வாழும் தமிழ் உலக இலக்கிய விருது
To read the article in English: Living Tamil Award for World Literature


வாழும் தமிழ் உலக இலக்கிய விருது (2026) இந்தியாவின் பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியச் சாதனைக்காக இது வழங்கப்படுகிறது. தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையில் உலக இலக்கியத்தின் சாதனைகளை அடையாளம் காண்பது, அவற்றை இந்திய இலக்கியச் சூழலில் முன்வைப்பது ஆகிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் உலகளாவிய இலக்கிய இயக்கத்தின் பின்னணியில் இந்த விருது வழங்கப்படுகிறது. வாழும் தமிழ் என்னும் அமைப்பும் இயக்கமும் காலம் இதழ் சார்பில் முப்பதாண்டுகளாக நடத்தப்பட்டது. அதன் நீட்சியாக இந்த அமைப்பு நடைபெறுகிறது.
தொடக்கம்
பின்னணி
எழுத்தாளர் ஜெயமோகன் நவீனத் தமிழிலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்கும்பொருட்டு குரு நித்ய சைதன்ய யதி அவர்களின் வழிகாட்டுதலின்படி இலக்கியச் சந்திப்புகளை 1992-ல் தொடங்கினார். அதில் உருவாகி வந்த நண்பர்களால் 1999-ல் சொல் புதிது என்னும் சிற்றிதழ் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக வாசகர் சந்திப்புகளும், பயிலரங்குகளும் நிகழ்ந்தன.
அதன் தொடர்ச்சியாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2010-ல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் தமிழின் தீவிர இலக்கியத் தளத்தில் செயல்பட்டு, எந்த வகையிலும் அரசாலும் கல்வித்துறையாலும் பிற அமைப்புகளாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு தமிழ்ப்பண்பாடும் இலக்கியமும் ஆவணப்படுத்தப்பட்டன. தமிழ்விக்கி சார்பில் பண்பாட்டு ஆய்வாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் செயல்பாடுகள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் விரிவாக்கப்பட்டன.
காலம் செல்வம் 1990 முதல் கனடாவின் டொரெண்டோ நகரில் வாழும் தமிழ் என்ற பெயரில் ஓர் இலக்கிய விழாவை நிகழ்த்தி வந்தார். அந்த நிகழ்வில் இருந்து ஊக்கம் கொண்டு தொடங்கப்பட்டது வாழும் தமிழ் இலக்கிய விழா. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா சார்பில் நியூயார்க் நகரில் ஏப்ரல் 3-4 , 2026 தேதிகளில் வாழும் தமிழ் இலக்கியத் திருவிழா நடத்தப்பட்டது.
தருணம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு சர்வதேச இலக்கிய விருது அளிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் 2017 முதல் விவாதிக்கப்பட்டு வந்தது. 2026-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வைரமுத்து வுக்கு வழங்கப்பட்டபோது தமிழ்ச்சூழலில் மிகக்கடுமையான எதிர்ப்புகள் உருவாயின. இருநூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் அவ்விருதுக்கு அவர் தகுதியற்றவர் என்று ஞானபீடக் குழுவினருக்கு கூட்டுமனு அளித்தனர். ஆயிரம் இலக்கிய வாசகர்களும், எழுத்தாளர்களும் இணைந்து இன்னொரு பெரிய எதிர்ப்பு மனு அளிக்கப்பட்டது. ஓரிரு எழுத்தாளர்கள் தவிர தமிழின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட விருது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதினர்.
ஞானபீடக் குழு மட்டுமன்றி பிற இந்திய இலக்கிய அமைப்புகளும் தொடர்ச்சியாக தமிழிலக்கியத்தை ஏளனத்துடனேயே அணுகிவருகின்றன என்று வாசகர்கள் எண்ணினார்கள். தமிழிலக்கியத்தின் தரமற்ற ஒரு படைப்பையோ படைப்பாளியையோ தமிழின் தலைசிறந்த படைப்பும் படைப்பாளியும் என இந்திய அளவில் ஞானபீடக்குழு போன்ற அமைப்புகள் முன்வைப்பது தமிழில் எழுதப்படும் தரமான இலக்கியத்தை மறைப்பதும், தமிழின் தரமான எழுத்தாளர்களை சிறுமைசெய்வதுமாகும் என்று கருதினர். இது தமிழின் புதிய தலைமுறைக்கும் தமிழிலக்கியம் பற்றிய பிழையான புரிதலை உருவாக்குவது. ஆனால் இந்த அநீதி தொடர்ச்சியாக இந்தியச் சூழலில் இருந்து தமிழ் மேல் இழைக்கப்படுகிறது. (பார்க்க வைரமுத்து ஞானபீட விவாதம்)
இந்தச் சூழலில் தமிழில் இருந்து ஒரு சர்வதேச இலக்கியவிருது உருவாக்கப்பட்டு, தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் என்றால் அது தமிழ் நவீன இலக்கியச் சூழலின் ரசனையையும் சிந்தனையையும் உலகுக்கு அடையாளம் காட்டும் என்றும், தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறை வாசகர்களுக்கு இலக்கியத்தின் சரியான வடிவை விளக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பு
எழுத்தாளர் ஜெயமோகன் மார்ச் 16, 2026 அன்று தன் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் இந்த விருதை உருவாக்கவிருப்பதாக அறிவித்தார். அதன் பின் மார்ச் 25, 2026-ல் புது டெல்லி ஐ.டி.ஸி.மௌரியா விடுதியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விருது முறையாக அறிவிக்கப்பட்டது. முதல் ஊடகவியலாளர் சந்திப்பில் சுசித்ரா, ப்ரியம்வதா ராம்குமார், பார்கவி, லோகமாதேவி, சுனில் கிருஷ்ணன், சரண்யா ரமேஷ் ஆகியோருடன் ஜெயமோகன் கலந்துகொண்டார்.
அமைப்பு
வாழும் தமிழ் (Living Tamil) எனும் உலகளாவிய அமைப்பு உருவாக்கப்பட்டு 26 செப்டெம்பர் 2026 அன்று முறையாக அறிவிக்கப்பட்டது. தமிழ் பேசப்படும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய ஏழு நிலங்களில் இருந்தும் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கிறது.இதில் ஆலோசனைக்குழுவில் பல நாடுகளைச் சேர்ந்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர். செயற்குழுவுக்கு 30 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
நோக்கங்கள்
வாழும் தமிழ் உலக இலக்கிய விருதின் நோக்கங்கள்
- தமிழ் நவீன இலக்கியம் உலகளாவிய நவீன இலக்கியத்தின் நேரடியான செல்வாக்கு கொண்டது. அதேசமயம் இரண்டாயிரமாண்டு தொன்மையான தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் நீட்சியாகவும் அமைவது. தமிழ்ப்பண்பாடு மிக நுட்பமானதும் விரிவானதுமான செவ்வியலையும் உயிர்த்துடிப்புடன் இன்றும் திகழும் நாட்டார்ப் பண்பாட்டையும் ஒரே சமயம் கொண்டது. ஆகவே தமிழ் நவீன இலக்கியம் நவீனத்தன்மை, செவ்வியல்தன்மை, நாட்டார்த்தன்மை ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ளது. இப்பின்னணி தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்தன்மையை உருவாக்குகிறது. இந்த தனித்தன்மை தமிழிலக்கியச் சூழலுக்கு வெளியே பொதுவாக அடையாளம் காணப்படுவதில்லை. ஏனென்றால் அவ்வாறு நவீனத் தமிழிலக்கியம் தமிழகத்துக்கு வெளியே அறிமுகம் செய்யப்படவில்லை. தமிழிலக்கியத்துக்கு வெளியே இருக்கும் சூழல்களில் உள்ள பேசுபொருட்கள் மற்றும் ரசனைகளின் அடிப்படையிலேயே நவீனத் தமிழிலக்கியம் இன்று மதிப்பிடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை மாற்றி, நவீனத் தமிழிலக்கியத்தின் தனித்தன்மையை முன்வைக்கும் நோக்கம் இந்த விருதுக்கு உண்டு. இது நவீனத் தமிழிலக்கியச் சூழலின் அழகியல் நோக்கின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் விருது. அதன் வழியாக நவீனத் தமிழிலக்கியத்தின் ரசனையையும் அறிவார்ந்த தேடலையும் முன்வைப்பது.
- உலகளாவிய சூழலில் இன்று இலக்கியத்தின் அரசியல், சமூகவியல் போன்ற பேசுபொருட்களே பலசமயம் முதன்மையாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் வெவ்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இலக்கியத்தில் அழகியலை விட உள்ளடக்கத்தை மட்டுமே கருத்தில்கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறார்கள். இது இலக்கியம் என்னும் தனித்த கலை - அறிவுச்செயல்பாட்டுக்கே எதிரானது. இலக்கியத்தை அரசியல், சமூகவியல் போன்ற பிற துறைகளின் கருவியாகக் குறைத்துவிடும் தன்மை கொண்டது. இலக்கியம் அதன் அழகியலால் மட்டுமே வாசகனிடம் தொடர்புகொள்வது. ஓர் இலக்கியப்படைப்பை ரசனை அடிப்படையில் அணுகும்போது மட்டுமே உண்மையில் அதை அடையமுடியும். அழகியல் என்பது படைப்பின் மொழி,வடிவம், உட்சிக்கல் அல்லது மறைபிரதி, வரலாற்றுத்தன்மை, தரிசனம் என்னும் ஐந்து அம்சங்கள் கொண்டது. அவை இலக்கியத்தின் அளவுகோல்களாக ஆவது இன்றுவரை உலக இலக்கியச் சூழலில் எழுதப்பட்ட பெரும்படைப்புகளால்தான். உலக இலக்கியத்தின் மிகச்சிறத படைப்புகளுடன் ஒப்பிட்டே பிற படைப்புகள் அளவிடப்படவேண்டும். ஆகவே இலக்கியவாசகன் மட்டுமே ஒரு படைப்பை மதிப்பிட தகுதியானவன். இலக்கியவாசகனின் வாசிப்பு பெரும்பாலும் அகவயமானது, அதன் அழகியல் தர்க்கங்களில் ஒரு பகுதி மட்டுமே புறவயமானது. ஆகவே இலக்கியப் படைப்பு முற்றிலும் புறவயமாக மதிப்பிடப்பட முடியாது. தேர்ந்த வாசகர்களின் ஒரு சூழல் மட்டுமே இலக்கியப்படைப்புகளை மதிப்பிட்டு முன்னிறுத்த முடியும். அத்தகைய வாசகர்களின் ஓர் இயக்கம் இந்த விருதுகளை வழங்குகிறது. இதன் வழியாக அழகியலை அளவீடாகக் கொண்டு உலக இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்படுவார்கள். இந்த அணுகுமுறை மெய்யான இலக்கியத்தை இந்தியச் சூழலிலும் தமிழ்ச்சூழலிலும் அடையாளம் காட்ட உதவும்.
- ஓர் இலக்கிய விருது அதற்குப் பின்னால் உள்ள அறிவியக்கத்தால்தான் மதிப்பு பெறுகிறது. அத்தகைய ஓர் அறிவியக்கம் தமிழில் உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அந்த அறிவியக்கத்தின் ஒரு முகம். இந்த விருதுக்குரிய எழுத்தாளர்களை தெரிவுசெய்வது, விவாதிப்பதன் வழியாக ஆண்டு முழுக்க தொடர்ச்சியாக இலக்கிய வாசிப்பும் விவாதமும் நிகழும். இவ்விவாதங்கள் வாழும் தமிழ் அமைப்பின் இதழான சௌத்பவுண்ட் ரிவியூவில் வெளியாகும்.
நடைமுறை
விருதுக்குரிய படைப்புகள் மற்றும் ஆளுமைகள் உலகளாவிய பரிந்துரை வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். வாழும் தமிழ் அமைப்பு சார்பில் உலகளாவிய விவாதம் வழியாக முதற்பட்டியல் வெளியிடப்படும். அப்படைப்பாளிகள் மீதான வாசிப்புகள் வரவேற்கப்படும். விவாதங்களும் நிகழும். விளைவாக குறும்பட்டியல் உருவாக்கப்படும். குறும்பட்டியல் நடுவர்களுக்கு அளிக்கப்படும். நடுவர்கள் வாழும்தமிழ் இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்த விவாதங்கள் இந்த அமைப்பின் சவுத் பவுண்ட் ரிவ்யூ இதழில் வெளியாகும்.
பரிசு
முதன்மைப்பரிசு
வாழும் தமிழ் உலக இலக்கிய விருது இந்திய ரூபாயில் ஒரு கோடி மதிப்புள்ளது. சர்வதேச அளவில் இது வழங்கப்படும். Living Tamil Award for World Literature என இது அழைக்கப்படும்
நிகழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் விருது வாழும் தமிழ் இலக்கிய அமைப்பு ஒருங்கிணைக்கும் நிகழ்வின்போது வழங்கப்படும்.
இணைப்புகள்
உசாத்துணை
- வாழும் தமிழ் நியூயார்க் விழா 2026 இணையப்பக்கம்
- வாழும் தமிழ் சர்வதேச இலக்கிய விருது- ஊடகச்சந்திப்பு, டெல்லி
- இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து!
- நாம், நம் கனவுகள்!
- நேரலை | ஜெயமோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு| Living Tamil Award for World Literature | Jeyamohan
- ஜெயமோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு | டெல்லி | Living Tamil Award for World Literature| ஸ்ருதி டிவி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Mar-2026, 08:46:19 IST