first review completed

இருமை நெறிக்குறள்

From Tamil Wiki
Revision as of 18:41, 24 March 2024 by Tamizhkalai (talk | contribs)

இருமை நெறிக்குறள் (மறுபதிப்பு: 2008), இம்மைக்கும்‌ மறுமைக்கும்‌ உரிய வாழ்க்கை அறங்களை குறள்‌ வெண்பாக்களில்‌ கூறும்‌ கிறிஸ்தவ இலக்கிய நூல். இதனை இயற்றியவர் ஜி.எஸ். வேதநாயகர்.

வெளியீடு

இருமை நெறிக்குறள் நூலின் முதல் பதிப்பு விவரங்களை அறிய இயலவில்லை. நூலின் சில பகுதிகள், ஆசியவியல் நிறுவனம் 2008-ல் வெளியிட்ட ’கிறிஸ்தவத் தமிழிலக்கியம் ஓர் அறிமுகம்’ நூலில் இடம் பெற்றன.

ஆசிரியர் குறிப்பு

இருமை நெறிக்குறள் நூலை இயற்றியவர் ஜி.எஸ். வேதநாயகர். இவர், மதுரை அருகே உள்ள தேத்தாம்பட்டி என்னும் கிராமத்தில், 1868-ல் பிறந்தார். வாஷ்பன் துரையால் ஊக்குவிக்கப்பட்டார். மதுரையிலும், சென்னை சூளைமேட்டிலுள்ள அந்திரேயா ஆலயத்திலும் போதகராகப் பணியாற்றினார். இயேசு கிறிஸ்து மீது பல கீர்த்தனைகளை இயற்றினார். மாதர் கும்மி, ஆடவர் கும்மி, சற்குரு சதகம், அமலகுரு சதகம், நெஞ்சுவுரு கட்கம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். 1929-ல், ஜி.எஸ். வேதநாயகர் காலமானார்.

நூல் அமைப்பு

இருமை நெறிக்குறள் நூல் 168 குறள்‌ வெண்பாக்களால்‌ ஆனது. காப்புச்‌ செய்யுள்களும் அவையடக்கமும்‌ நீங்கலாக 10 அதிகாரங்களாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளது.

முதல்‌ நான்கு அதிகாரங்கள்‌ கடவுள்‌ இயல், சுருதி இயல், பக்தி இயல், பாவவியல்‌ எனவும்‌ 5,6,7 அதிகாரங்கள்‌ அறவியல்‌ எனும்‌ பொதுப்‌ பெயரிலும்‌ 8,9,10 அதிகாரங்கள்‌ வீட்டியல்‌, நரஇயல்‌, ஒழிபியல்‌ என்ற பெயரிலும் அமைந்துள்ளன. ஒவ்வோர்‌ அதிகாரமும்‌ மூன்று முதல்‌ பத்து வரை பல உட்தலைப்புகளைக்‌ கொண்டதாக உள்ளது. ஒவ்வோர்‌ உட்தலைப்பிலும்‌ பத்துக்கு மேற்பட்ட குறட்பாக்கள்‌ உள்ளன.

உள்ளடக்கம்

உவமை வளம், சமுதாய உணர்வு மற்றும் அழகியல் தன்மையும் கொண்டதாக இருமை நெறிக்குறள் நூல் அமைந்துள்ளது. விவிலியம் குறித்த செய்திகளும், கிறிஸ்தவ நீதிகளும் எளிய தமிழில் குறள் வெண்பா வடிவில் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்கள்

ஆதிபகவ னருஎறிவு கொட்‌ டொண்ட
ரோதிவ ரைந்ததுமெய்‌ யோத்து

வான்காட்டுஞ்‌ செல்லதர்‌ காட்டுமவை யமைத்த
கோன்‌ காட்டுந்‌ தூய மறை

தலைக்கல்லும்‌ துட்டர்‌ தவறுகல்லும்‌ கொல்லும்‌
மலைக்கல்லு மானார்‌ கிறிஸ்து

சர்ப்ப விவேகம்‌ புறவின்‌ கபடின்மை
நற்பத்தர்‌ கண்ணே யுள

அத்தன்‌ அருட்சட்டம்‌ பழுவன்‌ றவர்வாக்குச்‌
தததம்‌ அடங்கிய தால்‌

வாயில்‌ ஓடுக்கமெனும்‌ வானுலகம்‌ மாபெரிதாம்‌
நோய்‌ எண்ணா துட்புகுவர்‌ நோற்று

பிறப்பின்‌ இருஜீவ னாக விலவென்னிற்‌
பிறப்பிற்‌ பிறவாமை நன்று.

நரைமுடியா னாய பயனென்‌ கொல்‌ கடவுள்‌
தருமுடியொன்‌ றற்ற விடத்து.

காதலிருவர்‌ கருத்தொத்துக்‌ கோடலே
கோதற வாழும்‌ மணம்‌.

சதுரப்‌ பிரசங்கம்‌ இனிதென்பர்‌ தம்மக்கள்‌
குதலைச்‌ சொற்கேளா தவர்‌

மதிப்பீடு

திருக்குறள் மேல் கொண்ட ஈர்ப்பால் குறள் வெண்பாக்களில் ‘இருமை நெறிக் குறள்’ நூலை ஜி.எஸ். வேதநாயகர் இயற்றினார். திருமறை உண்மைகளை அடிப்படையாகக்‌ கொண்டு, அதனைக்‌ கவிதை நயத்துடனும்‌ கற்பனை வளத்துடனும் கூறும் நூலாக‌ இருமை நெறிக் குறள் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • கிறிஸ்தவத் தமிழிலக்கியம் ஓர் அறிமுகம், பொதுப் பதிப்பாசிரியர்: டாக்டர் ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2008


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.