under review

கிராம ஊழியன் (சிற்றிதழ்)

From Tamil Wiki
Revision as of 21:04, 28 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (corrected error in template text)
கிராம ஊழியன்.jpg

கிராம ஊழியன்  1943 - 1947 காலகட்டத்தில் வெளியான தமிழ் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. இவ்விதழ் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள துறையூரில் இருந்து வெளியிடப்பட்டது.

தொடக்கம்

திருச்சியிலிருந்து 'நகர தூதன்’ என்ற வார இதழ்  நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்க ஆதரவு இதழாக வெளிவந்தது. அந்த இதழில் இந்திய தேசிய காங்கிரசை எதிர்த்து கருத்துகள் எழுதப்பட்டன. நகர தூதன் இதழுக்கு போட்டியாகவும், அதற்குப் பதில் அளிக்கவும், காங்கிரஸ் ஆதரவு அரசியல் பத்திரிக்கையாக கிராம ஊழியன் என்ற வார இதழை திருச்சிராப்பள்ளி மாவட்டக் காங்கிரஸ் பிரமுகர்கள்  துவக்கினார்கள். பிறகு, அரசியல் பத்திரிக்கையாக இருந்த கிராம ஊழியன் இலக்கிய இதழாக புதிய வடிவம்,  தோற்றம், உள்ளடக்கத்துடன் ஆகஸ்ட் 15, 1943 முதல் மாதமிருமுறை இதழாக வெளிவரத் தொடங்கியது.

பெயர்க் காரணம்

ஊழியன் பிரஸ் என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டு கிராமப்புறத்தில் இருந்து வெளிவந்ததால் "கிராம ஊழியன்" எனப் பெயரிடப்பட்டது. இது, அரசியல் இதழாக செயல்படுவதற்கு பொருத்தமான பெயராக இருந்தது. இலக்கிய இதழாக மாறியபோது "கிராம ஊழியன்" என்ற பெயர் பொருந்தாமல் இருப்பதாக இதன்  ஆசிரியர்களுக்கு தோன்றினாலும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஆங்கிலேய அரசாங்கம் புதிய பத்திரிக்கை தொடங்குவதற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் அதே பெயரிலேயே தொடர்ந்து இயங்க வேண்டியதாகியது. எனவே, 'கிராம' என்ற எழுத்துகளை மிகச் சிறிதாகவும், ‘ஊழியன்' என்பதைப் பெரிதாய் எடுப்பாகவும் அச்சிட்டு வெளியிட்டனர்.

ஆசிரியர்கள்

அரசியல் இதழாக தொடங்கியபோது துறையூரைச் சேர்ந்த பூர்ணம் பிள்ளை ஆசிரியராக இருந்தார். இவர் மறைவுக்குப் பிறகு அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியாரின் நிர்வாக மேற்பார்வையில், திருலோக_சீதாராமை ஆசிரியராகக் கொண்டு "கிராம ஊழியன்" வெளிவந்தது. ஆகஸ்ட் 15, 1943 முதல் இலக்கிய இதழாக மாறியபோது ஆசிரியராக திருலோக சீதாராமும், கௌரவ ஆசிரியராக கு.ப. ராஜகோபாலனும் செயல்பட்டனர். பிறகு,ஜனவரி 1, 1944 இதழிலிருந்து, கு. ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் மாறியது. ஏப்ரல் 1944 -ல்  கு. ப. ராஜகோபாலன் மறைந்த பிறகு திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியராகவும் வல்லிக்கண்ணன் உதவி ஆசிரியராகவும் செயல்பட்டனர். நவம்பர் 1944-ல் திருலோக சீதாராம் இவ்விதழ் பணிகளிலிருந்து விலகியவுடன் ஆசிரியராக வல்லிக்கண்ணன் தொடர்ந்து செயல்பட்டார்.

படைப்பாளிகள் மற்றும் படைப்புகள்

  • கிராம ஊழியன் இதழ்களில் கு.ப. ராஜகோபாலன் கதை, கட்டுரை ஓரங்க நாடகம் என ஒவ்வொரு இதழுக்கும் இரண்டு மூன்று உள்ளடக்கங்களை எழுதினார். மராட்டிய மன்னன் சிவாஜியின் வரலாற்றைக் கதைபோல் தொடர்ந்து ‘பரத்வாஜன்' என்ற புனைபெயரில் எழுதினார். கரிச்சான் என்ற பெயரிலும்  கு. ப. ரா., எழுதினார்.
  • தி.ஜானகிராமன் "அமிர்தம்" என்ற தன் முதல் நாவலை  தொடர் கதையாக கிராம ஊழியன் இதழில் எழுதினார்.
  • ரா.சு.கோமதிநாயகம் 'மகாயன்' என்ற பெயரில் உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்து எழுதினார்.
  • கோபுலு, சாரதி (ஓவியர்) ஆகிய ஓவியர்கள் இவ்விதழ் மூலமாகவே பத்திரிகை துறைக்குள் நுழைந்னர்.
  • எம்.வி. வெங்கட்ராம், ஆர். நாராயணசுவாமி ( ‘கரிச்சான் குஞ்சு' ), கி.ரா._கோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர் இந்த இதழில் எழுதினார்கள்.
  • ஜனவரி, 1944-ல், 'கிராம ஊழியன் சிறப்பு பொங்கல்  மலரை வெளியிட்டது.  அதில், புதுமைப்பித்தன் முதன்முதலாக வேளூர் வெ.கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில்  எழுதிய  ஒரு கவிதை இடம்பெற்றது. இந்த மலரில்  ந. பிச்சமூர்த்தியின் நீண்ட கவிதையான 'மழை அரசி காவிய'மும் வெளியானது.

முக்கியத்துவம்

திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்த இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தி, எழுதத்தூண்டி அவர்களின் படைப்புகளை வெளியிட்ட குறிப்பிடத்தக்க இதழாக கிராம ஊழியன் விளங்கியது.

நிறுத்தம்

பத்திரிகை விற்பனையில் இலாபம் இல்லாத நிலை ஏற்பட்டதால் அச்சு இயந்திரங்களைப் பெருத்த இலாபத்தோடு விற்க முடியும் என்ற நிலை வந்ததும், பத்திரிக்கையின் உரிமையாளரான அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் இயந்திரங்களை விற்று பத்திரிகையை நிறுத்திவிட்டார். ‘கிராம ஊழியன் மே,16,1947 இதழ் அதன் கடைசி இதழாக அமைந்தது.

உசாத்துணை

  • வல்லிக்கண்ணன் எழுதிய . "தமிழில் சிறு பத்திரிகைகள்" நூல் (2004), மணிவாசகர் பதிப்பகம்.பக் 34- 43


✅Finalised Page