under review

மோசிகீரனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 140: Line 140:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|16-Jan-2023, 12:32:57 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:47, 13 June 2024

மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொன்றும், குறுந்தொகையில் இரண்டும் , புறநானூற்றில் நான்கும் உள்ளன. முரசுக் கட்டிலில் அறியாமல் துயின்றபோதும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அவரைத் தண்டிக்காமல் கவரி வீசிய வரலாறு புகழ்பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரையோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூரையோ சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மோசிகீரனார் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (392), நற்றிணையிலும்(342), குறுந்தொகையிலும்(58), புறநானூற்றிலும் ( 50,154,155,186) இடம்பெறுகின்றன. இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார். முரசுக் கட்டிலில் அமர்வதோ, உறங்குவதோ கொலைத் தண்டனைக்குரிய குற்றம்.[1]

முரசுக்கட்டில் என்பதைக் காட்டும் வகையில் அதன் சிறப்பைப் புலவர் மோசிகீரனார் எடுத்துரைத்துள்ளார். முரசு கட்டிலில் அறியாது உறங்கிய தனக்குக் கவரி வீசிய சேரமானின் புலமையைப் போற்றும் அரிய பண்பைப் போற்றி பாடிய பாடலில்,

மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம்’ (புறம்.50)

"வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என்னை’ என்று குறிப்பிடும்பொழுது முரசை அழகுபடுத்தி அதற்கென்று தனியான கட்டில் அமைந்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார் புலவர் மோசி கீரனார்.

ஒருவரது உடலுக்கு உயிரைத் தருவது நெல்லும் நீருமாக இருக்கலாம். ஆனால் நாட்டிலுள்ள மக்களுக்கு மன்னன்தான் உயிர். வேலை வைத்துக்கொண்டு போரில் ஈடுபடும் மன்னன் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்வது அவனது கடமை என்ற பொருள்படும் 'நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே' என்ற பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகி, இன்றளவும் மேற்கோள் காட்டப்படுகிறது.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • முரசு[2] ஓர் அரசச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததையும், அழகுபடுத்தப்பட்டு அதற்கெனத் தனி கட்டில் அமைக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது.(புறம் 50)
  • முரசுக் கட்டிலில் துயில்வது அரசனை அவமதிக்கும், கொலைத் தண்டனைக்குறிய குற்றமெனினும், சேரன் கவரி வீசியது புலமைக்கும் புலவர்களுக்கும் அளிக்கப்பட்ட மதிப்பைக் காட்டுகிறது (புறம் 50).
  • அரசனின் தலையாய கடமை நல்லாட்சி அளித்தலே என்பது சொல்லப்பட்டுள்ளது (புறம் 186).
  • பகைவர் தாக்கியபோது, படையினர் தாக்குப்பிடிக்க முடியாமல் கலங்கியபோது, மன்னன் தான் கோட்டைக்குள் இருப்பதை விரும்பாமல் தானே போர்களத்துக்கு வந்து பகைவரைத் தடுத்து நிறுத்தினான். இதனால் இவனை மக்கள் 'கான்அமர் நன்னன்' என்று போற்றினர். அகப் பொருட்செய்தியொன்றுக்கு உவமை கூறவந்தவர் தற்செயலாக இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார்
  • தலைவி தன்னை ஏற்காவிட்டால் மடல் எறவும் துணிவேன் என்பது தலைவன் கூற்று (நற்றிணை 342). காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்வதே மடலேறுதல் அல்லது மடல் ஊர்தல் எனப்பட்டது.

பாடல் நடை

புறநானூறு 50 (திணை: பாடாண் துறை: இயன்மொழி)[3]

மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
அதனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில்நீ ஈங்குஇது செயலே.

புறநானூறு 154 (திணை: பாடாண் துறை: பரிசில்)[4]

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே.

புறநானூறு 155 (திணை: பாடாண் துறை: பரிசிலாற்றுப்படை )[5]

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள்இனி நயத்தின்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே.

புறநானூறு 186 (திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக்காஞ்சி)[6]

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

நற்றிணை 342 (திணை: நெய்தல்)

மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என,
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்;
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என்னெனப்படுமோ என்றலும் உண்டே

அகநானூறு 392 (திணை: குறிஞ்சி)

தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து,
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன,
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ,
பின்னிலை முனியானாகி, 'நன்றும்,
தாது செய் பாவை அன்ன தையல்,
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின்
தீது இன்றாக, நீ புணை புகுக!' என
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக்
கண மழை பொழிந்த கான் படி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென,
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின்,
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப,
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற,
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல,
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே.

குறுந்தொகை 59 (திணை: பாலை)[7]

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.

உசாத்துணை

பிற இணைப்புகள்

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே -பாடலையொட்டி கலைஞர் கருணாநிதி எழுதிய கவிதை

அடிக்குறிப்புகள்

  1. ஒரு அரசனுக்கு உரிய சிறப்புகள் என்று குறிக்கப்படும் மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, கொடி, முரசு, ஆணை ஆகிய பத்தில் ஒன்றாகச் சிறப்பிடம் பெற்றது முரசு.
  2. முரசும் அரசும்-முனைவர் வளர்மதி
  3. புறம்-50 கவரி வீசிய காவலன்
  4. புறம்-154
  5. புறம் 155
  6. புறம் 186
  7. குறுந்தொகை 59



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jan-2023, 12:32:57 IST