first review completed

மருட்பா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 31: Line 31:
காரிகைக்கு பின் தோன்றிய [[வீரசோழியம்|வீரசோழியத்தில்]] மருட்பாவின் செய்யுள் உறுப்புகள் மட்டுமே கூறப்பட்டன அதன் பொருண்மை கூறப்படவில்லை. [[இலக்கண விளக்கம்]], முத்துவீரியம் இரண்டு தொல்காப்பியம் சொல்லும் மருட்பாவின் இலக்கணத்தை தொட்டு விளக்கின. தொன்னூல் விளக்கம் மருட்பாவையும் இணைத்து ஐவகைப் பாக்கள் என்றே சொல்கிறது.
காரிகைக்கு பின் தோன்றிய [[வீரசோழியம்|வீரசோழியத்தில்]] மருட்பாவின் செய்யுள் உறுப்புகள் மட்டுமே கூறப்பட்டன அதன் பொருண்மை கூறப்படவில்லை. [[இலக்கண விளக்கம்]], முத்துவீரியம் இரண்டு தொல்காப்பியம் சொல்லும் மருட்பாவின் இலக்கணத்தை தொட்டு விளக்கின. தொன்னூல் விளக்கம் மருட்பாவையும் இணைத்து ஐவகைப் பாக்கள் என்றே சொல்கிறது.


[[சிதம்பர செய்யுட் கோவை]], [[பாப்பாவினம்]] இரண்டும் நால்வகையிலும் மருட்பா செய்யுள்களை இயற்றிக் காட்டின. திருவலங்கல் திரட்டின் இறுதி செய்யுள் வாயுறை வாழ்த்து வகையில் அமைந்த மருட்பா. [[சுவாமிநாதம்]] மருட்பாவை அகவல்பாக்களில் ஒன்றாகக் கருதுகிறது.
[[சிதம்பர செய்யுட் கோவை]], [[பாப்பாவினம்]] இரண்டும் நால்வகையிலும் மருட்பா செய்யுள்களை இயற்றிக் காட்டின. [[திருவலங்கல் திரட்டு|திருவலங்கல் திரட்டின்]] இறுதி செய்யுள் வாயுறை வாழ்த்து வகையில் அமைந்த மருட்பா. [[சுவாமிநாதம்]] மருட்பாவை அகவல்பாக்களில் ஒன்றாகக் கருதுகிறது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்
* இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்

Revision as of 10:33, 11 November 2023

வெண்பா, ஆசிரியப்பா என இரண்டு பாக்களின் கலவையே மருட்பா. மருட்பா வெண்பாவில் தொடங்கி ஆசிரியப்பாவில் முடிவு பெறும். ஆசிரியப்பாவிற்கு உரிய அகவல் ஓசையும், வெண்பாவிற்கு உரிய செப்பல் ஓசையும் கொண்டிருக்கும்.

இலக்கணம்

மருட்பாவை ஐந்தாவது பா வகையாக கருதும் தொல்காப்பியர் வெண்பாவிற்குரிய செப்பலோசை முன்பாகவும், ஆசிரியப்பாவிற்க்குரிய அகவலோசை பின்பாகவும் வருவதே மருட்பா என வரையறுத்தார். காக்கைப் பாடினியாரும் இதே வரையறையை முன்வைத்தார். மருட்பாவின் அடி வர்ணனைக் குறித்து தொல்காப்பியரோ, காக்கைப் பாடினியாரோ சுட்டவில்லை.

நல்லாதனார் மருட்பாவின் இறுதி எழுசீர் ஆசிரியம் பெற்று வரும் என வரையறுக்கிறார். யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் இருவகைப் பாக்களும் சமமாக வருவது சமமருட்பா என்றும், ஒவ்வாது வருவன இயன்மருட்பா என்றும் குறிப்பிடுகிறார்.

மருட்பாவின் வகைகள்

மருட்பா என்ற சொல் மயங்கியபா என்ற பொருளில் வருகிறது. வெண்பா தவிர்த்து ஏனைய பாக்கள் தம்முள் மயங்கி வருவது மருட்பா என்ற கருத்து இருந்தது. பரிபாடலில் அப்படி சில பாடல்கள் மயங்கி வருவதைக் காணலாம். ஆனால் கலிப்பாவும், வஞ்சிப்பாவும் ஆசிரியப்பா, வெண்பாவோடு மயங்கி முடியும் கலவை வழக்கில் இருந்தது இல்லை. எனவே வெண்பாவும், ஆசிரியப்பாவும் மயங்கி வருவதே மருட்பா எனக் கூறப்படுகிறது. தொன்னூல் வெண்பாவிற்குப் பின்னர் அகவல் ஈறாக வந்து மருளும் இயல்புடையதால் மருட்பா எனப் பெயர் பெற்றது என்கிறது. அந்தணப்பாவாகிய வெண்பாவும், அரசப் பாவாகிய ஆசிரியப்பாவும் ஒன்றுவதால் தோன்றும் மருட்பா, அந்தணக் குமாரனும், அரச குமாரியும் கலந்த கூட்டத்துத் தோன்றிய கான்முளை போன்றது என மேற்கோள் செய்யுள் ஒன்று சுட்டுகிறது.

மருட்பாவின் வகைகளாக தொல்காப்பியர் பாடாண் திணைக்குரிய துறைகளாகக் கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பவற்றைச் சுட்டுகிறார். இவற்றுடன் அவையடக்கியலும் மருட்பாவால் பாடப்பெறும்.

கைக்கிளை

கைக்கிளை ஒருதலையான உறவினைக் குறிக்கும். தலைவன் தலைவியின் மேல் செலுத்தும் அன்பு திரும்ப வழங்கப்படாமல் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக இருப்பது கைக்கிளை எனப்படுகிறது. அகத்திணைக்குரிய கைக்கிளையில் தலைவன் அல்லது தலைவியின் பெயர் சுட்டப்பெறுமானால் அதனைப் புறத்திணையின்பாற் படுத்து பாடாண் திணையில் சேர்ப்பது தொல்காப்பியத்தின் கொள்கை. இளம்பூரணர் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் கைக்கிளைப் பாடல்களை மேற்கோள் தருகிறார். நச்சினார்க்கினியர் அகப்புறக் கைக்கிளை எனச் சுட்டுகிறார். "இருவகைப் பாக்கள் மயங்கி வருதல் மருட்பா எனப் பெயர் பெறுதல் போல், அறுவகைத் திணையின் சார்புடைமையின் அகப்புறக் கைக்கிளை மருள் திணை எனப் பெயர் பெறுதல் கூடும்" என்கிறார்.

அகப்புறக் கைக்கிளை மருட்பாவின் பொருண்மையாக அமைகிறது.

புறநிலை வாழ்த்து

’வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப’ என வாழ்த்தும் புறநிலை வாழ்த்து ஆசிரியப்பா வெண்பா அல்லது இவ்விரண்டும் இணைந்த மருட்பாவில் பாடப்பெறுவது என்கிறது தொல்காப்பியம். வழிபடும் தெய்வம் என்பது குல தெய்வத்தைக் குறிக்கிறது. "தினம் காலை ஒருவன் வணங்கி வரும் தெய்வத்தை படர்க்கையாக்கி அத்தெய்வத்தினால் பயன்பெறுபவை முன்னிலையாக்கிக் கூறுதலின் புறநிலையாயிற்று" என்கிறார் நச்சினார்கினியர்.

இளம்பூரணர் தன் உரைநூலில், "நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறத்தே நின்று காப்ப, இல்லறம் முதலிய செல்வத்தினாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு நீபெறும் புதல்வரும் அவர் பெறும் புதல்வரும் வழிவழி சிறப்பெய்தி எல்லீரும் நீடுவாழ்விராமின் என்னும் வாழ்த்து புறநிலை வாழ்த்து எனப்படும். இவ்வாழ்த்து கலிப்பா வகையினும், வஞ்சிப்பா வகையினும் வரப்பெறாது என்று ஆசிரியர் வரையறுத்தலின் விலக்கப்படாத வெண்பாவினும், ஆசிரியப்பாவினும் இவை இரண்டும் புணர்ந்த மருட்பாவினும் வரப்பெறும்" என்கிறார்.

வாயுறை வாழ்த்து

மருந்து போல் வாய்மைமிக்க சொற்களை உணர்த்தும் வாயுறை வாழ்த்து மருட்பாவின் ஒரு வகை. மேலே சொன்ன உரையாசிரியர்கள் மூவரும் 'இருங்கடல் உடுத்த’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலை இதற்கு உதாரணம் காட்டுகின்றனர். யாப்பருங்கலம் போன்ற பின்னூல்களின் உரைகளில் மருட்பாவினால் அமைந்த வாயுறை வாழ்த்து உதாரணமாகக் காட்டப்படுகிறது.

அவையடக்கியல்

நூலின் தொடக்கத்தில் பாடப்பெறும் அவையடக்கமும் மருட்பாவின் ஒரு வகை. "அவர் அடக்குமாற்றால் தன்னை இழித்துக் கூறி அவரைப் புகழ்தல்" என்கிறார் நச்சினார்கினியர். பிற்காலத்தில் தோன்றிய காப்பியங்களில் இவ்வியல்புகளைக் காணலாம். இதுவும் மேலே சொன்ன மூன்றையும் போல் வெண்பா, ஆசிரியப்பா இரண்டிலும் தனித்தனியாகப் பாடப்படுவதும், மருட்பாவில் பாடப்படுவதுமாக அமையும்.

செவியுறை அல்லது செவியறிவுறூஉ

செவியிற்சொல்லுமாறு அறிவுறுத்துவது செவியறிவுறூஉ அல்லது செவியுறை. ஒருவருக்கு அறிவுரைக்கூறி வாழ்த்துதல். உறை என்பது மருந்து எனப் பொருள்படுவதால். செவியுறை என்பது செவி மருந்தாக எனப் பொருள் தருகிறது. "வெகுளுதல் அன்றி பெரியோரிடம் பணிந்து நடத்தல் கடன் என செவியிற்சொல்லுமாறு அறிவுறுத்தல் செவியுறை ஆகும்."

மருட்பாவிற்குரிய திணை

வெண்பாப் பாட்டியல் நான்கு பாக்களுக்கும் உரிய திணைகளை வரையறுக்கிறது. வெண்பாவிற்கு முல்லையும், ஆசிரியத்துக்கு குறிஞ்சியும், கலிப்பாவிற்கு மருதமும், வஞ்சிப்பாவிற்கு நெய்தலும் உரியன என வரையறுக்கும் பாட்டியல் பாலைத் திணையை மருட்பாவிற்கு உரியதாக்குகிறது.

ஏனைய பாவகைகளுக்கு இருப்பது போல் தாழிசை, துறை, விருத்தம் மருட்பாவிற்கு இல்லை என்ற கூற்றும் உண்டு.

பிற்கால யாப்பு நூல்கள்

காக்கைப்பாடினியார், கடிய நன்னியார், நல்லாதனார் ஆகியோரின் உதிரி நூல்களில் மருட்பாவை பற்றிய கருத்து காணப்படுகிறது. இவர்களுக்கு பின் வந்த யாப்பருங்கலத்தில் மருட்பாவை பற்றிய குறிப்பு இல்லை. காரிகைகளில் அதனைப் பற்றிய குறிப்பு தெளிவாக வருகிறது, "புறநிலை வாழ்த்து, கைக்கிளை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ என்னும் நான்கு பொருள் மேலும் வெண்பா முதலாகவும், ஆசிரியப்பா ஈராகவும் வருவது மருட்பா எனப் புலவர் வழங்குவர்" என்கிறது காரிகை.

காரிகைக்கு பின் தோன்றிய வீரசோழியத்தில் மருட்பாவின் செய்யுள் உறுப்புகள் மட்டுமே கூறப்பட்டன அதன் பொருண்மை கூறப்படவில்லை. இலக்கண விளக்கம், முத்துவீரியம் இரண்டு தொல்காப்பியம் சொல்லும் மருட்பாவின் இலக்கணத்தை தொட்டு விளக்கின. தொன்னூல் விளக்கம் மருட்பாவையும் இணைத்து ஐவகைப் பாக்கள் என்றே சொல்கிறது.

சிதம்பர செய்யுட் கோவை, பாப்பாவினம் இரண்டும் நால்வகையிலும் மருட்பா செய்யுள்களை இயற்றிக் காட்டின. திருவலங்கல் திரட்டின் இறுதி செய்யுள் வாயுறை வாழ்த்து வகையில் அமைந்த மருட்பா. சுவாமிநாதம் மருட்பாவை அகவல்பாக்களில் ஒன்றாகக் கருதுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.