பெருவழுதி
பெருவழுதி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
பெருவழுதி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும் ஒருவரே என்பது பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் கருத்து. உ.வே.சாமிநாதையரும் எஸ்.வையாபுரிப்பிள்ளையும் பெருவழுதியும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும் இருவேறு புலவர்கள் என்று கருதுகிறார்கள்.
இலக்கிய வாழ்க்கை
பெருவழுதி பாடிய பாடல்கள் நற்றிணையில் 55 மற்றும் 56-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. நற்றிணை 55-வது பாடலில் தலைவியை முறைப்படி மணந்து கொள்ளாது களவு நெறியில் சந்தித்து வரும் தலைவனிடம், மணம் செய்து கொள்க என்று தோழி கடிந்துரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைகிறது. நற்றிணை 56 வது பாடல் பொருளீட்டும் பொருட்டு பிரிந்து சென்ற தலைவனை எண்ணி வருந்தாதே என்று ஆறுதல் கூறும் தோழியிடத்து தனது பிரிவாற்றாமையை தலைவி கூறுவதாக பாலைத் திணையில் அமைகிறது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 55
- தலைவன் ஒருவன் பலநாட்கள் மணந்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தும் தலைவியை மணந்து கொள்ளாமல் இருக்கிறான். தலைவியின் தாய் மகளை சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்க தொடங்கிவிட்டாள். தோழி தலைவிக்கு உறுதுணையாக இருந்து களவுநெறி செல்லுதலை மறைக்கிறார்கள். இந்நிலையில் தலைவியை சந்திக்க வரும் தலைவனிடத்து விரைவில் மணம் புரிந்து கொள்க என்று தோழி கடிந்துரைக்கிறாள்.
- களவு நெறியில் காதல் கொண்ட பிறகு உரிய நேரத்தில் மணந்து கொள்ளாத ஆடவர்களின் இயல்பை இப்பாடல் வழி அறிய முடிகிறது.
- தினைப்புனத்தை காக்கும் இளம் மகளிர் தோள்கள் மற்றும் மார்பில் தொய்யில் வரைந்து கொள்ளும் பழக்கம் இருந்தது.
- தினைப்புனத்தை சுற்றிலும் காடுகள் மூங்கில்கள் செறிந்த கற்கள் படர்ந்த காடு காணப்பட்டது.
- மூங்கில் மலர்ந்த காடுகளில் வண்டுகள் மொய்த்தன.
- தலைவனுடன் கூடியதால் தலைவியின் தோளில் ஏற்பட்ட நகக்கீறல்களை சுட்டிக்காட்டி தாய் வினவியபோது, தோழி அடுப்பெரிக்கும் சந்தனக்கட்டையால் ஏற்பட்ட தீக்காயம் என்று விளக்கம் கொடுத்து தலைவியின் களவு மணத்தை மறைத்த காட்சி கூறப்பட்டுள்ளது.
நற்றிணை - 55
- குரா மரத்தில் சிறிய அரும்புகள் மலர்ந்து பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன. வண்டுகள் பூக்களை சுற்றி மொய்க்கின்றன. மாலை நேரக்காற்றில் குரா மலர்களின் வாசம் வீசுகிறது. மலர் மணம் கணவனைப் பிரிந்து இல்லத்தில் இருக்கும் மனைவியரின் உள்ளத்தை வாடச்செய்கிறது.
- பொருளீட்டும் பொருட்டு கிளம்பி சென்ற ஆடவரின் மனைவியர் துயரத்தால் வாடி உடல் மெலிகின்றார்கள். கை வளையல்கள் நழுவி விழுமளவுக்கு பசலை நோய்க்கு ஆளாகிறார்கள். தனது பொன்னிற மேனியின் நலமழிந்ததை தலைவியால் தனக்குத்தானே தாங்கி கொள்ள முடியவில்லை.
பாடல் நடை
நற்றிணை - 56
- திணை: பாலை
- கூற்று:வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
'ஏதிலாட்டி இவள்' எனப்
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.