நேமிநாதம்
நேமிநாதம் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. சுருக்கமாக எழுதப்பட்டதால் சின்னூல் எனப்பட்டது. தொல்காப்பியத்திற்குப் பின், மொழியின் வளர்நிலைக்கேற்பத் தன்காலத்தின் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு நேமிநாதம் தோன்றியது.
ஆசிரியர்
நேமிநாதத்தை இயற்றியவர் சமண சமயத்தைச் சேர்ந்த குணவீர பண்டிதர். 22 -ம் நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டதால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கருதப்படுகிறது. குணவீர பண்டிதர் வச்சணந்தி மாலை என்ற வெண்பாப் பாட்டியல் நூலையும் எழுதியுள்ளார்.
நூல் அமைப்பு
நேமிநாதம் எழுத்ததிகாரம் (24), சொல்லதிகாரம்(70) என இரண்டு பெரும் பிரிவுகளாக இரு கடவுள் வாழ்த்து மற்றும் அவையடக்கப் பாடலும் சேர்த்து 97 வெண்பாக்களால் ஆனது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. சொல்லதிகாரத்தில் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:
- மொழியாக்க மரபு
- வேற்றுமை மரபு
- உருபி மயங்கியல்
- விளிமரபு
- பெயர் மரபு
- வினை மரபு
- இடைச்சொல் மரபு
- உரிச்சொல் மரபு
- எச்ச மரபு
நேமிநாதம் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது. சொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
சிறப்புகள்
நேமிநாதம் வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல். இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கும், பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது.
பாடல் நடை
கடவுள் வாழ்த்து
பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.
எழுத்ததிகாரம்
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய
வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள்
சொல்லொற்றி நீட்டத் தொகும். 3
சொல்லதிகாரம்
பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு. 36
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Sep-2023, 09:53:50 IST