under review

வானம்பாடி (மரபுக்கவிதை இதழ்)

From Tamil Wiki
Revision as of 17:38, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வானம்பாடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வானம்பாடி (பெயர் பட்டியல்)
த.கோவேந்தனின் வானம்பாடி இதழ்த் தொகுப்பு (படம் நன்றி: இந்து தமிழ் திசை இதழ்)

வானம்பாடி 1957-ல் தொடங்கப்பட்டு வெளியான மரபுக்கவிதைக்கான இலக்கியச் சிற்றிதழ். புலவர் த. கோவேந்தன் இதன் ஆசிரியர். கோவை 'வானம்பாடி' இதழ் தோன்றுவதற்கு 13 வருடங்கள் முன்பே தொடங்கப்பட்டு வெளியானது இச்சிற்றிதழ்.

வெளியீடு

வானம்பாடி இதழ், செப்டம்பர் 15, 1957 முதல் வேலூரிலிருந்து வெளிவந்தது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் த. கோவேந்தன். ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அன்று இவ்விதழ் வெளிவந்தது. தனிப்பிரதி விலை: 16 காசுகள். ஆண்டுச்சந்தா: இரண்டு ரூபாய்.

இதழ் அமைப்பு

வானம்பாடி இதழின் முகப்புப் பக்கத்தில்,

"தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்"

எனும் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றன. முதல் ஆண்டில் 9 இதழ்கள் வெளிவந்தன. இரண்டாம் ஆண்டு முதல் க்ரௌன் அளவில் வெளியானது. தொடக்கத்தில் 12, 16, 20 பக்கங்களில் வெளிவந்த இதழ், இரண்டாம் ஆண்டு முதல் 50 பக்கங்களில் வெளியானது.

ஓராண்டு நிறைவு இதழில், இதழாசிரியர் த. கோவேந்தன், இதழ் பற்றியத் தனது மதிப்பீட்டைப் பின்வருமாறு குறிப்பிட்டார். "இந்த இதழுடன் வானம்பாடிக்கு ஓராண்டு முடிகிறது... தமிழிலக்கியக் காவனத்தே புத்தம் புதிய சுமார் ஐம்பது கவிஞர்களை அறிமுகப்படுத்தி, நூற்றெழுபத்தெட்டுக் கவிதை மலர்களை மணக்க வைத்த பெருமை வானம்பாடிக்கே உண்டென்று எண்ணும்போது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. வானம்பாடி கவிதை இதழுக்குக் கைம்மாறு கருதாது கவிதைகளைத் தந்துதவிய எல்லாக்கவிஞர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றி... தமிழருமையை ஆங்கிலமறிந்தார் உணர, புகழ - செந்தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். பயன்கண்டார் பலர்... இறுதியாக... செப்டம்பர் திங்கள் இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் வெளிவரும். ஒரு சிறு மாற்றம். நூல் "கிரவுண்' அளவில் நூலாக 50 பக்கங்களுடன் வெளிவரும். ஆனால் திங்கள்தோறும் வெளியிட இயலாது. எனக்கென்று வேறு வாணிபம் இருப்பதால் திங்கள்தோறும் வெளியிட வானம்பாடி இதழுடன் ஒத்துழைக்க இயலவில்லை"

உள்ளடக்கம்

வானம்பாடி இதழ் மரபுப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. மொழிபெயர்ப்புப் பாடல்களும் இடம் பெற்றன. பாரதியார், பாரதிதாசன் போன்றோரது பாடல்களும் வெளியாகின. மேல்நாட்டுக் கவிதைகள் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தன. கா. அப்பாத்துரை, த. கோவேந்தன், ம.லெ. தங்கப்பா போன்றோர் அம்மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்தனர்.

ஏப்ரல் 1, 1958 இதழில் முகப்புப் பக்கத்தில் ஷெல்லியின் படமும், உள்ளட்டையில் 'வானம்பாடி' என்னும் பாடலும் இடம்பெற்றது. ஷெல்லியின் 'The Sky Lark' எனும் பாடலை 'வானம்பாடி' என்ற தலைப்பில் கா. அப்பாத்துரை மொழிபெயர்த்தார். தாகூரின் பாடல் ஒன்றை 'அன்பு மனத் தொல்லை' என்ற தலைப்பில் த. கோவேந்தன் மொழிபெயர்த்தார். கேரளத்தின் புகழ்பெற்ற கவிஞரான வள்ளத்தோலின் பாடல் ஒன்று 'காதல்தேர்வு' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழ்ப்பாடல்கள் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. தேர்ந்தெடுத்த சங்கப்பாடல்களை ம.லெ. தங்கப்பா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். திருவருட்பா தொடங்கி பாரதி, பாரதிதாசன் வரை பலரது பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. ம.லெ. தங்கப்பாவின் பாடல்களுள் 'ஆந்தைப்பாட்டு' எனும் காவியம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தி எதிர்ப்பு, முதுகுளத்தூர் கலவரம் என சமூக நடப்புகளும் கவிதைகளாகின. இதழில் கவிதை வடிவிலேயே நூல் மதிப்புரை இடம்பெற்றது. விளம்பரங்களுக்கும் வானம்பாடி இதழ் இடமளித்தது. கவிதை வடிவில் பல விளம்பரங்கள் வெளியாகின. பொன்மொழிகளும் கவிதை வடிவிலேயே வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

இதழ் நிறுத்தம்

1957-ல் தொடங்கப்பட்ட வானம்பாடி இதழ், இடையிடையிட்டு 13 இதழ்கள் வெளிவந்து பின் நின்று போனது.

ஆவணம்

1957 முதல் 1959 வரை வெளியான வானம்பாடி இதழ்களின் முழுத் தொகுப்பையும், "த.கோவேந்தனின் வானம்பாடி கவிதை இதழ் தொகுப்பு (1957-1959)" என்ற தலைப்பில், த. கோவேந்தனின் மகன் கோ. எழில்முத்து பதிப்பித்தார். கலைஞன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது.

மதிப்பீடு

கோவையில் 'வானம்பாடி' இதழும், இயக்கமும் தோன்றுவதற்குப் பதிமூன்று வருடங்கள் முன்பே வேலூரில் தொடங்கி நடத்தப்பட்ட இதழ் வானம்பாடி. தமிழில் மரபுக் கவிதைக்கென்றே வெளியான இதழாகவும், நூலின் அனைத்துப் பகுதிகளையும் கவிதை வடிவிலேயே வெளியிட்ட முன்னோடித் தமிழ்க் கவிதை இதழாகவும் வானம்பாடி இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2024, 19:19:57 IST