திறன் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கிறது. இம்மூன்று மன்னர்களின் மீதான உலா நூல்களின் தொகுப்பு 'மூவருலா' என்று அழைக்கப்பட்டது.

ஒட்டக்கூத்தர், இராசராச சோழன் உலாவைப் பாடி அரங்கேற்றம் செய்யும்போது, ஒவ்வொரு கண்ணி அரங்கேறும்போதும் ஓராயிரம் பொன்னை மன்னன் வழங்கியதாக சங்கர சோழன் உலாவும், தமிழ் விடு தூது நூலும் குறித்துள்ளன. தக்கயாகப் பரணி உருவாகக் காரணமான மன்னனாக இராசராச சோழன் அறியப்படுகிறான். கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்றை அவன் கட்டினான். சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழும் இக்கோயிலில், நாயன்மார் அறுபத்து மூவரின் உருவங்களும் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் இவ்வாலயத்தில் உள்ளது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

சோழ நாட்டில் 'மலரி' என்ற ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழ மன்னனின் அவைக்களப் புலவர். விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றுவித்த குருவாகவும், அவைக்களப் புலவராகவும் இருந்தார். பின்னர் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கும் அவைக்களப் புலவராக இருந்தார். அவர்கள் மூவர் மீதும் ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்கள் 'மூவருலா' என்று அழைக்கப்படுகின்றன. சோழன் அவைக்களப் புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர், கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, கௌடப் புலவர் போன்ற பட்டங்களைப் பெற்றார். தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். தனது புலமைக்காக சோழ மன்னனிடமிருந்து ஒட்டக்கூத்தர் பரிசாகப் பெற்ற ஊர் அவர் பெயரில் 'கூத்தனூர்' என்று அழைக்கப்பட்டது.

நூல் அமைப்பு

இராசராச சோழன் நூலில் 391 கண்ணிகள் இடம்பெற்றன. பாடல்கள், கலிவெண்பா யாப்பில், வெண்டளை பெற்று, இரண்டாமடியில் தனிச்சொல் பெற்று அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

இராசராச சோழன் உலாவின் பாட்டுடைத்தலைவன் இராசராச சோழன். இவன், குலோத்துங்க சோழனின் மகன். பொ.யு. 1146-ல் அரியணை ஏறினான். சோழேந்திர சிம்மன், கண்டன், இராச கம்பீரன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன இவனுடைய பட்டப் பெயர்களில் சில. 1163 வரை இவன் ஆண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

இராசராசசோழன் உலா நூல் இரு பிரிவாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றன. இரண்டாம் பகுதியில் தலைவன் உலாப் போகும் காலத்தில் ஏழு பருவ மகளிரின் காதல் செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இராசராச சோழன் உலா சிறந்த கவிநயம் வாய்ந்த பாடல்களைக் கொண்டது. இராசராச சோழனின் முன்னோர்களது பெருமை இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சோழர்களுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச சோழன் உலா கூறுகின்றது.

"மனிதகுலத்தில் பிறந்து மேருமலை போன்ற உயர்ந்த புகழினை உடையவன்; ஈரேழ் பதினான்கு உலகையும் வென்று தன் கீழ் வருமாறுச் செய்தவன்; சக்கரப் படையை உடைய கண்ணன்; சூரியனையும் குளிர வைக்கும் குளிர்ச்சி பொருந்திய வெண்கொற்றக் குடையை உடையவன். சூரிய குலத்திற்குத் திலகம் போன்றவன்." என இராசராசனின் சிறப்பு, பெருமை இவ்வுலா நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இராசராச சோழனின் உலாச் சிறப்பும், எழு வகைப் பருவ மகளிரும் அவன் உலாவைக் கண்டு, அவன் அழகால் காதல் வசப்படுவதுமான செய்திகள் அழகான வர்ணனை மற்றும் கவிநயங்களுடன் இராசராச சோழன் உலா நூலில் இடம்பெற்றுள்ளன.

பாடல்

இராசராசனின் சிறப்புகள்

திருமகன் சீராசராசன் கதிரோன்
மருமகனாகி மறித்தும் - திருநெடுமால்

ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை கடிந்து பாதிக்கு - மேதினியில்

செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு - முந்தி

உடுத்த திகிரிப் பதினா லுலகும்
அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்

கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகைச் சனநாதன்

உலாச் சிறப்பு

தற்கோடி ஓரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி சென்ற சிலைகாணீர் - முற்கோலி

வட்ட மகோததி வேவ ஒருவாளி
விட்ட திருக்கொற்ற வில்காணீர் - வெட்டிச்

சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு - வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய

மதியெறிந்து வல்லேற்று வான்எறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர்

இடப்புண்ட பேர்இஞ்சி வஞ்சியில் இட்ட
கடப்ப முதுமுரசம் காணீர் - கொடுப்பத்

தரை கொண்ட வேற்று அரசர் தம்சென்னிப் பொன்னிக்
கரை கண்ட போர்முரசம் காணீர் - சரதப்

பவித்ர விசயப் படைப்பரசு ராமன்
கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில்

மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி
மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி

வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின்

றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற்

பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு
வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற்

றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள்
மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற

அணைத்தரு காயிர மாயிர மாகப்
பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட்

சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள

வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும்

திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
இருந்த படிபாரீ ரென்பார்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 19:35:00 IST