கோவை இலக்கியம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 76: | Line 76: | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZly#book1/ பிரபந்த தீபிகை, தமிழ் இணைய மின்னூலகம்] | *[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekZly#book1/ பிரபந்த தீபிகை, தமிழ் இணைய மின்னூலகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 10:12, 28 October 2024
கோவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பொருள்களை ஒருநிரலில் கோர்ப்பதே கோவை எனப்படுகிறது. அகப்பொருள் இலக்கணத்திற்குரிய துறைகளை வரிசைப்படி கோர்த்துப் பாடுவதால் கோவை என்று பெயர் பெற்றது.
கோவை - பெயர் விளக்கம்
கோர்த்தலே கோவை என்ற சொல்லின் அடிப்படைப் பொருள். அப்பொருளிலிருந்து உருவாகும் அணி, மாலை, வரிசை ஆகியன அச்சொல்லின் துணைப் பொருள்கள். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கோவை என்பதற்கு ‘மணிச்சரம்’ என்று பொருள் கூறுகிறது. இது குறித்து ஆ. சிங்காரவேலு முதலியார் தனது அபிதான சிந்தாமணியில். “மணிச்சரம், மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிகை என ஐவகைப்படும். மேகலை எண் கோவையும், காஞ்சி எழு கோவையும் கலாபம் பதினாறு கோவையும், பருமம் பதினெட்டுக் கோவையும் விரிசிகை முப்பத்திரண்டு கோவையும் உடையதாகும்” என்கின்றார்.
கோவை – அமைப்பு
தலைவன் ஒருவனும் தலைவி ஒருத்தியும் சூழ்நிலையாலும், விதிப்பயனாலும் சந்தித்து அதனால் உண்டாகும் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளும் நிலைக்குச் செல்கின்ற பற்பல நிகழ்வுகளையெல்லாம் விளக்கிப் பாடுவதே கோவை. ஐந்து திணைகளிலும் நிகழும் அகக்கூறுகளை விளக்குவதால் அகப்பொருட்கோவை, ஐந்திணைக் கோவை என்றும் அழைக்கப்படுகிறது. கோவை நூல் 400 பாடல்களைப் பெற்றிருக்கும். கட்டளைக் கலித்துறைப் பாக்களாக இருக்கும். தெய்வங்களையும் வள்ளல்களையும் பாட்டுடைத் தலைமக்களாகப் பொருத்திப் பாடப்படும்.
கோவை நூல்கள், ஒருதுறை கொண்டும் பலதுறை கொண்டும் இயற்றப்படுவதால் ஒருதுறைக் கோவை என்றும் பலதுறைக் கோவை என்றும் பகுக்கப்படுகின்றன.
பார்க்க : அகப்பொருட்கோவை
கோவை – இலக்கணம்
கோவையின் இலக்கணம் பற்றி பன்னிருபாட்டியல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
”கோவை என்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பு எனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப”
(பன்னிருப்பாட்டியல், இனவியல், சூத்திரம்: 170)
கோவை இலக்கியம் அகவடிவம் புறவடிவம் என்னும் இரு வகையான தன்மைகளை கொண்டிருக்கிறது என்பதை, வெண்பாப் பாட்டியல் பின் வருமாறு கூறுகிறது.
“ஆய்ந்த கலித்துறைதான் நானூ றகப்பொருள்மேல்
வாய்ந்த கோவையா மற்றுரைப்பின்
(வெண்பாப் பாட்டியல், செய்புளியல், சூத்திரம்: 15)
”பொருளதிகாரத் திறத்தைப் புகன்று
கலித்துறைகள் வருவது
நானூற்றிக் கோவை”
என நவநீதப் பாட்டியல் (சூத்திரம்; 52) விளக்குகிறது.
”கலித்துறை நானூறாய்
நடப்பது அகப்பொருட்கோவை நாமன்னோ”
எனச் சிதம்பரப் பாட்டியல்.மரபியல் (சூத்திரம்: 3) கூறுகிறது.
”கோவையே அகப்பொருள் கூறுபாடு இசைப்பட
நாவலர் கலித்துறை நானூறு உரைத்தல்”
எனத் தொன்னூல் விளக்கம் (நூற்பா: 277) விளக்குகிறது.
பிரபந்த தீபிகை என்னும் பாட்டியல் நூல் கோவைக்கான இலக்கணத்தையும் அதன் உட்பிரிவுகளையும் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளது.
”இருவகைப் பட்டமுற் பொருளுடன் பன்னான்
செனுங்கருப் பொருளுமதுவும்
ஈரைந் துரிப் பொருள் பொருந்து கைக்கிளை யாதிய
லியவுற்ற வன்புடைத் தாய்ப்
பெருகுகா மப்பகுதி யாங்கள வொழுக்கமும்
பெண்கற் பொழுக்கத்தினும்
பேதமன் றிக்கட்ட ளைக்கலித் துறையினைப்
பெறுமேநா னூற்றாற்றிணை
யுரியகைக் கிளைமுதற் றுறையிறுதி யாமொழி
யுற்றவீ ராறகப்பாட்
டுறுப்பும் வழுவின்றிச் சிற்பபுட னோதலு
முறுமகப் பொருட் கோவையாம்
வருபுணர்தல் முதலைந்து ரிப்பொருள்பிர காசிக்க
வரையாதி யையைந்திணை
வகுத்துச் சிறப்பித்த லைந்திணைச் செய்யுள் வெள்ளை
வஞ்சிக்கலி வணமகவலே” (பிரபந்த தீபிகை, நூற்பா: 8)
இதன் பொருல்: நிலம், பொழுது என்னும் இருவகையான முதற் பொருளையும் தெய்வம் முதலாக உள்ள பதினான்கு கருப்பொருட்களுடன், களவையும் கற்பொழுக்கத்தையும் இணைத்து, கட்டளைக் கலித்துறையாம் நானூறு பாக்களால் திணைக்குரிய கைக்கிளை முதலாகத் துறை இறுதியாகக் கருதப்படும் பன்னிரு அகப்பாட்டு உறுப்புகளும் பிறழாது அமைவது கோவை.
கோவையின் வகைகள்
கோவை இலக்கியங்களுக்கு அதன் உள்ளடக்கம் சார்ந்த அகமரபுகளும் புறமரபுகளும் அடிக்கருத்துக்களாக அமைகின்றன. இவ்விலக்கியங்கள் அதன் வடிவத்தினாலும் பொருள் கூறும் முறையினாலும் வேறுபடுகின்றன. இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் அவை ஐந்திணைக் கோவை, வருக்கக் கோவை, ஒருதுறைக் கோவை, பலதுறைக் கோவை, மும்மணிக்கோவை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
கோவை இலக்கிய நூல்கள்
பொ.யு. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பாண்டிக் கோவையே தமிழின் முதல் கோவை நூலாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட கோவை இலக்கிய நூல்கள் இயற்றப்பட்டன.
உசாத்துணை
- தமிழில் கோவை இலக்கியம், சு. சௌந்தரபாண்டியன், பாரதி பதிப்பகம், முதல் பதிப்பு: 2000
- பிரபந்த தீபிகை, தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page