under review

பாரதி சுராஜ்

From Tamil Wiki
Revision as of 15:55, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
Bharathisuraj.jpg

பாரதி சுராஜ் (சௌந்தரராஜன்) (ஜூலை 12, 1928 - ஆகஸ்ட் 9, 2018) எழுத்தாளர், பாரதி ஆர்வலர், பாரதி கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். ஆர்.பி. சாரதியின் சகோதரர்.

பிறப்பு, கல்வி

சௌந்தரராஜன் ராகவாச்சாரி - கண்ணம்மாள் இணையருக்கு ஜூலை 12, 1928 அன்று சென்னையில் பிறந்தார். ஆர்.பி. சாரதி இவரது சகோதரர். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருமணஞ்சேரி இவரது பூர்வீகம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சென்னைக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார். பள்ளிக்காலத்தில் கல்கியிடமிருந்து பாரதியார் கவிதை நூலைப் பரிசாகப் பெற்றதிலிருந்து பாரதி மேல் ஈடுபாடு கொண்டார்.

லயோலா கல்லூரியில் புதுமுக வகுப்பு படித்த போது கல்லூரித் தமிழ் மன்றத்தின் செயலாளராக இருந்தார்.

தனி வாழ்க்கை

Suraj18.jpg

சௌந்தரராஜன் பதிவுத் துறையில் பணியில் சேர்ந்து 40 ஆண்டுகள் பணியாற்றி 1986-ல் ஓய்வு பெற்றார்.

பாரதி சுராஜ் மணமானவர். குழந்தைகள் மூன்று மகன்கள், ஒரு மகன்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சௌந்தரராஜனின் பெயரை சுராஜ் என சுருக்கினார். 1951-ல் சுராஜ் சைதாப்பேட்டையில் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன், எழுத்தாளர் நா.ராமச்சந்திரன், கவிஞர் இளங்கார்வண்ணன், ஐயாறப்பன் ஆகியோருடன் இணைந்து பாரதி கலைக்கழகத்தைத் துவக்கினார். அதன் தொடக்க விழாவில் பரலி. சு. நெல்லையப்பர், நாரண.துரைக்கண்ணன் போன்றோர் கலந்து கொண்டனர். வெ, சாமிநாத சர்மா, கி.வா.ஜ, சௌந்தரா கைலாசம், ஆ. சீனிவாச ராகவன் போன்ற தமிழறிஞர்கள் இங்கு சொற்பொழிவாற்றினர். பாரதி கலைக்கழகத்தில் மாதந்தோறும் கவியரங்குகள் நடைபெற்றன. பல மரபுக்கவிஞர்களின் உருவாக்கத்தில் இக்கழகத்திற்குப் பங்குண்டு. பாரதி ஆய்வாளர் பெ.சு. மணி பாரதியின் 'ஊழிக்கூத்து' பாடலை இக்கழக நிகழ்ச்சிகளில் பலமுறை பாடியுள்ளார்.

கம்பன் விழா, வள்ளுவர் விழாக்கள், திருக்குறள், திருமுருகாற்றுப்படை, நாலடியார், பாஞ்சாலி சபதம் மற்றும் பாரதி படைப்புகள் பற்றிய வகுப்புகள், மாதம் ஒரு கவியரங்கம் போன்ற நிகழ்வுகள் பாரதி கலைக் கழகத்தில் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தினார். பாரதி பணி செய்தவர்களுக்கு கேடயங்களும், 'கவிமாமணி' பட்டமும் வழங்கப்பட்டன. கல்லூரிகளில் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாரதி கலைக்கழகத்தின் ஆண்டு மலர்கள் கவிதை நூல்களாக வெளிவருகின்றன. 'கவி அமுதம்' என்ற பெயரில் காலாண்டுத் தனிச்சுற்று கவிதை ஏட்டின் ஆசிரியராகவும் பாரதி சுராஜ் இருந்தார்.

சுராஜ் சிறுகதைகள் எழுதினார். சுதேசமித்திரன், தினமணி கதிர், குமுதம் போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகின. சிவாஜி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றார். எழுத்தாளர்கள் பற்றிய நகைச்சுவைத் தொடர் ஒன்றை சிவாஜி இதழில் எழுதினார்.

தீபம், அமுதசுரபி, இலக்கியபீடம், சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன

தினமணி, திருமால், ஆலய தரிசனம், சப்தகிரி போன்ற இதழ்களில் அவரது கட்டுரைகள் வெளிவந்தன. தினமணி சுடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் மதிப்புரைகள் எழுதினார்.

எழுத்தாளர்களைப் பற்றிய நகைச்சுவைத் தொடர் ஒன்றையும் சிவாஜி பத்திரிகையில் எழுதினார். 'மிஸ்டர் முடியாக் கதை, மிஸ்டர் புரியாதது, மிஸ்டர் மொழிபெயர்ப்பு, மிஸ்டர் தழுவல்' என மிஸ்டர் சுராஜ் எழுதிய தொடர்கள் புகழ்பெற்றவை. 'காலச்சக்கரம்' இதழில் இவர் எழுதிய சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவை.

விருதுகள், பரிசுகள்

  • கம்பன் கழகத்தின் கம்பன் அடிப்பொடி விருது
  • பாரதி பைந்தமிழ் செல்வர் -பாரதி இளைஞர் சங்கம்
  • பாரதி விருது -சென்னை வானவில் பண்பாட்டு மையம்

மறைவு

பாரதி சுராஜ் ஆகஸ்ட் 9, 2018 அன்று காலமானார்.

உசாத்துணை

பாரதி சுராஜ் அஞ்சலிக் குறிப்பு- தினமணி,

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 19:12:04 IST