under review

புத்தனேரி ரா. சுப்பிரமணியம்

From Tamil Wiki
Revision as of 13:42, 12 February 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Images Added; Link Created: Proof Checked.)
புத்தனேரி ரா. சுப்பிரமணியம்
புத்தனேரி ரா. சுப்பிரமணியம் - இள வயதுப் படம்

புத்தனேரி ரா. சுப்பிரமணியம் (புத்தனேரி ஆர். சுப்பிரமணியம்; புத்தனேரி ரா. சுப்பிரமணியன்; புத்தனேரி ஆர். சுப்பிரமணியன்) (அக்டோபர் 8, 1922 – ஏப்ரல் 29, 1989) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர். தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றினார். பல்வேறு நாடகக் குழுக்களுக்காகப் பல நாடகங்களை எழுதினார். தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புத்தனேரியில், அக்டோபர் 8, 1922 அன்று, பி.வி. ராமையா – தாயம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் முதல் நிலை அலுவலராகப் பணியாற்றினார். மணமானவர்.

புத்தனேரி ரா. சுப்பிரமணியம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக பொன்னி இதழில் அறிமுகமானார். பொன்னி, குயில் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். வானொலியிலும் புத்தனேரி ரா. சுப்பிரமணியத்தின் கவிதைகள் ஒலிபரப்பாகின.

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், மகாகவி மலர், கிராமியக் கலைவிழா மலர், பண் ஆராய்ச்சி மலர் போன்ற நூல்களின் தொகுப்பாசிரியராகச் செயல்பட்டார். கவிதை நூல்கள், நாடக நூல்கள் எனப் பல நூல்களை எழுதினார். அவ்வை தி.கே. சண்முகத்தின் ‘நாடகச் சிந்தனைகள்’ நூலைத் தொகுத்தார்.

சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து, புத்தனேரி ரா. சுப்பிரமணியம் ஆற்றிய சொற்பொழிவு, ‘பாட்டும் கூத்தும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது.

இதழியல்

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், செந்தமிழ்ச் செல்வி இதழின் துணை ஆசிரியர்களுள் ஒருவராகப் பணியாற்றினார். குயில், தமிழ் உலகம் போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவராகச் செயல்பட்டார். பொன்னி, கல்கி, பாரதமணி போன்ற இதழ்களில் புத்தனேரி ரா. சுப்பிரமணியத்தின் படைப்புகள் வெளியாகின.

புத்தனேரி ரா. சுப்பிரமணியம் கவிதை

நாடகம்

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், பரிதிமாற் கலைஞரின் ‘கலாவதி’ நாடகம் அரங்கேற்றமானபோது முதன் முதலில் அதற்குப் பாடல்களை எழுதினார். தொடர்ந்து டி.கே.எஸ். சகோதர்கள் நடத்திய ‘தமிழ்ச்செல்வம்’, ’ராஜராஜசோழன்’, ‘சித்தர் மகள்’, ‘பாசத்தின் பரிசு’, ’அமைச்சர் மதுரகவி’, ’வாழ்வில் இன்பம்’, ‘உயிர்ப்பலி’ போன்ற நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்கள், என்.எஸ். கிருஷ்ணன் நாடகங்கள் எனப் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், கல்கியின் சிவகாமியின் சபதத்தை நாடகமாக்கினார். அது டி.கே.எஸ். சகோதரர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது ‘தலை பிழைத்தது’ கவிதை நாடகம் சாகித்ய அகாதெமியில் சிறப்பிக்கப்பட்டது. புத்தனேரி ரா. சுப்பிரமணியத்தின் ‘பாரதியார்’ நாடகம், வானொலியில் பலமுறை ஒலிபரப்பானது.

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், ‘காவிரி தந்த கலைச்செல்வி’, ’சித்திரப்பாவை’ போன்ற 35-க்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களைப் படைத்தார். அவற்றில் ஜெ. ஜெயலலிதா, ராஜசுலோசனா, கே. சந்திரகாந்தா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

திரைப்படம்

புத்தனேரி ரா. சுப்பிரமணியம் முதல் தேதி, ராஜராஜசோழன், பொன்னித் திருநாள், அகத்தியர் போன்ற திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

பொறுப்புகள்

  • நாடகக் கழகத்தின் சிறப்புப் பொதுச் செயலாளர்.
  • தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்
  • அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்
  • குழந்தை எழுத்தாளர் சங்க உறுப்பினர்
  • தமிழ்க் கவிஞர் மன்ற உறுப்பினர்
  • தமிழிசைச் சங்க உறுப்பினர்

விருதுகள்

  • தமிழ் நற்பெருந்தொண்டர்
  • செந்தமிழ் மாமணி
  • கவிஞர் கோ
  • கலைமாமணி
  • செஞ்சொற் கவிஞர்
  • முத்தமிழ் வித்தகர்
  • புதுமைப் பாவலர்
  • திருக்குறள் நெறித்தோன்றல்
  • தமிழக அரசின் பாரதிதாசன் விருது

மறைவு

புத்தனேரி ரா. சுப்பிரமணியம், ஏப்ரல் 29, 1989-ல் காலமானார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • அம்புலிப் பாட்டுப் பாடாதே
  • பொங்கல் விருந்து
  • என்றும் இளமை
  • பாரதி ஒரு நெருப்பு
  • அன்னை இந்திரா தியாக காவியம்
நாடகங்கள்
  • சிவகாமியின் சபதம்
  • காவிரி தந்த கலைச்செல்வி
  • சித்திரப் பாவை
  • ஞானப்பழம்
  • பஸ்மாசுர மோகினி
  • ராமாயணம்
  • பூமகள் திருமணம்
  • தலை பிழைத்தது
  • வீர பரம்பரை
  • பொங்குக புதுவளம்
  • பிறந்தது புதுயுகம்
  • ஒப்பில்லாத சமுதாயம்
  • பாரதி யார்?
தொகுப்பு நூல்கள்
  • பாட்டும் கூத்தும்
  • பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள்

மதிப்பீடு

சொற்பொழிவாளராகவும், கவிதை, இசைப்பாடல்கள், நாடகம் என முத்தமிழுக்கும் பங்களித்த முன்னோடி நாடக ஆசிரியராகவும் புத்தனேரி ரா. சுப்பிரமணியம் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.