ருக்மிணி தேவி அருண்டேல்
- ருக்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ருக்மணி (பெயர் பட்டியல்)
- தேவி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவி (பெயர் பட்டியல்)
ருக்மிணி தேவி அருண்டேல் (பிப்ரவரி 29, 1904 - பிப்ரவரி 24, 1986) நடனக் கலைஞர். இந்தியாவின் மரபு, பாரம்பரியக் கலைகளின் மீட்டுருவாக்கத்தில் பங்காற்றினார். கலாஷேத்ரா நடனப் பள்ளியை நிறுவியவர். தஞ்சாவூர் பாலசரஸ்வதியுடன் இணைந்து தென்னிந்திய பாரம்பரிய நடனத்தை மீட்டுருவாக்கம் செய்ய பணியாற்றினார். விலங்கு வதைத் தடைச் சட்டம் உருவாகக் காரணமானவர்.
பிறப்பு, கல்வி
ருக்மிணி தேவி பிப்ரவரி 29, 1904-ல் நீலகண்ட சாஸ்திரி, சேஷம்மாள் இணையருக்கு மகளாக மதுரையில் பிறந்தார். ருக்மிணி தேவியுடன் பிறந்தவர்கள் ஏழு பேர், நாலு சகோதரர், மூன்று சகோதரிகள்.[1] நீலகண்ட சாஸ்திரி மெட்ராஸ் மாகாணத்தின் நிர்வாக பொறியாளராகப் பணியாற்றினார். நீலகண்ட சாஸ்திரி தென்னிந்தியாவின் முக்கிய கட்டுமானம், அணைக்கட்டுமானத்தில் பங்குக்கொண்டதால் ருக்மிணிக்கு சீரான பள்ளிக்கல்வி அமையவில்லை. ருக்மிணி, தமிழை சேஷம்மாளிடம் கற்றுக் கொண்டாள். பிற பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு வீட்டிலேயே கல்வி பயின்றார். இளமையில் இரவுகளில் நீலகண்ட சாஸ்திரி ருக்மிணிக்கு ராமாயணம் வாசித்துக் காட்டுவார். ருக்மிணி பின்னாளில் ராமாயணத்தை ஆறு முழு நீள நாடகமாக மாற்றினார்.
நீலகண்ட சாஸ்திரி நிடாமங்கலத்தில் பணியாற்றிய போது ருக்மிணி அங்குள்ள ஆரம்பப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார். பொ.யு. 1916-ல் சாஸ்திரி ஓய்வு பெற்ற பின் புதுக்கோட்டை மகாராஜாவால் முதன்மை பொறியாளராக நியமிக்கப்பட்டார். ருக்மிணி புதுக்கோட்டையில் ஆண்கள் பள்ளியில் பயின்றார். ருக்மிணி மாலையில் வீட்டில் இசையும், வயலினும் பயின்றார். ருக்மிணியின் வயலின் ஆசிரியர் ருக்மிணியை மகா வைதியநாத ஐயரிடம் சங்கீதம் பயில செய்தார்.
பொ.யு. 1919-ல் ருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெஸண்ட் துவக்கிய தியசோஃபிக்கல் சொஸைட்டியில் ஈடுபாடு கொண்டதால் புதுக்கோட்டையில் பணி ஒய்வுப் பெற்று சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
தனி வாழ்க்கை
பொ.யு. 1902-ல் அன்னி பெசண்ட்டின் தியோசோஃபிகல் சொசைட்டியில் பணியாற்ற வந்த ஜார்ஜ் சிட்னி அருண்டேல் பொ.யு.1913-ல் பனாரஸ் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னைக்கு மாறினார். அங்கே பொ.யு. 1919-ல் நீலகண்ட சாஸ்திரியை காண வந்த போது ருக்மிணி தேவியுடன் ஏற்பட்ட காதலால் 1920-ல் அவரை திருமண செய்துக் கொண்டார். இருவரும் திருமணம் செய்துக் கொண்ட போது அருண்டேலுக்கு நாற்பத்தோரு வயது, ருக்மிணிக்கு பதினாறு வயது. இருவரின் திருமணமும் ருக்மிணி வீட்டிலும், தியோசோஃபிகல் சொசைட்டியிலும் விவாதமாகியது. அருண்டேல் வயதானவர் என்பதும், பிரிட்டிஷ்காரர், கிறிஸ்தவர் என்பதும் ருக்மிணி தேவியின் வீட்டில் விவாதமாகியது. ருக்மிணியின் தாய் மாமா டி.எம். கிருஷ்ணசாமி
இதைப் பற்றி பின்னாளில் ருக்மிணியிடம் கேட்ட போது "அருண்டேலுடன் சிறிது காலம் வாழ்ந்தாலும் சந்தோஷமாக இருப்பேன் என்றும், அதை விட மகிழ்வற்ற இளம் ஆண் ஒருவனுடன் நீண்ட நாள் வாழ்வது வாழ்க்கையை வீணடிப்பது" எனக் குறிப்பிடுகிறார்.
அமைப்புப் பணிகள்
ருக்மிணி தேவி அடையாறில் பிரம்ம ஞான சபையில் ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து பணியாற்றினார். 1937-ல் நெதர்லாந்திலுள்ள பன்னாட்டு பிரம்மஞானசபையின் உறுப்பினராகி ருக்மணி தன் வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
ருக்மிணி 1952-ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாட்டின் வனவிலங்கு பாதுகாப்புதுறைத் தலைவராக செயல்பட்டார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக ருக்மிணி இருந்த போது, விலங்கு வதை சட்டத்திற்கான முன்வரைவை தாக்கல் செய்யக் காரணமாக இருந்தார். அரசே சட்டம் இயற்ற முன்வந்ததால் முன்வரைவை திரும்பப் பெற்றார். 1977-ல், அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலை சார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார்.
கலை வாழ்க்கை
தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் ருக்மிணி கலந்து கொண்டார். ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். கிரேக்க நடனமும் கற்றார்.
ருக்மணிக்கு திருமணத்திற்குப்பின் ஐரோப்பாவில் இசை, சிற்பம், ஓப்ரா, பாலே முதலிய பல கலைகள் அறிமுகமாயின. 1927-ல் அருண்டேலுடன் ஆஸ்திரேலியா சென்ற போது ரஷ்ய நாட்டியக்கலைஞரான அன்னா பாவ்லோவைச் சந்தித்தார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், ருக்மணி பாலே நடனம் கற்றார். பாவ்லோ, இந்திய பாரம்பரிய நடனத்தையும் கற்குமாறு ருக்மிணியை கேட்டுக்கொண்டதற்கிணங்க அதில் ஈடுபாடு கொண்டார்.
சென்னை மியூசிக் அகாடமியில், 1933-ல் கிருஷ்ண அய்யர் ஏற்பாடு செய்த தேவதாசிகளின் சதிர் எனப்படும் தமிழக நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ருக்மிணிக்கு அதன் மீது ஈடுபாடு வந்தது. தேவதாசிகள் மட்டுமே கற்க முடிந்த கலை என்ற எதிர்ப்பைத் தாண்டி அதைக் கற்றார். அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மாவிடம் சதிர் ஆட்டம் கற்றார். ருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் ருக்மணிக்கு உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் தமிழகநடனக்கலையைப் பயின்றார். ருக்மிணி 1935-ல் தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அடையாறு ஆலமரத்தின்கீழ் அரங்கேற்றம் செய்தார்.
சதிர் ஆட்டம் பரதமாதல்
தேவதாசிகள் மட்டும் பயின்று வந்ததும் சதிர் என அழைக்கப்பட்டதுமான தமிழக நடனக்கலையை அனைத்துப் பிரிவினரும் கற்கும் நோக்கில் புத்துருவாக்கம் செய்தார். அந்நடனம் முன்பு கூத்து, பரதம் என இரு பெயர்களால் அழைக்கப்பட்டது. ருக்மிணிதேவி அதற்கு பரத என்னும் பெயரை தெரிவுசெய்தார். தமிழ் நடனக்கலையை மீட்டுருவாக்கம் செய்ததில் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் தஞ்சாவூர் பாலசரஸ்வதி ஆகிய இருவருக்கும் முக்கியப்பங்குண்டு.
மாற்றங்கள்
- தமிழக நடனக்கலை மரபான முறையில் வட்டமாக பார்வையாளர் அமர்ந்திருக்க நடுவே நடனக்கலைஞர் நின்று ஆடும் முறையிலோ, அல்லது திறந்த வெளியில் ஆடும் முறையிலோ அமைந்திருந்தது. பக்க வாத்தியக்காரர்கள் நடனக்கலைஞருடன் நின்று, அல்லது நடந்து வாசித்தனர். ருக்மிணிதேவி மேலைநாட்டு சதுரவடிவ (புரோசீனியம்) அரங்குக்காக நாட்டியத்தை மாற்றினார். பார்வையாளர் நேர் எதிரே இருக்கைகளில் அமர்ந்தனர்.பக்கவாத்தியக்காரர்களும், பாடுபவர்களுயும் மேடையில் ஓரமாக அமருமாறு செய்யப்பட்டனர்
- பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸனின் உதவியாலும் புதுவித உடைகளுயும், ஒப்பனையும் செய்யப்பட்டது.
- கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பு மாற்றியமைக்கப்பட்டது.
விவாதம்
தென்னிந்தியாவின் ம் இந்திய கலைகளின் மறுமலர்ச்சி 1930-க்கு பிறகு தொடங்கியது. இக்காலகட்டத்தில் இந்தியா முழுக்க கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி போன்ற கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன. முதன்மையாக அவை அரசசபை, கோயில்சபை, விழாக்கூட்டம் ஆகிய களங்களில் இருந்து உள்ளரங்கமேடைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டன. நவீன ஒளியில் நிகழ்த்தப்படுவதற்கு ஏற்ப ஆடையணிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இக்கலைகளில் இருந்த மிகையான பாலியல்கூறுகள் மட்டுப்படுத்தப்பட்டு பக்தி சார்ந்த பேசுபொருட்களும், செவ்வியல் காவியங்களின் கூறுகளும் சேர்க்கப்பட்டன. சதிர் என அழைக்கப்பட்டுவந்த அன்றைய நாட்டியத்தில் ஓங்கியிருந்த பாலியல் அம்சங்களே அவற்றின் இயல்பான கலையம்சங்கள் என்றும், அவற்றை நீக்குவது விக்டோரிய ஒழுக்கமுறையை புகுத்துவது என்றும் விமர்சிக்கப்பட்டது. ருக்மிணிதேவி சதிரை அழித்து பரதநாட்டியத்தை உருவாக்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டார்.
ஆனால், கோயில்களைச் சார்ந்தே இருந்த மரபான கூத்துக்கலை நுண்ணிய பண்பாட்டுக்கூறுகள் கொண்ட செவ்வியல்கலையாகவே இருந்திருக்கமுடியும் என்றும், தமிழகச் செவ்வியல் இசை அப்படித்தான் இருந்தது என்றும், அதில் உள்ள மிகையான பாலியல்கூறுகள் அது நூறாண்டுகளில் அடைந்த சரிவின் விளைவாக உருவானவையே என்றும், அவற்றைக் களைந்து அந்நடனத்தின் முதன்மை வடிவிலேயே அதை முன்வைப்பதாகவும் ருக்மிணிதேவி சார்பில் சொல்லப்பட்டது. கூத்து, பரதம் என்னும் இரு சொற்களே தமிழ்நடனக்கலைக்கு உரியவை என்றும்,பரதக்கலை என்னும் சொல் 12 மாம் நூற்றாண்டு முதல் இருந்து வருவது என்றும், அதையே ருக்மிணிதேவி பயன்படுத்துதினார் என்றும் சொல்லப்பட்டது. ருக்மிணிதேவி புதிய நடனக்கலையை உருவாக்கவில்லை, அன்றிருந்த தமிழ் நடனக்கலையின் இரண்டு போக்குகளில் செவ்வியல்தன்மை கொண்ட போக்கை முன்னெடுத்தார். அதில் நவீன மேடையமைப்பு, ஒப்பனை ஆகியவற்றை இணைத்ததும், இந்திய லாஸ்ய நடனங்களின் பொதுவான பேசுபொருட்களான காவியக்கூறுகளையும் பக்தியையும் இணைத்ததுமே அவருடைய பங்களிப்பு.
கலாக்ஷேத்ரா
1936-ல் கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளியை ருக்மிணி தேவி தொடங்கினார். சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டியது என்பதை வலியுறுத்துவதற்காக, கலாக்ஷேத்ராவைத் தோற்றுவித்தார். பிற்காலத்தில் அவர் கலாக்ஷேத்ராவின் தலைவராகப் பதவியேற்றார். கலாக்ஷேத்ரா அடையாறு ஆலமரத்தின்கீழ் ராதா பர்னியர் என்ற ஒற்றை மாணவியோடு தொடங்கப்பட்டது.
ருக்மிணி கலாக்ஷேத்ரா மாணவர்களுக்கு பயிற்றுவிக்க சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஒடிசி நாட்டிய தாரகை சஞ்சுக்தா பாணிக்கிரகி ஆகியோர் கலாக்ஷேத்ராவின் மாணவர்கள். கலாக்ஷேத்ராவில் சங்கீத சிரோமணி பயிற்சி வகுப்பை ருக்மிணி அருண்டேல் துவங்கியபோது இசைவாணர் டைகர் வரதாச்சாரியார் முதல்வராக இருந்தார். டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சாரியார், வீணை கிருஷ்ணமாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ அய்யர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலாக்ஷேத்ராவுடன் இணைந்து பணியாற்றினர். வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். ருக்மிணி துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. 'தென்னிந்திய ஷாந்தி நிகேதன்' என்று அழைக்கப்பட்டது.
பிற செயல்பாடுகள்
- ருக்மிணி 1937-ல் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டோபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தும் முறையினை ருக்மிணி பயின்றார். அதோடு இல்லாமல் கலம்காரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்.
- 1975-1986 காலகட்டங்களில் லாப நோக்கற்ற அமைப்பான கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார் ருக்மிணி. இதன் மூலம் இளைஞர்களை பாரம்பரியமான கைவினைப் பொருட்களான சிலைவடித்தல், பானை செய்தல், நெசவு ஆகியவை செய்ய ஊக்கப்படுத்தினார். 1959-ல் இந்திய சைவ காங்கிரஸ் அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் தலைவராக இறுதி வரை பணியாற்றினார்.
விருதுகள், அங்கீகாரம்
- 1956-ல் இந்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கியது.
- 1984-ல் மத்தியப்பிரேதச அரசு காளிதாஸ் சம்மன் விருது வழங்கியது.
- விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் 'தேசிகோத்தாம'(Desikottama) விருதை இந்திராகாந்தி வழங்கினார்.
- 1968-ல் சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் விருது வழங்கியது.
- விலங்குகளின் நலனில் கொண்ட அக்கறைக்காக விக்டோரியா மகாராணி வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
- 1977-ல் மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த போது அதை மறுத்தார்.
- ருக்மணி இறந்தபின் இந்திய அரசு அவர் நினைவாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
- 2016-ல், கூகிள் நிறுவனம், ருக்மணி தேவியின் 112-வது அகவையை தமது கூகிள் டூடில் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது.
மறைவு
பிப்ரவரி 24, 1986-ல் ருக்மிணி காலமானார். இவருடைய மறைவின் போது அப்போதைய தமிழக ஆளுநர் எஸ்.எல். குரானா, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
நூல்கள்
ருக்மிணி புத்தகங்கள் எதுவும் எழுதவில்லை. கைப்பிரதிகள், கட்டுரைகள் எழுதினார்.
கட்டுரை தலைப்புகள்
- The Teacher and the Pupil
- My Theosophy
- The Creative Spirit
- Art and Education
- Dance and Music
- Yoga: Art or Science
- Woman as Artist
- Theosophy as Beauty
- Message of Beauty to Civilizations
உசாத்துணை
- ருக்மிணி தேவி அருண்டேல்: தினமணி
- ருக்மிணி தேவி அருண்டேல்: Theosophy wiki
- இந்தியத் திரு நாட்டின் மறு மலர்ச்சியில் பெண்கள்
- சதிர், பரதம்- ஒரு விவாதம்
அடிக்குறிப்புகள்
- ↑ ஶ்ரீராம், சுப்பலட்சுமி, சிவகாமு, பத்மநாபன், யக்னேஸ்வரன், ருக்மிணி, விசாலாட்சி, சுப்ரமணியம்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Oct-2023, 17:54:42 IST

