under review

ந. சிதம்பர சுப்பிரமணியன்

From Tamil Wiki
Revision as of 15:53, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
Chidambarasubramaniyan.jpg
ந. சிதம்பர சுப்பிரமணியன்
சிதம்பரசுப்ரமணியன்
அ.சிதம்பர சுப்ரமணியன்

ந. சிதம்பர சுப்பிரமணியன் (என்.சி.எஸ், சிதம்பர சுப்ரமணியன்) (நவம்பர் 30, 1912 - ஏப்ரல் 26, 1977) தமிழ் எழுத்தாளர். மணிக்கொடி மரபில் வந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். இசையைப் பின்புலமாகக் கொண்ட 'இதய நாதம்', சுதந்திரப்போராட்டப் பின்புலம் கொண்ட 'மண்ணில் தெரியுது வானம்' உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.சிறுகதைகள் நாடகங்கள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

சிதம்பர சுப்பிரமணியன் நவம்பர் 30, 1912 அன்று காரைக்குடியில் பிறந்தார். காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தம்முடைய பள்ளிப்படிப்பை முடித்தார், சென்னையில் பட்டயக் கணக்கறிஞர்(Charted accountant) பயிற்சி பெற்றார். இப்பயிற்சியை இவர் முழுமையாக முடிக்கவில்லை.

சிதம்பர சுப்பிரமணியன் தமிழ் மற்றும் மேல்நாட்டு இலக்கியங்கள் பலவற்றைப் படித்தவர். இசைப் பயிற்சி பெற்றவர், வீணை இசை கற்றார். தியாகைய்யர் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

தனி வாழ்க்கை

சிதம்பர சுப்பிரமணியன் சென்னையில் விஜயா - வாஹினி ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்து 21 வருடங்கள் பணிபுரிந்தார். திரைப்படத்துக்குப் பலமுறை கதை எழுத முயன்றும் அதில் வெற்றி பெறவில்லை. பணிபுரிந்த இடத்தில் என்.சி.எஸ். என்று அழைக்கப்பட்டார்.

காந்தி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்தபொது அவரைக் கண்டு அவர்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1929-ல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள முனைந்தபோது தாயார் தடுத்ததால் அம்முயற்சியைக் கைவிட்டார்.

சிதம்பர சுப்பிரமணியம் மணமானவர். மனைவி கமலா.

ந.சிதம்பரசுப்ரமணியன் செல்வந்தராக வாழ்ந்தவர். சென்னை மவுன்ட்ரோட்டில் இருந்த ஓடியன் திரையரங்கை விலைக்கு வாங்கினார். ஆனால் சட்டச்சிக்கல் கொண்ட சொத்தாக அந்து இருந்தமையால் பணத்தை இழந்து இறுதியில் கடனுக்குள்ளானார்.

இலக்கிய வாழ்க்கை

ந.சிதம்பரசுப்ரமணியன் மணிக்கொடி முன்னோடிகளான கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி போன்றவர்களுடன் அணுக்கமான உறவில் இருந்தார். 'வாழ்க்கையின் முடிவு' என்ற இவரது முதல் கதை 1933ல் மணிக்கொடி ஐந்தாவது இதழில் வெளிவந்தது. பி.எஸ்.ராமையா இவரின் முதல் கதையைப் பிரசுரித்தார். தொடர்ந்து 'வஸ்தாத் வேணு', 'ஒரு கூடை கத்தரிக்காய்' இரு கதைகளும் வெளிவந்தன. அக்காலகட்டத்தில் சுமார் 60 கதைகள் எழுதினார். மணிக்கொடியில் அவற்றில் 10 கதைகள் வெளிவந்தன. கலைமகள், சந்திரோதயம், ஹனுமான், தினமணி - ஆண்டு மலர், சக்தி, கிராம ஊழியன் பொங்கல் மலர், கலாமோகினி, ஹிந்துஸ்தான் கதாமணி, சூறாவளி முதலிய பல இதழ்களிலும் இவருடைய கதைகள், நாடகங்கள், கட்டுரைகள் பிரசுரமாயின.

'சக்ரவாகம் முதலிய கதைகள்', 'சூரிய காந்தி', 'வருஷப் பிறப்பு' என மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், 12 நாடகங்கள் அடங்கிய 'ஊர்வசி' என்ற நாடகத் தொகுப்பும் வெளிவந்தன.இவரது சிறுகதைகளில் ஆறு கதைகள் எந்தத் தொகுப்பிலும் இடம்பெறவில்லை.

நாவல்கள்

ந. சிதம்பர சுப்பிரமணியன் மொத்தம் மூன்று நாவல்களை எழுதியுள்ளார்.முதல் நாவல், இதயநாதம், தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் ஓர் இசைக் கலைஞனின் கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை முறையைக் கூறுகிறது. மகா வைத்யநாத சிவனின் வாழ்க்கையின் சாயல்களைக் கொண்டது என்று இதன் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதயநாதம், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' நாவலின் சாயலைக் கொண்டது எனக் கருதுபவர்கள் உண்டு.

'நாகமணி' பண்புக்கும் பணத்துக்கும் உள்ள முரண்பாட்டைக் காட்டும் படைப்பு."புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதையைக் கற்பனை செய்ய வேண்டுமென்பது என் வெகுநாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக் கற்பனை இடங்கொடுத்தது என்று சிதம்பரசுப்ரமணியன் நாகமணி நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

மூன்றாவது நாவல், 'மண்ணில் தெரியுது வானம்' காந்தியின் வாழ்வையும் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. 1920 முதல் 1948 வரையான சென்னை நகரத்தின் சித்திரமும் காணக் கிடைக்கிறது."காந்திய யுகத்தில் நான் அனுபவித்ததையும் கண்டதையும் இந்நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம்; என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும் ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. இது ஒரு தனி மனிதன் கதைதான். ஆனால், மகாத்மாவின் கதையும்கூட; தேசத்தின் கதையும் கூடத்தான் என்று இந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 'மண்ணில் தெரியுது வானம்' வாசகர் வட்டத்தால் 1969-ல் வெளியிடப்பட்டது.

இலக்கிய விவாதங்கள்

சிதம்பரசுப்ரமணியன் பாரதி மகாகவியா விவாதத்தில் பங்குகொண்டு பாரதி மகாகவியே என்னும் தரப்பில் எழுதினார்.

மறைவு

ந.சிதம்பரசுப்ரமணியன் தன் வாழ்நாளில் எந்த விருதையும் பெறவில்லை. ஏப்ரல் 26, 1977-ல் சென்னையில் மறைந்தார்.

மதிப்பீடுகள்

சிதம்பர சுப்பிரமணியத்தின் மனிதர்கள் அற்பமானவர்கள்; அதே சமயம் அற்புதமானவர்கள். அவநம்பிக்கை, பயம், சந்தேகம், துயரம் ஆகியவற்றால் வதைபடுபவர்கள். ஆனால் அந்த இறுக்கத்தின் ஒரு அபாரமான கணத்தில் அவர்களுக்கு ஒளி கிடைத்துவிடும். தங்களுடைய அழுக்குகளைத் தூக்கி எறிந்து, மிக உன்னதமான, மனிதகுலம் முழுவதையும் நேசிக்கும் மனநிலைக்குச் செல்லக்கூடியவர்கள். சந்தர்ப்பங்கள் எப்படி மனிதனை அசுரனாகவும், தேவனாகவும் ஆக்கிவிடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சித்தரிப்பதில் சிதம்பர சுப்பிரமணியன் வெற்றி கண்டவர்" என்று மாலன் குறிப்பிடுகிறார் "காந்தியைப்பற்றிய எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால் காந்தியோடுகூட அந்த காலத்தின் இந்தியாவையே நம்முன் காண்பித்திருக்கிறார் சிதம்பர சுப்பிரமணியன்" என்று சாரு நிவேதிதா மண்ணில் தெரியுது வானம் நாவல் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

ந.சிதம்பரசுப்ரமணியன் மணிக்கொடி இலக்கிய இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவர். மணிக்கொடி எழுத்தாளர்களில் ஐரோப்பிய இலக்கியங்களை முன்னுதாரணமாகக் கொணவரும், புதுமைநாட்டமும் வடிவச்சோதனைகளில் ஆர்வமும் கொண்டவரும் என புதுமைப்பித்தன் அடையாளப்படுத்தப்படுகிறார். வங்கமொழி இலக்கியங்களை முன்னுதாரணமாகக் கொண்டவர், பாலியல் சார்ந்த உளநுட்பங்களை எழுதியவர் கு.ப.ராஜகோபாலன். அவ்விரு போக்குகளுக்கும் வெளியே இலட்சியவாத எழுத்தை முன்வைத்த மணிக்கொடி மரபைச் சேர்ந்த எழுத்தாளர் என்று ந.சிதம்பர சுப்ரமணியம் வகைப்படுத்தபடுகிறார். மணிக்கொடி குழுவினர் காந்திய இயக்கத்தின் விளைவாக உருவானவர்கள் எனினும் அவர்கள் எவரும் காந்திய அரசியலையோ இலட்சியவாதத்தையோ தங்கள் பேசுபொருளாகக் கொள்ளவில்லை. ந. சிதம்பர சுப்ரமணியன் அவர்களுக்கு மாறாக காந்திய இலட்சியவாதத்தையும், தொல்தமிழகம் குறித்த கனவையும், கலையை ஒட்டிய வாழ்க்கை பற்றிய இலட்சிய உலகையும் எழுதியவர்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் சாதனைகள் சிறுகதைளிலேயே அமைந்தன, ஆனால் ந.சிதம்பரசுப்ரமணியன் நல்ல சிறுகதையாசிரியராக குறிப்பிடப்படுவதில்லை. அவருடைய நாவல்கள் தமிழில் இலட்சியவாதத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாவல்கள் பிற்காலத்தில் உருவாக முன்னுதாரணமாக அமைந்தன.

நூல் பட்டியல்

நாவல்
  • இதய நாதம் (1952)
  • நாகமணி (1959)
  • மண்ணில் தெரியுது வானம் (1969)
சிறுகதைத் தொகுப்பு
  • சக்ரவாகம் (1940)
  • சூரியகாந்தி கதைகள் (1950)
  • வருஷப்பிறப்பு முதலிய கதைகள் (1956)
  • ஒரு நாள் வேலை (2022) (தொகுப்பாசிரியர்: ராணி திலக்)
நாடகம்

ஊர்வசி(1944)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-May-2024, 08:43:46 IST