being created

கே.ஜி.சந்திரசேகரன் நாயர்

From Tamil Wiki
கே.ஜி.சந்திரசேகரன் நாயர்
கே.ஜி.சந்திரசேகரன் நாயர்

கே.ஜி. சந்திரசேகரன் நாயர் (1937 - 2020) மலையாள இலக்கிய எழுத்தாளர். தமிழ்ச் செவ்விலக்கியங்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தவர். தமிழகத்தில் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் இன்றைய கேரளத்தில் நெய்யாற்றின்கரை வட்டத்தில், அமரவிளை என்னும் ஊரில் 1937 ல் பிறந்தார். அமரவிளை ஆரம்பப்பள்ளியிலும், குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழி நடுநிலைப் பள்ளியிலும், நாகர்கோயில் எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரியில் பொருளியலில் பி.ஏ பட்டம்பெற்றார். சென்னை பல்கலையில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அலிகர் பல்கலையில் தொலைதொடர்புக் கல்வி வழியாக இந்தியில் சாகித்ய விசாரத் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் இந்திய வானியல் ஆய்வு மைய முன்னாள் இயக்குநரான டாக்டர் ஜி.மாதவன் நாயரின் தங்கை திருநந்திக்கரை ஏறத்துவீட்டில் சரோஜியம்மாவை மணந்தார். மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா ரவீந்திரன், சுஜாதா மகள்கள். அஜித், ராஜீவ் ஆகியோர் மகன்கள்.

1959 முதல் தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் உயரதிகாரியாக தமிழகத்தில் பல ஊர்களில் பணியாற்றி 1995ல் ஓய்வுபெற்றார்.

இலக்கியவாழ்க்கை

மொழியாக்கம்

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் அலுவலகப் பணிநிறைவுக்குப்பின் தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். திருக்குறள் மொழியாக்கம் முதல் படைப்பு. திருமந்திரம், திருவாசகம் ஆகியவற்றை தொடர்ந்து மொழியாக்கம் செய்தார். சைவத்திருமுறைகள் ஒன்பது நூல்கள், சித்தர் பாடல்கள் ஆகியவற்றையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் மொழியாக்கம் செய்தார். உ.வே.சாமிநாதையரின் எனது ஆசிரியர் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு) நூலை மொழியாக்கம் செய்துள்ளார். மறைவின்போது இராமலிங்க வள்ளலார் படைப்புகளை மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார். தமிழிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட செவ்வியல்படைப்புகளை மலையாளத்திற்கு மொழிமாற்றம் செய்தார்.

உரை

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் திருமந்திரத்திற்கு விரிவான உரை எழுதியிருக்கிறார். சித்தர்பாடல்களுக்கும் விளக்கம் எழுதியிருக்கிறார்.

மறைவு

கே.ஜி.சந்திரசேகரன் நாயர் 11 ஏப்ரல் 2020 ல் திருவனந்தபுரத்தில் தன் 83 ஆம் அகவையில் மறைந்தார்.

விருதுகள்

  • உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்
  • அக்‌ஷரலோகம் விருது நாகர்கோயில்
  • வள்ளத்தோள் சாகித்யசமிதி விருது
  • தமிழக அரசு விருது

நூல்கள்

  • திருக்குறள்
  • திருமந்திரம்
  • திருவாசகம்
  • சைவத்திருமுறைகள்
  • சித்தர் காதகள்
  • நாலடியார்
  • என்றெ குருநாதன்
  • சித்தர் பாட்டுகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.