தங்கம் மூர்த்தி
தங்கம் மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 19, 1964) கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், சொற்பொழிவாளர், சமூகசேவகர். தனியார் பள்ளியின் தாளாளர். பொது வாசிப்புக்குரிய கவிதைகளை எழுதினார். 'சுழலும் கவியரங்கம்' என்னும் புதுமைக் கவியரங்கத்தை அறிமுகப்படுத்தினார். 'கவிக்கோ விருது', 'சிற்பி விருது', 'தேசிய நல்லாசிரியர் விருது', மாநில அரசின் 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
பிறப்பு, கல்வி
மூர்த்தி என்னும் இயற்பெயரை உடைய தங்கம் மூர்த்தி, ஆகஸ்ட் 19, 1964 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கியில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற சிற்றூரில், டாக்டர். கே.கே.தங்கம் - ஜெயலெட்சுமி இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரி. தங்கம் மூர்த்தி, அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். புதுக்கோட்டை, கல்வியியல் கல்லூரியில் பி.எட்., மற்றும் எம்.எட்., பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
தங்கம் மூர்த்தி மணமானவர். மனைவி: மனைவி அஞ்சலி தேவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
இலக்கிய வாழ்க்கை
தங்கம் மூர்த்தி, இளம் வயது முதலே கவிதை ஆர்வமும் இலக்கிய ஆர்வமும் கொண்டிருந்தார். மேல்நிலை வகுப்பு பயிலும்போதே கவிதைகள் எழுதினார். 'மழை நேரத்து மரங்கள்' எனும் தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வாசித்த கவிதை பாராட்டைப் பெற்றது. புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய இரா. பாலச்சந்திரன் என்னும் பாலா, தங்கம் மூர்த்தியின் கவிதைத் திறமையை அறிந்து ஊக்கப்படுத்தினார். அவரால் உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரையிலான அறிமுகம் ஏற்பட்டது.
கவியரங்கங்கள்
கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அறந்தாங்கியில் பொன்னீலன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு கவிதை வாசித்தார். அது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். கவிக்கோ அப்துல் ரகுமான், மு. மேத்தா, பேராசிரியர் அப்துல் காதர் போன்றோரின் தலைமையில் பாடிய தங்கம் மூர்த்தி, நாளடைவில் தாமும் பல கவியரங்கங்களுக்குத் தலைமையேற்றார். தாயகத்தைத் தாண்டி அயலகத்திலும் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த கவியரங்க நிகழ்ச்சிக்களுக்குத் தலைமை ஏற்றார். பல்வேறு இலக்கிய விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டுப் பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். டெல்லி, பெங்களூரு, கல்கத்தா, ஹரித்துவார், எர்ணாகுளம், அஸ்ஸாம் போன்ற பல மாநிலங்களுக்கும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.
நூல்கள்
'முதலில் பூத்த ரோஜா' என்னும் தங்கம் மூர்த்தியின் முதல் கவிதை நூல், 1994-ல் வெளியானது. ஹைக்கூக் கவிதை நூலான அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து பல கவிதை நூல்களை எழுதினார். தங்கம் மூர்த்தி பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தங்கம் மூர்த்தியின் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
தங்கம் மூர்த்தி தனது ஹைக்கூக் கவிதைகளை 'மழையின் கையெழுத்து - "சைன் ஆப் ரெயின்"என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் முரளி அப்பாஸின் இயக்கத்தில் வெளியான 'சொல்லச்சொல்ல இனிக்கும்' திரைப்படத்தில் பாடலொன்றையும் எழுதியுள்ளார்.
தங்கம் மூர்த்தியின் ஹைக்கூ கவிதை நூலிலிருந்து சில கவிதைகள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'நவீன இலக்கியங்கள்' என்ற வகைப்பாட்டில் பாட நூலாக வைக்கப்பட்டன. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் பல தன்னாட்சி கல்லூரிகளின் பாடத்திட்டத்திலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன.
அமைப்புச் செயல்பாடுகள்
தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையைத் தொடங்கி, அதன் மாவட்டச் செயலராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். த.மு.எ.க.சங்கத்தின் நகரத் தலைவராகப் பணியாற்றினார். பல இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்தார். மாவட்டக் குழு உள்ளிட்ட பொறுப்புகளில் அங்கம் வகித்தார். கலை இரவு மேடைகளிலும், கம்பன் விழாக்களிலும் கவியரங்கத் தலைமையேற்று உரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கச் சார்பில் 200 கவிஞர்களைக் கொண்டு ஒரே இடத்தில் ஒரே நாளில் புதுக்கோட்டையில் கவிதை பாட வைத்தார்.
சாகித்ய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை பணியாற்றினார். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறக்கப்பட்ட பலரை பல நிகழ்வுகள் மூலம் நினைவுக்குக் கொண்டு வந்தார். கவியரங்கம். கருத்தரங்கங்களை பள்ளி, கல்லூரிகள் உதவியோடு பல நகரங்களில் நடத்தினார்.
பொறுப்பு
- பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைச் செயலாளர்
- புதுக்கோட்டை பேலஸ் சிட்டி சுழற்சங்கத் தலைவர்
- புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்
- கலை இலக்கிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்
- புதுக்கோட்டை நூலக வாசகர் வட்டத் தலைவர்
- புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர்
- சாகித்ய அகாடெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்
விருதுகள்
- கவிக்கோ விருது
- செல்வன் காக்கி விருது
- கவிஞர் சிற்பி விருது
- 'கவிதை உறவு' வழங்கிய விக்கிரமன் விருது
- காரைக்குடி தமிழ்த்தாய் அறக்கட்டளை விருது
- சாதனையாளர் விருது
- சிறந்த சமூக சேவகர் விருது
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய மக்கள் நலக் கவிஞர் பட்டம்
- புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் பல்கலை வித்தகர் விருது
- மலேசியத் தமிழ் மணிமன்றம் தந்த 'இலக்கியத் தங்கம்' விருது
- தேசிய நல்லாசிரியர் விருது
- மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
- தமிழக அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருது
- தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது - 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூலுக்காக
- கவிமுகில் அறக்கட்டளையின் விருது - 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூலுக்காக.
கல்வியியல் பணிகள்
தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற கல்வி நிறுவனமொன்றை நிறுவினார். பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும், கற்றல் சூழல்களையும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் உருவாக்கினார். பல்வேறு விழாக்களை நடத்தியும், பல்வேறு போட்டிகளை வைத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளி இறுதி மற்றும் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவர்கள் மன அழுத்தமின்றிப் பயிலும் வகையில் பல செயல்களை முன்னெடுத்தார்.
ஆய்வு
பேராசிரியர் முனைவர் செ. ரவிசங்கர், தங்கம் மூர்த்தியின் படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்ததோடு, தனி நூலாகவும் வெளியிட்டார். புதுக்கோட்டை ஸ்ரீசுபபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை முனைவர் க. உஷாநந்தினி தங்கம் மூர்த்தியின் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மதிப்பீடு
தங்கம் மூர்த்தி, புகழ் வாய்ந்த இலக்கியச் சொற்பொழிவாளர். எளிய மொழியில் வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளை எழுதினார். பொதுவாசிப்புக்குரிய சமூகப் பிரச்சினைகளை கவிதைகளாக எழுதினார். தனது பள்ளியில் பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும், சூழல்களையும் ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவித்தார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர் இலக்கியப் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- முதலில் பூத்த ரோஜா (ஹைக்கூ கவிதை நூல்)
- தங்கம் மூர்த்தி கவிதைகள்
- பொய்யெனப் பெய்யும் மழை
- என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து
- கல்வி கரையில (கல்வி பற்றிய கவிதைகள்)
- கவிதை வெளியினிலே
- மழையின் கையெழுத்து
- கவிதையில் நனைந்த காற்று
- ஹைக்கூ 100
- தேவதைகளால் தேடப்படுபவன்
- அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்
- கூடு திரும்புதல் எளிதன்று
உசாத்துணை
- தென்றல் இதழ் கட்டுரை
- தங்கம் மூர்த்தி இணையதளம்
- கீற்று தளக் கட்டுரை
- தங்கம் மூர்த்தி பள்ளி இணையதளம்
- தங்கம் மூர்த்தி நூல்கள், அமேசான் தளம்
- தங்கம் மூர்த்தி ஃபேஸ்புக் பக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 01:14:03 IST