under review

விக்ரமாதித்யன்

From Tamil Wiki
கவிஞர் விக்கிரமாதித்யன் புகைப்படம் - விகடன் தடம் இதழ்

அ. நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் விக்ரமாதித்யன் (செம்படம்பர் 25, 1947) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான நவீனக் கவிஞர்களில் ஒருவர். உத்திராடன் எனும் புனைபெயரிலும் எழுதி வருகிறார். கவிதை, புனைவிலக்கியம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். இலக்கிய உலகில் அண்ணாச்சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் செப்டம்பர் 25, 1947 அன்று அழகியசுந்தரம், லட்சுமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருநெல்வேலியில் வளர்ந்தார். இவருக்கு ஒரு அக்கா மற்றும் இரண்டு தம்பிகள். நான்காம் வகுப்பு வரை திருநெல்வேலி மாவட்டம் அரசு தொடக்கப் பள்ளியிலும், 1958-ம் ஆண்டு தனது குடும்பம் சென்னையில் குடியேறியதால் இடையில் 5 ஆண்டுகள் பள்ளிக் கல்வி இடைநின்றபிறகு அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் கொண்டுவந்த இலவச கல்வி மற்றும் இலவச மத்திய உணவு திட்டத்தின் காரணமாக மேற்கு மாம்பலத்திலிருக்கும் தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரையும், சீர்காழியில் உள்ள உண்டுஉறைவிட நடுநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையும் பயின்றார். பத்து மற்றும் பதினோராம் வகுப்பை திருநெல்வேலியிலுள்ள வாசுதேவநல்லூர் உயர்நிலைப் பள்ளியிலும், PUC எனப்படும் புகுமுக வகுப்பை பாபநாசத்திலுள்ள வள்ளுர் செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

கவிஞர் விக்ரமாதித்யன், மனைவி பகவதி அம்மாள் இணைந்து நடித்த படம்

குறுக்குத்துறை எனும் தனது இணையப் பக்கத்தில் கவிஞர் தன்னை இவ்வாறு அறிமுகம் செய்துகொள்கிறார் - மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவைநிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-க்ளீனர், சர்வர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், குன்றகுடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி, தம்போலா, வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு கிளப் கேஷியர், ஊர் ஊராகப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் என பல பணிகள் செய்திருக்கிறேன். மனைவி பகவதி அம்மாள். இரண்டு மகன்கள் மூத்த மகன் பிரேம்சந்த் நம்பிராஜன், தயாரிப்பாளர், சித்தர்கள் ஜீவசமாதி தேடலில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இளைய மகன் சந்தோஷ் நம்பிராஜன் சர்வதேச புகழ்பெற்ற டூலெட் படத்தின் கதாநாயகன். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் முதன் முதலாக நடித்தார். மேலும் சில படங்களில் துணை நடிகராக, சிறிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். விக்ரமாதித்யனும், மனைவி பகவதி அம்மாளும் இணையராக சேர்ந்து நடித்த இன்ஷா அல்லாஹ் என்ற திரைப்படம் 20-க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விருதுகளையும் 30-க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் உள்ளன. எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய அன்பிற்கு முதுமையில்லை என்கிற சிறுகதையும் எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய ரணம் என்கிற சிறுகதையும் இணையும் புள்ளியை வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் பாண்டியன் பாஸ்கரன் ஆவார்.

இலக்கிய வாழ்க்கை

திரைப்படப் பாடல்கள் பாதிப்பில் கவிஞன் ஆனேன் என்று கூறிய முதல் நவீனக் கவிஞர். கம்பதாசன் மற்றும் கண்ணதாசன் திரைப்படப்பாடல்கள் தன்னை அதிகம் பாதித்த பாடல் வரிகள் என விக்ரமாதித்யன் குறிப்பிடுகிறார். தி.க.சிவசங்கரன், வண்ணதாசன் வழியாக நவீன இலக்கியம் விக்ரமாதித்யனுக்கு அறிமுகமாகியது. திகசி ஆசிரியராக இருந்த தாமரை இதழ்களை விரும்பி வாசித்திருக்கிறார். மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் கவிஞர் மீரா தனது அன்னம் பதிப்பகம் வாயிலாக நவகவிதை வரிசை என்று அதுவரை வெளிவராத பத்து கவிஞர்களின் கவிதை நூல்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்று 'ஆகாச நீல நிறம்'. இக்கவிதை தொகுப்பு தமிழ் நவீன கவிதை வரலாற்றில் மகத்தான கவிதை தொகுப்பாக அமைந்தது. இக்கவிதை தொகுப்பு பற்றி எழுத்தாளர் நகுலன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கவிஞர் விக்ரமாதித்யனுக்கு நகுலன் எழுதிய கடிதங்களில் 61 கடிதங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கடிதங்கள் நகுலனின் வாழ்நிலையையும் விக்ரமாதித்யனின் வாழ்நிலையையும் தமிழ் எழுத்தாளர்களின் இருப்பையும் காட்டுவன. மேலும், அன்றைய இலக்கியச் சூழல், சமூகச் சூழல் என அனைத்தையுமே இந்தக் கடிதங்களிலிருந்து கண்டுகொள்ள முடியும். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது முழுநேர எழுத்தாளர். தான் எழுதிய கதைகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஆட்டோ பயோகிராஃபிதான் எனக் குறிப்பிடுகிறார்.

மண் சார்ந்த கவிஞர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் கவிஞர் விக்ரமாத்தியன். ஒரு நேர்காணலில், என் மனது முழுக்க முழுக்க என் மண்ணில்தான் இருக்கிறது. என்னை சங்கக் கவிதைகள் பாதிக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயர், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் கவிதைகள்தாம் கவர்கின்றன. மற்றபடி ஒரு கவிதை வாசகனாக நான் உலகக் கவிதைகளை வாசிக்கிறேன். பிரமிள் ஒருமுறை, எதிர் கவிதை எழுதுவதற்கு பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள் உந்துசக்தியாக இருக்கும். வானம்பாடிக் கவிதைகள் பூர்ஷ்வா அழகியல்தன்மைகொண்டவை. அவை மக்களுக்குத் தேவையில்லை. பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள்தாம் உண்மையான மக்கள் கவிதைகள் எனச் சொன்னார். அது எனக்கு உபயோகமாக இருந்தது. தமிழில் சுயம்புலிங்கத்தை அப்படியான ஒரு கவிஞராகச் சொல்லலாம். அதே நேரத்தில் நம்முடைய தனிப்பாடல் திரட்டு முக்கியமான எதிர்கவிதைகள் தான் எனக் குறிப்பிடுகிறார்.

காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதற்காகவே தனக்கு விக்ரமாதித்யன் என்று பெயர் போட்டுக் கொண்டதாக கூறுகிறார். காடு பதினொரு மாதம், வீடு ஒரு மாதம் என்பதுதான் இந்த விக்ரமாதித்யனின் ஊழாக இருக்கிறது. திரிபு கொண்டு, குடிகாரனும் கலகக்காரனும் தனியனும் கசந்தவனும் ஆக மாறி அதுவரை தன்னை ஆயிரம் கைவிரித்து துரத்தும் அனைத்துக்கும் எதிர் விசை கொடுத்து நின்றிருந்து, தருக்கி கவிஞனென்று அறைகூவி முடித்ததுமே சலித்து தன் இல்லம் திரும்ப விழைபவர் விக்ரமாதித்யன்.

இலக்கிய இடம்

விக்ரமாதித்யனின் பங்களிப்பு என்பது நவீனத்தமிழ்க்கவிதையில் பொதுவாக இல்லாமலிருந்த தமிழ் மரபுக்கூறுகளை, பழந்தமிழ் இலக்கியமரபின் அழகுகளை உள்ளே கொண்டுவந்தார் என்பதுதான். தமிழ் நவீனக்கவிதை ஐரோப்பிய நவீனத்துவத்தை நெருக்கமாக பின்பற்றியதனாலேயே தமிழின் நீண்ட கவிமரபுடன் தன் உறவை துண்டித்துக்கொண்டதாகவே இருந்தது. அவ்வுறவை அறுபடாமல் தக்கவைத்துக்கொண்டு வெளிப்பட்டவை விக்ரமாதித்யனின் கவிதைகள். அவற்றில் உள்ள தமிழ் மரபுசார்ந்த படிமங்களும் தமிழ்மரபுக்கவிதைக்குரிய மொழியோட்டமும் முக்கியமானவை. தமிழ்நவீனக்கவிதை படிமவியலை தன் முதன்மை அழகியலாகக் கொண்டது என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் படிமவியல் நோக்கில் கவிதையை வரையறைசெய்து எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து முன்வைத்த க.நா.சு.வில் இருந்து தொடங்கியது நவீனத் தமிழ்க்கவிதையின் இயக்கம்.

ஆகவே படிமச்செறிவே நவீனகவிதை என பொதுவாக அறியப்பட்டது. அப்படிமங்கள் ஒரு சொல்கூட அதிகமாக இல்லாத இறுக்கமான சொற்களில் முன்வைக்கப்படவேண்டும் என்றும், இசையற்ற கூற்றுமொழி அமையவேண்டும் என்றும், உணர்ச்சிகள் வெளிப்படவேகூடாது என்றும் அவ்வழகியல் வரையறுத்தது.

அந்தப் பொதுவரையறையை தன் இயல்பால் மீறிச்சென்றார் என்பதே விக்கிரமாதித்யனது கவிதையின் தனித்தன்மை. அவரது கவிமொழி மிக நெகிழ்வானது, சரளமானது. உள்ளோடும் இசை கொண்டது. அதற்கேற்ப அடுக்கி வரும் சொற்களால் ஆனது. நீட்டிச்சொல்லும் பேச்சுத்தன்மை கொண்டது. அத்துடன் பெரும்பாலும் படிமங்கள் இல்லாமல் நேரடியான கவிக்கூற்றையே கவிதையாக முன்வைத்தார் விக்ரமாதித்யன். அதுவே அவரது கவிதைகளின் தனித்தன்மை.

விருதுகள்

  • கவிஞர் வைரமுத்து வழங்கும் கவிஞர்தின விருது
  • வைகறை இலக்கிய வாசகர் விருது
  • கவிஞர் தேவமகள் இலக்கிய வாசகர் விருது
  • தமிழ் ஊடகவியலாளர் வழங்கும் மகாகவி விருது
  • கலை இலக்கிய பெருமன்ற விருது
  • 2008-ம் ஆண்டிற்கான விளக்கு விருது
  • 2014-ம் ஆண்டிற்கான சாரல் விருது
  • கவிஞர் வாலி விருது
  • 2021-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது (இந்நிகழ்வில் விக்ரமாதித்யனின் 19 வாசகர்கள் எழுதிய அவரின் கவிதை விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நாடோடியின் கால்த்தடம் என்ற பெயரில் விஷ்ணுபுரம் பதிப்பதகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் இவ்விருது விழாவையொட்டி கவிஞர் ஆனந்த் குமார் இயக்கத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் பற்றி வீடும் வீதிகளும் எனும் ஆவணப்படம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது )

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  1. ஆகாசம் நீலநிறம் (1982)
  2. ஊரும் காலம் (1984)
  3. உள்வாங்கும் உலகம் (1987)
  4. எழுத்து சொல் பொருள் (1988)
  5. திருஉத்தரகோசமங்கை (1991)
  6. கிரகயுத்தம் (1993)
  7. ஆதி (1997)
  8. கல் தூங்கும் நேரம் (2001)
  9. நூறு எண்ணுவதற்குள் (2001)
  10. வீடுதிரும்புதல் (2001)
  11. விக்ரமாதித்யன் கவிதைகள் (2001)
  12. பாதி இருட்டு பாதி வெளிச்சம் (2002)
  13. சுடலைமாடன் வரை (2003)
  14. தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு (2004)
  15. சேகர் சைக்கிள் ஷாப் (2007)
  16. விக்ரமாதித்யன் கவிதைகள் - II
  17. தீயின் விளைவாக சொல் பிறக்கிறது
  18. ஊழ்
  19. மஹாகவிகள் ரதோற்சவம்
  20. இடரினும் தளரினும்
  21. சொல்லிடில் எல்லை இல்லை
  22. ஆழித்தேர்
  23. சும்மா இருக்கவிடாத காற்று
  24. அவன் எப்போது தாத்தாவானான்
  25. சாயல் எனப்படுவது யாதெனின்
  26. கவிதையும் கத்திரிக்காயும்
  27. வியாழக்கிழமையைத் தொலைத்தவன்
  28. நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம்
  29. இழை இழையாய்
சிறுகதைத் தொகுப்புகள்
  1. திரிபு (1993)
  2. அவன்-அவள் (2003)
கட்டுரைத் தொகுப்புகள்
  1. கவிமூலம் (1999)
  2. கவிதைரசனை (2001)
  3. இருவேறு உலகம் (2001)
  4. தமிழ்கவிதை- மரபும் நவீனமும் (2004)
  5. தன்மை-முன்னிலை-படர்க்கை (2005)
  6. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு (2007)
  7. எல்லாச் சொல்லும் (2008)
  8. நின்ற சொல்
  9. தற்காலச் சிறந்த கவிதைகள்
  10. காடு திருத்தி கழனியாக்கி
  11. பின்னை புதுமை
  12. இந்திர தனுசு (நவீன கவிதை விமர்சனம்)
  13. கங்கோத்ரி - கவிதை உருவான கதை
கடிதத் தொகுப்பு
  1. நகுலன் விக்ரமாதித்யனுக்கு எழுதிய கடிதங்கள்
சுயசரிதைகள்
  1. விக்ரமாதித்யன் கதை
  2. காடாறு மாதம் நாடாறு மாதம்
நேர்காணல் தொகுப்பு
  1. இருட்டின் நிறமும் பகலின் ஒளியும் - விக்ரமாதித்யன் நேர்காணல்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page