first review completed

அஞ்சில் ஆந்தையார்

From Tamil Wiki
Revision as of 13:31, 2 November 2022 by Logamadevi (talk | contribs)

அஞ்சில் ஆந்தையார், சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் இவர் இயற்றிய 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

அஞ்சில் ஆந்தையார் என்னும் பெயரிலுள்ள ஆந்தை என்பது, ஆதன் தந்தை என்னும் சொற்கள் இணையும்போது ஆந்தை என அமையும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதுபோல அமைந்திருக்கலாம். அஞ்சில் என்பதை ஊர் பெயராகக் கொண்டு அஞ்சில் என்ற ஊரில் வாழ்ந்த புலவர் இந்த ஆந்தையார் எனவும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

அஞ்சில் ஆந்தையார் இயற்றிய 2 பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் காணப்படுகிறது. குறுந்தொகை நூலின் 294- வது பாடலும் நற்றிணை நூலின் 233- வது பாடலும் அஞ்சில் ஆந்தையார் இயற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 294
  • நெய்தல் திணை
  • பகற்குறிக்கண் தலைவன் சிறைப்புறமாக நிற்ப, தோழி தலைவிக்குக் கூறுவது
  • கடலிலே நீர் விளையாட்டுப் புரிந்தும் கடற்கரைச் சோலையினிடத்தே தங்கியும் மாலையணிந்த மகளிர் கூட்டத்தோடு குரவை கோத்து ஆடியும் அயலாரைப் போல விரைவாக வந்து தலைவன் தழுவிச் சென்றதனால்  அலருண்டாயிற்று
  • இப்பொழுது அங்ஙனம் செய்யாமல் திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசைதலையுடைய பக்கத்தில் கட்டிய பசுந்தளிராற் செய்த தழையைக் காட்டினும் மிக அண்மையிலிருந்து போகாதவனான்
  • இக்காரணத்தால் தாய் நம்மை இற்செறித்துக் காவல் செய்தலை தானே உண்டாக்கினான்.
நற்றிணை 233
  • குறிஞ்சித் திணை
  • வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைவிக்குத் தோழி சொல்லியது
  • தோழி, தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் அறியத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி தன்  சிறிய வலிய குட்டியோடு உயர்ந்த மலைப்பக்கத்து நிற்கும் மேகத்தை தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிகின்றது
  • பெரிய மலைநாடன் உன்னை மணந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலால் அவன்பால் கைமீறிய காதல் கொண்டுள்ளாய்
  • ஆதலால் இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்று தெரிந்தாலும் பெரியோர் கூறிய நெறிப்படி நடக்காதவர் அவர் என்பதை நான் உனக்கு சொல்கிறேன். யோசித்து முடிவு செய்.

பாடல் நடை

குறுந்தொகை 294

கடலுட னாடியும் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்தி பரந்த பைத்தக லல்குல்
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
தழையினும் உழையிற் போகான்
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே.

நற்றிணை 233

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி- தோழி!- முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே

உசாத்துணை

சங்ககால புலவர்கள் வரிசை 4, புலவர் கா. கோவிந்தன். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் கழகம்

குறுந்தொகை 294, தமிழ் சுரங்கம், இணையதளம்

நற்றிணை 233, தமிழ் சுரங்கம், இணையதளம்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.