under review

லோகமாதேவி

From Tamil Wiki
முனைவர் லோகமாதேவி

லோகமாதேவி (அ. லோகமாதேவி) (பிறப்பு: மே 5, 1969) தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பக்கத்தின் மேம்படுத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ்க் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

லோகமாதேவி கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அழுக்குராஜ், பரமேஸ்வரி இணையருக்கு பிப்ரவரி 12, 1970-ல் இரண்டாவது மகளாகப் பிறந்தார். ஒரு அக்காள் மற்றும் ஒரு தம்பி உடன்பிறந்தவர்கள். புனித லூர்து மெட்ரிகுலேஷன் பள்ளி, வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, செயிண்ட் அலோஷியஸ் மேல்நிலைப்பள்ளி தாராபுரம், மற்றும் பொள்ளாச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார்.

நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் (தாவரவியல்) பெற்றார். ஆய்வியல் நிறைஞர்(M Phil) மற்றும் முனைவர் (1997) பட்டங்களை கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

தாவர உலகம் (முனைவர் அ. லோகமாதேவி)

லோகமாதேவி முனைவர் பட்டத்திற்காக பொள்ளாச்சியில் 90-களில் பெரும் பிரச்சினையாக இருந்த தேங்காய்நார்க்கழிவுகளை பூஞ்சைகளின் உதவியால் மட்கச் செய்து உரமாக்கும் ஆய்வை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செய்தார். அந்த ஆய்வு தொடர்பான அவரது 6 சர்வதேச ஆய்வறிக்கைகள் இங்கிலாந்தில் வெளியாயின. சால்போர்ட் (Salford) பல்கலைக்கழகத்தின் அறிவியல் சஞ்சிகை(journal) யில் இந்த ஆறு ஆய்வறிக்கைகள் ஓர் இதழாக வெளிவந்தன. அப்போது இந்த அரிய சாதனை பரவலாகப் பேசப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு இந்த ஆய்வைக் குறித்த பயிற்சியை அளிக்கும் வாய்ப்பையும் சால்போர்ட் பல்கலைக்கழகம் லோகமாதேவிக்கு வழங்கியது.

தனி வாழ்க்கை

மணமானவர். சரண், தருண் இரு மகன்கள். இருபது ஆண்டுகளாகத் தாவரவியல் துறை பேராசிரியை மற்றும் தலைவராக பொள்ளாச்சி, நல்லமுத்துகவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி. இவரின் வழிகாட்டுதலில் 16 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றுள்ளனர். சோளிகர் பழங்குடியினரின் தாவரங்களில் ஆய்வு செய்து ஒருவர் இவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

Sakee.jpg
வானவில் மரம்

லோகமாதேவி தாவரவியல் துறைசார் எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். தாவரவியல் தொடர்பான புத்தகங்கள் எழுதியுள்ளார். விஞ்ஞான் ப்ரசார் வெளியிட்ட "தாவர உலகம்" முக்கியமான படைப்பு. தொடர்ந்து தாவரவியல்-இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இலக்கிய, நாளிழ்களில் எழுதி வருகிறார். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

தினமலரில் 'பட்டம்' சிறப்பிதழில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தாவரவியல் கட்டுரைகள் எழுதினார். சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை போன்ற மின்னிதழ்களிலும், எழுத்தாளர் ஜெயமோகன் தளத்திலும் தாவரவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். தாவரவியல் கலைச்சொல் அகராதியைத் தயாரித்து வருகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசுக்கலைக்கல்லூரிகளில் இளங்கலை தமிழ்ப்பாடத்திட்டத்தில் இவரது தொன்மங்களில் தாவரங்கள் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பக்கத்தின் மேம்படுத்துனர் மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் பங்களிப்பாளர், மேற்பார்வையாளர்.

மொழியாக்கம்

லோகமாதேவி ஜி. கே. செஸ்டர்டனின் (G.K.Chesterton) 'நீலச் சிலுவை' (Blue Cross) சிறுகதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.[1] நவோமி க்ளெய்ன்(Naomi Klein) Der Spiegel' இதழுக்கு அளித்த புவி வெப்பமயமாதல் குறித்த நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் கனலி இதழில் வெளிவந்தது[2].

மரங்களின் மறை வாழ்வு 2025 (மொழியாக்கநூல்) காலச்சுவடு வெளியீடு.

வகுப்புகள்

  • லோகமாதேவி முழுமையறிவு அமைப்பின் சார்பில் தாவரவியல் அறிமுக நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்காக நடத்தி வருகிறார்
  • லோகமாதேவி ஈரோடு மையமாக்கிச் செயல்படும் அறக்கல்வி இயக்கம் சார்பில் தாவரவியல், சூழியல் அறம்பற்றிய வகுப்புகளை கல்லூரி மாணவர்களுக்காக நடத்தி வருகிறார்.

விருதுகள்

  • தினமலர் நாளிதழும், கனடாவின் அநித்தம் அமைப்பும் இணைந்து வழங்கும் அறிவியலைத் தமிழில் எழுதுவதற்காக 'தோழி விருது', 2019
  • காக்கைகூடு அமைப்பினர் வழங்கும் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருது, 2022
  • தாவரவியல் மற்றும் சூழியல் துறைகளில் தலைசிறந்த ஆளுமைகளுள் ஒருவராக விளங்குவதற்காகவும், சமூகப் பங்களிப்புக்காகவும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது, 2025
  • தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து முத்தச்சிறுகிளை நூலுக்காக 2024-ம் வருடத்திற்கான சிறந்த அறிவியல் நூலுக்கான முனைவர் உ லோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது-2025
  • உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் அளித்த, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் கூடிய 2025-ம் ஆண்டுக்கான சிறப்பு விருது.
  • முன்னாள் மாணவர்கள் அளித்த outstanding educator award-2025
  • 2026-க்கான பபாசியின் சிறந்த சிறுவர் அறிவியல் எழுத்தாளருக்கான நெல்லை சு.முத்து விருது.

நூல் பட்டியல்

  • இயற்கை முறை மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித்தோட்டம் 2017-Pradag print, Coimbatore
  • தாவர உலகம் 2022-விஞ்ஞான் பிரசார் வெளியீடு
  • ஸாகே-போதையின் கதை 2023-விஷ்ணுபுரம் வெளியீடு
  • வானவில் மரம் 2023- அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
  • விலக்கப்பட்ட கனி 2024- அகநி பதிப்பக வெளியீடு
  • முத்தச்சிறுகிளை 2024- அகநி பதிப்பக வெளியீடு
  • அந்தரத்தாமரை 2024-அகநி பதிப்பக வெளீயீடு
  • மரியா சிபில்லா 2024 - NCBH வெளியீடு
  • மலர்ப்பித்து 2024-அகநி பதிப்பக வெளீயீடு
  • இந்தியாவின் சொந்த மரங்கள், 2024- அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
  • தந்தைப்பெருமரம் 2025- தன்னறம் நூல்வெளி & மனு அறச்சாலை வெளியீடு
  • கல்லெழும் விதை 2025- தன்னறம் நூல்வெளி & மனு அறச்சாலை வெளியீடு
  • நுண்ணுயிருலகு 2025-அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
  • மரங்களின் மறை வாழ்வு 2025 (மொழியாக்கநூல்) காலச்சுவடு வெளியீடு.
ஆங்கில நூல்கள்
  • A Compendium of NGM college Campus Flora
  • Plant Anatomy, A practical handbook
  • Medicinal Monocots
  • Ethnobotanical traditions of kodanthur tribes

பிற இணைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் உள்ள லோகமாதேவியின் சில கட்டுரைகள்:

காணொளிகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Aug-2022, 18:43:55 IST