under review

விவிலியம்

From Tamil Wiki
விவிலியம் - பழைய ஏற்பாடு
விவிலியம் - புதிய ஏற்பாடு

விவிலியம் (திருவிவிலியம், வேதம், திருமறை, மறைநூல், சத்தியவேதம் பைபிள், வேதாகமம்), யூதர் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித நூல். விவிலியம் இரண்டு பிரிவுகளை உடையது. முதலாவது பிரிவு, பழைய ஏற்பாடு (Old Testament) என்றும், இரண்டாவது பிரிவு, புதிய ஏற்பாடு (New Testament) என்றும் அழைக்கப்படுகிறது. கடவுள் மனிதனோடு கொண்ட உறவின் வரலாற்றை அறிவிக்கும் நூலே விவிலியம் என்றும். கடவுள் மனிதனுக்கு அளிக்க விரும்பிய ஈடேற்ற வரலாறே விவிலியம் என்றும் கூறப்படுகிறது. விவிலியம், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

விவிலியம் – பெயர் விளக்கம்

நூல் என்று பொருள்படும் பிப்ளோஸ் (Biblos) என்ற கிரேக்க சொல்லிலிருந்து ஒலி பெயர்ப்புச் செய்யப்பட்ட சொல்லே விவிலியம். எகிப்திலுள்ள நைல்நதிக் கரையில் வளர்ந்த ‘பப்ரைஸ்’ என்னும் நாணற் புற்களால் செய்யப்பட்ட தாள்களில் எழுதப்பட்ட நூல்கள் யாவும் கிரேக்க மொழியில் ‘பிபிலியா’ (BIBLIA) என்றும், இலத்தீன் மொழியில் ‘பிபிலோ’ (BIBLIO) என்றும் அழைக்கப்பட்டன. ‘பைபிள்’ என்ற ஆங்கிலச் சொல்லும் ‘விவிலியம்’ என்ற தமிழ்ச்சொல்லும் இச்சொல்லிலிருந்து உருவானவை.

விவிலியத்தின் பிரிவுகள்

விவிலியம் மூன்று மூல மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை எபிரேயம், அரமேயம், கிரேக்கம். விவிலியம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதலாவது பிரிவு, பழைய ஏற்பாடு (Old Testament) என்றும், இரண்டாவது பிரிவு, புதிய ஏற்பாடு (New Testament) என்றும் அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாடு, கிறித்தவர்களுக்கும் யூத சமயத்தவர்க்கும் பொதுவானது. எபிரேய விவிலியம் என்றும் இது அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாடு, கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டது.

ஏற்பாடு - பொருள் விளக்கம்

ஏற்பாடு என்னும் சொல்லுக்கு உடன்படிக்கை, ஒப்பந்தம் என்பது பொருள், இறைவன், பண்டைக் காலத்தில் இஸ்ரயேல் மக்களோடு சீனாய் மலையில் செய்துகொண்ட உடன்படிக்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சமய நூல்களின் தொகுப்பு, பழைய உடன்படிக்கை (பழைய ஏற்பாடு) என அழைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் காலத்திலும் அவர் மறைந்த சில காலத்திற்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்களின் தொகுப்பு புதிய உடன்படிக்கை (புதிய ஏற்பாடு) என அழைக்கப்படுகிறது.

பழைய ஏற்பாடு முப்பத்தொன்பது நூல்களையும், புதிய ஏற்பாடு இருபத்தேழு நூல்களையும் கொண்டது. பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நூல்கள் சட்டநூல்கள், வரலாற்று நூல்கள், கவிதை நூல்கள், இறைவாக்கு நூல்கள் ஆகியன. புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்கள், இறைவாக்கு நூல்கள், கடிதநூல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலிருந்தும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பரிசுத்த வேதாகமம்

விவிலிய மொழிபெயர்ப்புகள்

விவிலியம், கால மாற்றத்திற்கேற்றவாறு பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டு 1800 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. விவிலிய எழுத்தாளர்கள் ஏறக்குறைய நாற்பது பேர், தெய்வீக ஏவுதலினால் விவிலியத்தை எழுதினர் என்பது தொன்மம். இவர்களில் சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் விவிலியம் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் விவிலியம் தான். தமிழில், தொடக்க காலத்தில் சீர்த்திருத்தச் சபை, கத்தோலிக்கத் திருச்சபை என இருவகைச் சபையினரால் விவிலிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு

திருச்சபைகள் தனித்தனியாக மொழிபெயர்ப்புச் செய்வதை விடுத்து அனைத்துச் சபைகளும் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான தமிழ் மொழிபெயர்ப்புச் செய்து பொதுவிவிலியத்தைப் பயன்படுத்துவது என்று கத்தோலிக்க சபை, லுத்தரன் சபை, ஆங்கிலிக்கன் சபை, சீர்த்திருத்தச் சபை எனப் பல சபைகளின் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி, 1970-களில் தமிழ்க் கத்தோலிக்க ஆயர் பேரவையும், சீர்த்திருத்தச் சபைகளின் சார்பில் இந்திய வேதாகமச் சங்கமமும் இணைந்து இம்மொழிபெயர்ப்புப் பணிக்குப் பொறுப்பேற்றன.

பல கிறித்தவச் சபைகளைச் சேர்ந்த 36 விவிலிய அறிஞர்கள் இம்மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டனர். 25 ஆண்டுகள் இப்பணிகள் தொடர்ந்து இறுதியில், நவம்பர் 26, 1996-ல், ‘திருவிவிலியம்-பொது மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் மதுரையில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள ‘Holy Bible’ என்பதற்கு இணையான சொல்லே திருவிவிலியம். ‘பரிசுத்த வேதாகமம்’ என்று அழைக்கப்படும் அப்புதிய மொழிபெயர்ப்பு நூலே, இன்று கிறித்தவர்களின் வேத நூலாக உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page