under review

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

From Tamil Wiki

To read the article in English: Kadalul Maaintha Ilamperuvazhuthi. ‎


கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (இளம்பெருவழுதி) கடைச்சங்க காலப் பாண்டியர். சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் புறநானூறு, நற்றிணை, பரிபாடலில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இளம்பெருவழுதி கடைச்சங்க காலப் பாண்டிய மன்னர். கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்ந்ததால் "கடலுள் மாய்ந்த" என்னும் அடைமொழி வந்துள்ளது. பெருவழுதி என நற்றிணையிலும், இளம்பெருவழுதி என பரிபாடலிலும், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என புறநானூற்றிலும் உள்ளது. இவர் திருமாலிடம் பக்தி கொண்டிருந்தது பரிபாடல் வழி அறிய முடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் புறநானூறு(182), நற்றிணை (56), பரிபாடலில்(15) உள்ளன. பரிபாடலில் திருமாலைப் பற்றிய விவரணையைப் பாடினார். நற்றிணையில் தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தும் நிலை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. புறநானூற்றில் சான்றோரின் பண்புகளைப் பற்றி பாடினார்.

பாடல் நடை

  • நற்றிணை 56

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
'ஏதிலாட்டி இவள்' எனப்
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே

  • புறநானூறு 182

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்,
தமக்கென முயலா நோன்தாள்,
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

  • பரிபாடல் 15

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும்

உசாத்துணை


✅Finalised Page