மனிதன் (இதழ்)
மனிதன் (1954) எழுத்தாளர் விந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இதழ். விந்தனின் பத்திரிகை உலக அனுபவங்களும், அவரது தனிப்பட்ட சிந்தனைகளும் இவ்விதழில் இடம் பெற்றன. கலைஞன் பதிப்பகம் இவ்விதழின் சில பகுதிகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
பதிப்பு, வெளியீடு
எழுத்தாளர், பத்திரிகையாளர் விந்தனின் ஆசிரியத்துவத்தில், ஆகஸ்ட் 1954 முதல் வெளிவந்த இதழ் ‘மனிதன்’. கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றிற்கு இவ்விதழ் இடமளித்தது. பத்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த ‘மனிதன்’, பொருளாதாரச் சூழ்நிலையால் நின்றுபோனது.
இவ்விதழில் வெளியான படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை கலைஞன் பதிப்பகம், ‘மனிதன் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டுளது. மு. பரமசிவம், விந்தன் சூரியமூர்த்தி இருவரும் இணைந்து இவற்றைத் தொகுத்துள்ளனர். 1999-ல், இதன் முதல் பதிப்பு வெளியானது.
உள்ளடக்கம்
மனிதன் இதழ் கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றுக்கு இவ்விதழ் இடமளித்தது. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, கா. அப்பாத்துரை, மு. வரதராசன் உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஜெயகாந்தன், பி.எஸ். ராமையா, சுந்தரராமசாமி, கு.ப. சேது அம்மாள் உள்ளிட்டோர் சிறுகதைகளை எழுதியுள்ளனர். தமிழ் ஒளி, பாணன் போன்றோரது கவிதைகள் மனிதனில் இடம் பெற்றன. புதுமைப்பித்தனின் கவிதைகளை விமர்சனம் செய்து ‘தமிழ் ஒளி’ கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
’ஓ லுவினா’, என்ற தலைப்பில் ’ரமன்’ கடித வடிவிலான சிறுகதை ஒன்றை எழுத, ‘ஐயோ, கமல்!’ என்ற தலைப்பில் அந்தச் சிறுகதையைச் ’சாது’ தொடர, ‘ஸ்ரீமதி லுவினா அவர்களுக்கு’ என்று ஜெயகாந்தன் அதைத் தொடர்ந்து எழுதியுள்ளார். ’காலத்தின் தூதரே’ என்ற தலைப்பில் கடித வடிவிலான அந்தச் சிறுகதைத் தொடரை முடித்து வைத்துள்ளார் ஆலாலசுந்தரம். கலைமகள் (இதழ்), உமா போன்ற இதழ்கள் இம்மாதிரியான புது முயற்சிகளை அக்காலத்தில் மேற்கொண்டுள்ளன.
’தெருவிளக்கு’ என்ற தலைப்பில் தனது திரையுலக அனுபவங்களைத் தொடர் நாவலாகத் தந்துள்ளார் விந்தன். ஆனால், இதழ் நின்று போனதால் இத்தொடரும் நின்று போனது.
பங்களிப்புகள்
படைப்புகள் | ஆசிரியர்கள் |
---|---|
சிறுகதைகள் | |
காந்தீயவாதி | விந்தன் |
தமிழச்சி | ஜெயகாந்தன் |
விதுரன் மகன் விதுரன் | பி.எஸ். ராமையா |
ஜீவமலர் | M L. சபரி ராஜன் |
ஆடிவரும் தேனே | பூவை எஸ். ஆறுமுகம் |
நானும் மனிதன் | சுந்தர ராமசாமி |
நினைவும் உருவும் | கு.ப. சேது அம்மாள் |
ஓ.லுவினா | ரமன் |
ஐயோ, கமல்! | சாது |
ஸ்ரீமதி லுவினா அவர்களுக்கு | ஜெயகாந்தன் |
காலத்தின் தூதரே! | ஆலால சுந்தரம் |
யார் மனிதன்? | தங்கமணி |
தெருவிளக்கு (நாவல் தொடர்) | விந்தன் |
கட்டுரைகள் | |
மனிதன் | டாக்டர் மு. வரதராசன் |
மரணத்தை வென்ற மனிதர்கள் | M.L. சபரிராஜன் |
கடவுளைப் படைத்த மனிதன் | அறிஞர் கா.அப்பாத்துரை |
ரசிகமணி டி.கே.சி. | பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை |
ஓராயிரம் பாரதிகள் | நாரண. துரைக்கண்ணன் |
இலக்கிய விமரிசனம் | தமிழ் ஒளி |
வ.வே.சு. கண்ட வழி | தமிழ் ஒளி |
கவிதைகள் | |
பேசமனம் நாணுதடீ | தமிழ் ஒளி |
எத்தும் வழி வகுத்தார் | பாணன் |
புதுமைப் பொங்கல் | டி.வி. சுவாமிநாதன் |
தியாகச் சுடர் | பாணன் |
மாசற்ற தியாகம் | தமிழ் ஒளி |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 09:15:10 IST