under review

சதங்கை

From Tamil Wiki
Revision as of 16:12, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சதங்கை

சதங்கை (1971-2002) நாகர்கோயிலில் இருந்து வெளிவந்த சிற்றிதழ். கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்றவர்கள் இதில் எழுதியிருக்கிறார்கள்.

வரலாறு

வனமாலிகையை ஆசிரியராகக்கொண்டு நவம்பர் 1971 முதல் நாகர்கோவிலிலிருந்து வெளிவரத் தொடங்கியது சதங்கை மாத இதழ். ஆரம்ப காலங்களில் அது ஒரு ஜனரஞ்சக இதழ்போலவே வெளிவந்தது. ’ஒரு சிறந்த இலக்கியப் பத்திரிகை நடத்தலாம். அல்லது ஒரு பொழுது போக்குப் பத்திரிகை நடத்தலாம். ஆனால் இரண்டையும் கலந்து செய்துவிட வேண்டும் என்பது எப்பொழுதும் வெற்றிபெற்றதில்லை’ (ஜனவரி 1973) என்று ஆசிரியர் வனமாலிகைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர ராமசாமி. மே 1973 இதழில், "நண்பர் சுந்தர ராமசாமி சதங்கையில் தொடர்ந்து எழுதுவதுடன் அவர்களது ஆலோசனைகளின்படி இதழ்கள் தொடர்ந்து வெளியாகும்" என்ற அறிவிப்புடன் சதங்கை ஒரு இலக்கிய இதழாக மாற்றம் பெற்றது. 1972-ல் நாகர்கோவிலில் தங்கியிருந்த பிரமிளும் சதங்கையில் எழுதத் தொடங்கினார். பல்வேறு இலக்கியப் பார்வைகள் கொண்ட படைப்பாளிகளுக்கும் சதங்கை களம் அமைத்துக் கொடுத்தது. இதழின் ஆரம்ப காலம் தொடங்கி இறுதிவரையிலும் எம்.சிவசுப்ரமணியம் பிழைதிருத்துவது முதல் அச்சேற்றுவது வரை உதவினார். வனமாலிகை கடந்த தன் எழுபது வயதில் ஜூலை 2, 2002-ல் காலமானார். சதங்கையும் நின்றுவிட்டது.

உள்ளடக்கம்

சதங்கை

தன் முதல் கட்டத்தில் சாது சாஸ்திரி என்றபேரில் கிருஷ்ணன் நம்பியும், பல புனைபெயர்களில் ஜி. நாகராஜன்-ம் எழுதியுள்ளனர். இரண்டாம் கட்டத்தில் ஜெயமோகன் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார் . சதங்கை ஆரம்ப வருடங்களில் கலைச் சிலைகளின் போட்டோக்கள் வசீகரமாக அச்சிடப் பெற்றிருந்தன. பிறகு மாடர்ன் ஓவியங்கள் வந்தன.பின்னர் சாதாத் தாளில் எழுத்தாளர்களது பெயர்கள் அச்சிடப்பட்டன. சில சமயம் பத்தே பத்துப் பக்கங்கள் - ஒரே ஒரு கட்டுரை அல்லது கதை, இரண்டு கவிதைகள் தாங்கி இதழ் வந்தது. வனமாலிகை தரமான வாசகர்களைப் பேட்டி கண்டு, அவர்களது அபிப்பிராயங்களை விரிவாகப் பிரசுரித்தார். 'கருத்து மேடை' என்ற பகுதியும் குறிப்பிடத் தகுந்தது. ஐந்தாறு பேர் (முக்கியமாக வாசகர்கள்) கூடி குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பற்றி சர்ச்சிப்பது. இரண்டாவது இதழில் ஜெயகாந்தன் கதைகளை அலசி ஆராய்ந்த உரையாடல் வந்துள்ளது. (வல்லிக்கண்ணன்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:15 IST