under review

கும்மி

From Tamil Wiki
கும்மி ஆட்டம்

கும்மி, தொன்மையான நாட்டார் கலைகளுள் ஒன்று. பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம் கும்மி என்று அழைக்கப்படுகிறது. கும்மி, கும்முதல் (கைகளைக் கொட்டுதல்) என்ற சொல்லோடு தொடர்புடையது. கைகளின் ஓசையை மட்டுமே இசையாகக் கொண்டு உருவான ஒருவகை நடனக்கலையே கும்மி. இது இலக்கிய நூல்களில் ‘கொம்மி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

கும்மி - தோற்றம்

கையைக் குவித்து அடிப்பதுடன், ஆடிப்பாடி மகிழும் ஆட்டக் கலையே கும்மி. குரவைக் கூத்தின் வளர்ச்சி நிலையே கும்மி என்பது ஆய்வாளர்களின் கருத்து. ’குழுமி’ என்ற சொல்லிலிருந்து ‘கும்மி’ உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கும்மிகளை பெண்கள் மட்டுமே ஆடி வருவது வழக்கத்தில் உள்ளது என்றாலும், ஆண்கள் கும்மி ஆடுவதும் வழக்கில் உண்டு. ஆண்கள் ஆடும் கும்மி ஒயில் கும்மி என்றும் ‘ஒயிலாட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கும்மி ஆடல்

கும்மியின் வகைகள்

கும்மி மெட்டு மற்றும் பாடலமைப்பைக் கொண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • இயற் கும்மி
  • ஒயிற் கும்மி
  • ஓரடிக் கும்மி

இவை தவிர, ஏலேலக் கும்மி, சந்தக் கும்மி, கீர்த்தனைக் கும்மி, கோலாட்டக் கும்மி போன்றவையும் ஆடப்படுகின்றன

கும்மி – ஆடும் முறைகள்

கும்மிப் பாடல்களை பெண்கள் குழுவாகப் பாடுவதும், இரு பிரிவுகளாகப் பிரிந்து பாடுவதும், வினா – விடையாகப் பாடுவதும், ஒருவர் தலைமையில் குழுமிப் பாடுவதும் வழக்கத்தில் உள்ளது. கைகளைத் தட்டி ஆடுவதில் விரல் தட்டு, உள்ளங்கைத் தட்டு, அஞ்சலித் தட்டு, முழுக்கை தட்டு எனப் பல முறைகள் மக்கள் வழக்கத்தில் உள்ளன. குதித்து ஆடுவது, இட, வலம் சாய்ந்தாடுவது, உடலைக் குனிந்து முன்னும் பின்னுமாய்ச் சாய்ந்து ஆடுவது வழக்கில் உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் ‘கொப்பி’, ‘கைகொட்டிக்களி’ என வேறு வேறு பெயர்களில் கைகளைக் கொட்டி அடித்துப் பாடல்கள் பாடும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்மி – ஆடும் இடங்கள்

ஆலய விழாக்களிலும், சடங்கு நிகழ்வுகளிலும் கும்மி நிகழ்த்தப்படுகிறது. பொங்கல், மாவிளக்கேற்றுதல், பெண் பூப்புச் சடங்கு நிகழ்வுகள், முளைப்பாரித் திருவிழா, கொடை விழா எனப் பல நிகழ்வுகளில் கும்மி அடித்துப் பாடல் பாடப்படுகிறது.

பெண் தெய்வ வழிபாட்டில் கும்மிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கும்மிக்கு முன் குலவையிடுவதும் பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. கைம்பெண் அல்லாதவர் மட்டுமே கும்மியில் கலந்துகொண்டு ஆட வேண்டும் என்பது எழுதா விதியாக உள்ளது.

கும்மியும் நாட்டியமும்

கும்மி ஆடல், நாட்டியத்துடன் தொடர்புடையதாக் கருதப்படுகிறது. தட்டடவு, நாட்டடவு, மெட்ட டவு, குதித்தலடவு போன்ற கால் ஆட்ட முறைகளும், அஞ்சலி, சிகரம் போன்ற கை அசைவுகளும், பல விதமான உடலசைவுகளும் நாட்டியத்துடன் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன.

கும்மி ஆடல்களின் பாடுபொருள்

கும்மி ஆடல்கள் கதைப் பாடல்களை, வரலாற்று நிகழ்வுகளை, தெய்வ வரலாறுகளை மையமாக வைத்து ஆடப்படுகின்றன. புராணக் கதைகள் பற்றியும், போர் வீரர்கள், சிறு தெய்வ வரலாறுகள் குறித்தும் கும்மி ஆடல் நிகழ்த்தப்படுகிறது. ஆலயத் திருவிழாக்களின் போது பெண்கள் கும்மி கொட்டி ஆடுவது வழக்கத்தில் உள்ளது.

வாய்மொழி நாட்டார் கலையாக இருந்த கும்மிப் பாடல்கள், பிற்காலத்தில் இலக்கியச் செல்வாக்குப் பெற்றன. பிற்காலப் புலவர்களாலும், 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுக் கவிஞர்களாலும் பல கும்மிப் பாடல்கள் இயற்றப்பட்டன.

கும்மிப் பாடல் நூல்கள்

இராமலிங்க வள்ளலார் சண்முகர் கொம்மி, நடேசர் கொம்மி ஆகிய நூல்களை இயற்றினார். கோபாலகிருஷ்ண பாரதியார் சிதம்பரக் கும்மியைப் பாடினார். பாரதியாரும் கும்மி மெட்டில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றோரும் கும்மி மெட்டில் பல பாடல்களை இயற்றினர்.

உசாத்துணை

  • கும்மிப் பாடல்கள், டாக்டர் ஏ.என். பெருமாள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு: ஆகஸ்ட் 1982.


✅Finalised Page