under review

செருத்துணை நாயனார்

From Tamil Wiki
Revision as of 19:34, 5 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
செருத்துணை நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

செருத்துணை நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செருத்துணை நாயனார், சோழநாட்டின் வேளாளர் குடியில் தோன்றினார். சிறந்த சிவபக்தராக வாழ்ந்த இவர், சிவனுக்கும் சிவனடியார்களுக்கு யாரேனும் அபராதம் செய்தால் அது பொறுக்காமல் அவர்களைத் தண்டிக்கும் குணம் கொண்டிருந்தார். திருவாரூர் பெருமான் மீது அளவற்ற பக்தி வைத்திருந்தார். அங்கு சென்று தியாகேசருக்கு வேண்டிய திருப்பணிகளைச் செய்து வழிபட்டு வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒருநாள் செருத்துணை நாயனார் திருவாரூர் ஆலயத்தில் சிவப் பணி செய்துகொண்டிருந்தபோது மன்னர் கழற்சிங்கநாயனாரும், அவர் மனைவியான அரசியும் சிவனை வழிபட வந்தனர். ஆலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த அரசி, அப்பொழுதுதான் கீழே விழுந்திருந்த புதிய மலரை எடுத்து முகர்ந்து பார்த்தார். அதுகண்ட செருத்துணை நாயனார், ‘இறைவனுக்குரிய பொருளை அரசியார் மோந்து பார்த்து அசுத்தம் செய்து விட்டார்’ என்று கருதினார். அது சிவ அபராதம் என்பதால் சினந்து, அரசியின் கூந்தலைப் பிடித்துக் கீழே தள்ளி, தனது கூரிய கத்தியை எடுத்து அரசியின் மூக்கை அரிந்து விட்டார்.

அரசர் கழற்சிங்கநாயனார் வந்து கேட்டபோது, செருத்துணை நாயனார் தனது செயலுக்கான காரணத்தை விளக்கிச் சொன்னார். இறைவன் மீது அவர் கொண்டிருந்த பக்தியைக் கண்டு அதிசயித்த அரசர் கழற்சிங்கநாயனார், மலரை முகர்ந்த மூக்கை விட அதை எடுப்பதற்குக் காரணமாக இருந்த கையைத் தான் முதலில் தண்டிக்க வேண்டும் என்று கருதி அரசியின் கையைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார்.

இத்தகைய அருட் தொண்டர்களின் தீரச் செயல் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், வானில் தோன்றி அவர்களை ஆசிர்வதித்தார்.

செருத்துணை நாயனார் வாழ்வாங்கு வாழ்ந்து, சிவத்தொண்டுகள் புரிந்து, இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்தார். தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

செருத்துணை நாயனார், திருவாரூர் ஆலயத்தில் திருப்பணி செய்தது

ஆன அன்பர் திருவாரூர் ஆழித் தேர்வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கிக்
கூனல் இளவெண் பிறைமுடியார் தொண்டு பொலியக் குலவும் நாள்

செருத்துணை நாயனார், அரசியின் மூக்கை அரிந்தது

உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி
கடிது முற்றி மற்று அவள் தன் கருமென் கூந்தல் பிடித்து ஈர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திருப்பூம் மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கைத்
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்

குருபூஜை

செருத்துணை நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆவணி மாதம், பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page