குணவீர பண்டிதர்
- பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)
குணவீர பண்டிதர் (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சமண சமயத்தைச் சேர்ந்தவர். நேமிநாதம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
குணவீர பண்டிதர் பொ.யு. 12-ம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் களத்தூரில் பிறந்தார். இது காஞ்சிபுரத்திற்கு தென்கிழக்கில் முப்பது கிலோமீட்டரில் உள்ள பொன்விளைந்த களத்தூர் அல்லது பொற்களந்தை என்றழைக்கப்படும் ஊராக இருக்கலாம் என காசிச்செட்டி கருதினார். குணவீர பண்டிதர் சோழ நாட்டில் வாழ்ந்த சமணப் புலவர்.
குணவீர பண்டிதர் சோழ அரசன் திரிபுவனதேவன் என்னும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர். நேமிநாத உரைப் பாயிரத்தில், "வளமலிகளந்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழாக் குணவீர பண்டிதன்" என வருவதால் குணவீர பண்டிதருக்கு வச்சணந்தி முனிவர் ஆசிரியர் என அறிஞர்கள் கருதினர். வெண்பாப் பாட்டியலின் பாயிரவுரையில் "கற்றவர் புகழும் களந்தையென் பெரும்பதி- குற்றமில் வாய்மைக் குணவீர பண்டிதன்" என குணவீர பண்டிதரின் சிறப்புகள் சொல்லப்பட்டன.
இலக்கிய வாழ்க்கை
நேமிநாதம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இது சமண சமய தீர்த்தங்கரர்களில் இருபத்திரெண்டாம் தீர்த்தங்கரரான நேமிநாதரின் பெயரால் எழுதப்பட்டது. வெண்பாப் பாட்டியல் என்று அழைக்கப்படும் வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூலை எழுதினார் வச்சணந்தி முனிவர் இவரது ஆசிரியர்.
பாடல் நடை
- அவையடக்க வெண்பா
உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண வமுதான தில்லையோ மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்தலா னான்சொன்ன புன்சொல்லும்
எல்லாருங் கைக்கொள்வா ரீங்கு
நூல்பட்டியல்
- நேமிநாதம்
- வெண்பாப் பாட்டியல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
10-Aug-2023, 18:12:05 IST