being created

இரா. நாறும்பூநாதன்

From Tamil Wiki
Revision as of 18:13, 6 January 2023 by ASN (talk | contribs) (Para Added; Images Added; InterLink Created:)
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
இரா. நாறும்பூநாதன்
எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன்
கண் முன்னே விரியும் கடல் - புத்தக வெளியீடு
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் - நூல் வெளியீடு

இரா. நாறும்பூநாதன் (1960) எழுத்தாளர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். ’தர்சனா’ நிஜ நாடக இயக்கம், ‘சிருஷ்டி’, வீதி நாடக அமைப்புடன் இணைந்து நாடக இயக்கம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார். திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும், சாதனை மனிதர்களையும் எழுத்தில் பதிவு செய்தார். முற்போக்கு இலக்கியம் சார்ந்து இயங்கி வருகிறார்.

பிறப்பு, கல்வி

நாறும்பூநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில், ஆகஸ்ட் 27, 1960-ல், இராமகிருஷ்ணன் - சண்முகத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். கோவில்பட்டி ஆயிர வைஸ்ய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், கோவில்பட்டி ஜி. வேங்கடசாமிநாயுடு கல்லூரியில் கணிதத்தில்  முதுகலைப் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

நாறும்பூநாதன், வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

நாறும்பூநாதனின் தந்தை இராமகிருஷ்ணன் தமிழாசிரியர். அவர் மூலம் புத்தகங்கள் அறிமுகமாகின. ஆசிரியர் புலவர் மு.படிக்கராமு இவருக்கு தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் மேம்படக் காரணமானார். லயன், முத்து காமிக்ஸ் நூல்களும் அம்புலிமாமா, அணில், கோகுலம் போன்ற இதழ்களும் வாசிப்பார்வத்தை வளர்த்தன. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் மூலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது. செம்மலர், தாமரை, தீபம், கணையாழி, கண்ணதாசன், புதுவிசை போன்ற இதழ்களால் எழுத்தார்வம் உண்டானது. ‘தொழில்’ என்ற சிறுகதையை ‘மொட்டுக்கள்’ இதழில் எழுதினார். தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றோர் இவரை எழுத ஊக்குவித்தனர். சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுதினார்.

திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள்முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட இவரது ’கண் முன்னே விரியும் கடல்' ஒரு முக்கியமான தொகுப்பு நூல். திருநெல்வெலியைப் பற்றிய மிக விரிவான வரலாறாக இவர் எழுதியிருக்கும் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல். இது ‘நெல்லை டைம்ஸ்’ இதழில் தொடராக வெளிவந்தது.

நாறும்பூநாதனின் சிறுகதை ‘கனவில் உதிர்ந்த பூ’ பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி நாளிதழில் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த நாறும்பூநாதனின் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதினார். தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் பக்கத்தில் ‘கழுகுமலையும் வெட்டுவான் கோவிலும்’ என்ற தலைப்பிலும், ‘நம்ப ஊர்’ என்ற தலைப்பில் திருநெல்வேலியை பற்றியும் பல வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.