புதுமைப்பித்தன் தழுவல் விவாதம்

From Tamil Wiki
Revision as of 20:17, 3 August 2025 by Jeyamohan (talk | contribs)

புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் ( 1977- 2000) புதுமைப்பித்தனின் பலகதைகள் தழுவல்களே என்று விமர்சகர்கள் உருவாக்கிய குற்றச்சாட்டும் அதையொட்டி புதுமைப்பித்தன் ஆய்வாளர்கள் அளித்த விளக்கமும் புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் எனப்படுகிறது.

புதுமைப்பித்தன் தழுவல் பற்றி கூறியவை

புதுமைப்பித்தன் ரசமட்டம் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளில் கல்கி எழுதிய நாவல்கள் வெளிநாட்டு நாவல்களின் தழுவல்கள் என்று குற்றம்சாட்டினார். இரவல் விசிறி மடிப்பு என்னும் பெயரில் எழுதிய கட்டுரையில் பில்ஹணன் என்ற பெயரில் வெளிவந்த நாடகமும் திரைப்படமும் மூலத்தைச் சுட்டாமல் சொந்தப்படைப்பாக முன்வைக்கப்பட்டவற்றைச் சாடி எழுதினார்.

புதுமைப்பித்தன்மேல் தழுவல் குற்றச்சாட்டு

புதுமைப்பித்தன் கதைகளில் பயம், நொண்டி, அந்த முட்டாள் வேணு, கொலைகாரன் கை ஆகியவை பிரெஞ்சு சிறுகதையாசிரியர் மாப்பசானின் கதைகளை தழுவி எழுதப்பட்டவை என்று காரை கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுதினார். அதன்பின் கி.மதனகோபாலன் என்னும் பிரெஞ்சு பேராசிரியர் சமாதி என்னும் கதையும் தழுவல் என்று குறிப்பிட்டார். (கி.மதனகோபாலன் 1993, கொலைகாரன் கை. சாந்தா பதிப்பகம்)

விமர்சகர் சிட்டி, சோ.சிவபாதசுந்தரம் ஆகியோர் 1977ல் வெளியான 'தமிழ்ச்சிறுகதை- தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் நூலில் மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி புதுமைப்பித்தனின் பல கதைகள் தழுவல்கள் என்று குறிப்பிட்டனர். அவர்களின் கூற்றை பலரும் மேற்கோள்காட்டத்தொடங்கினார்கள்

புதுமைப்பித்தன் ஆய்வாளர்களின் பதில்

புதுமைப்பித்தன் ஆய்வாளர்களில் முன்னோடியான தொ.மு.சி. ரகுநாதன் சிட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கத்தை அளித்தார். வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு அக்குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது என்றும், புதுமைப்பித்தன் காலத்தில் அவர் வெளியிட்ட கதைகளை ஆய்வுசெய்த பின்னரே தழுவல் அல்லது இலக்கியத் திருட்டுக் குற்றச்சாட்டைச் சொல்லமுடியும் என்றும் விளக்கினார். எம். வேதசகாயகுமார் புதுமைப்பித்தனின் படைப்புகள் வெளியான மூல இதழ்கள் பலவற்றை கண்டு அவருடைய கதைகள் எந்தெந்த பெயர்களில் வெளிவந்தன என்பதை அவர் 1985ல் நிறைவுசெய்த முனைவர் பட்ட ஆய்வேட்டில் பதிவுசெய்தார்.

அந்தச் செய்திகளின்படி புதுமைப்பித்தன் தமிழ் படித்த பெண்டாட்டி என்னும் கதையை மட்டும்தான் புதுமைப்பித்தன் என்னும் பெயருடன் மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அதனுடன் மாப்பசான் கதையின் தழுவு என்றும் குறிப்பிட்டுள்ளார். பிற கதைகள் அவர் பெயரில் வெளியாகவில்லை. அவர் அவற்றை புனைபெயர்களில் எழுதியிருந்தார். அவை அவருடைய புனைபெயர்கள்தான் என்பது ஆய்வாளர்களின் முடிவுதான், அறுதியானது அல்ல. அவர் அத்தனை தழுவல்கதைகளையும் 1934 ல் அவர் எழுதவந்த காலத்தில்தான் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் பொருளியல்தேவைக்காகவோ, சிறுகதை எழுதும் பயிற்சிக்காகவோ அவ்வாறு செய்திருக்கலாம். அக்கதைகள் புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின் 1954ல் ஸ்டார் பிரசுரம் அவர் கதைகளை பல தொகுதிகளாக வெளியிட்டபோது சேர்த்தது என்றும், புதுமைப்பித்தன் மனைவி கமலா விருத்தாசலம் எழுதிய கதைகள்கூட அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தன என்றும் வேதசகாயகுமார் கூறினார்.

சிட்டி மீண்டும் 1988ல் சுபமங்களா இதழில் புதுமைப்பித்தனின் தழுவல் குறித்து பேசினார்கள். அதற்கு ரகுநாதன் கடுமையாக பதிலளித்து அவருடைய விளக்கத்தை பின்னர் என்னும் நூலாகவும் எழுதினார். புதுமைப்பித்தன் மாப்பசானின் நல்ல வேலைக்காரன், ராபர்ட் பிரௌனிங்கின் கவிதையின் தழுவலான பித்துக்குளி, கொன்றசிரிப்பு போன்று மேலும் பல கதைகளை வெவ்வேறு பெயர்களில் தழுவி எழுதியிருப்பதையும் ரகுநாதன் சுட்டிக்காட்டினார். (புதுமைப்பித்தன் கதைகள்: விமர்சனங்களும் விஷமத்தனங்களும்- தொ.மு.சி.ரகுநாதன்)

ஆ. இரா. வேங்கடாசலபதி 2000 த்தில் புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் புதுமைப்பித்தனின் தழுவல்கதைகள் அவர் எழுதவந்த 1934க்குள் வெளியிடப்பட்டன. புதுமைப்பித்தனின் வாழ்நாளில் வெளிவந்த தொகுப்புகளில் அவருடைய எந்த தழுவல்கதைகளும் சேர்க்கப்படவில்லை. அவர் ஒரு கதை தவிர எந்தக் கதையையும் தன் பெயரில் எழுதவில்லை. அவருடைய புகழும் இடமும் தழுவல்கதைகளால் உருவாகவுமில்லை' என்று குறிப்பிட்டு சிட்டி- சிவபாதசுந்தரம் இருவரும் தழுவல் குறித்த விவாதத்தை கூடுதல் ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் உள்நோக்குடன் கொண்டுசென்று புதுமைப்பித்தனை அவதூறு செய்ய முயன்றனர் என்று குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

புதுமைப்பித்தன்