under review

மு.சித. பெத்தாச்சி செட்டியார்

From Tamil Wiki
பெத்தாச்சி செட்டியார்
மு.சித. பெத்தாச்சி செட்டியார்

பெத்தாச்சி செட்டியார் (மு.சித. பெத்தாச்சி செட்டியார்; முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார்) (பிப்ரவரி 08, 1889 - ஏப்ரல் 30, 1924) ஆண்டிப்பட்டியின் ஜமீன்தார். கரூர் நகராட்சியின் முதல் தலைவர். பல தமிழ் இதழ்கள் வெளிவரப் பொருளுதவி செய்தார். பல எழுத்தாளர்களையும் தமிழ் இலக்கியவாதிகளையும் ஆதரித்தார். கரந்தை தமிழ்ச் சங்கத்திற்குப் பல விதங்களிலும் நிதி உதவி செய்தார். பல்வேறு சமய, அறப்பணிகளை மேற்கொண்டார். கொடை வள்ளலாக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார் எனும் பெத்தாச்சி செட்டியார், பிப்ரவரி 08, 1889-ல், இன்றைய சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். தந்தை சா.ரா.மு. சிதம்பரம் செட்டியார். தந்தை, இந்தியன் வங்கியின் நிறுவனர் ராமசாமி செட்டியார் மற்றும் செட்டிநாட்டின் முதல் அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் சர் அண்ணாமலை செட்டியார் ஆகியோரின் மருமகன்.

பெத்தாச்சி செட்டியார் இளம் வயது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தார். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டிருந்தார். கரூரில் கல்விப்படிப்பை முடித்தார். பரம்பரையாகத் தனக்குக் கிடைத்த செல்வத்தைக் கொண்டு பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டார்.

அறக் கொடைகள்

பெத்தாச்சி செட்டியார், கரூருக்கு அருகில் விலைக்கு வந்த ஆண்டிப்பட்டி ஜமீனை வாங்கினார். அதனை நிர்வகிக்க கரூரில் ஒரு தோட்ட விடுதி ஒன்றை ஏற்படுத்தி அங்கேயே தங்கினார். கரூரிலுள்ள பசுபதீஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்திருந்ததைக் கண்டு மனம் வருந்தி, அதனைத் தன் செலவில் புதுப்பித்தார். சுற்றுச்சுவர்கள் எழுப்பி, ஆலயத்தைச் சீரமைத்துக் குடமுழுக்கு நிகழ்த்தினார். ஆலயப் பணியாற்றும் மக்கள் வசிப்பதற்காக மடவளாகத் தெருக்களை ஏற்படுத்தினார். அதுபோல வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கும் பல திருப்பணிகளைச் செய்து உதவினார்.

ஆண்டிப்பட்டி ஜமீன்தாராக விளங்கிய பெத்தாச்சி செட்டியார் உதவி கேட்டு வரும் ஏழை, எளியவர்களுக்குப் பல உதவிகளைச் செய்தார்.

தமிழ்ப் பணிகள்

தமிழ்ப் பற்று கொண்டிருந்த பெத்தாச்சி செட்டியார், தமிழ்ப் புலவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பல நிதி உதவிகளைச் செய்தார். பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக நான்காண்டுகள் பணியாற்றினார். அச்சங்கத்திற்குப் பல்லாயிரக் கணக்கான ரூபாய் பொருளுதவி செய்தார். தமிழ், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழி நூல்கள் அச்சாக நிதி உதவி அளித்து உதவினார். பெத்தாச்சிச் செட்டியாரின் நிதிக் கொடையால் பல மாத இதழ்கள் வெளியாகின. ’ஸுத சம்ஹிதை’, ‘பன்னூல் திரட்டு’ போன்ற பல நூல்கள் பெத்தாச்சி செட்டியாரின் நிதி உதவியால் வெளிவந்தன. மகாவித்துவான், மு. இராகவையங்கார், அரசஞ்சண்முகனாரின் மாணவர் ம.கோபாலகிருஷ்ண ஐயர் உள்ளிட்ட பல தமிழறிஞர்களுக்கு நிதிக் கொடை அளித்து அவர்களது தமிழ்ப் பணிகளை ஊக்குவித்தார்.

பெத்தாச்சி செட்டியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பல விதங்களில் நிதி உதவி செய்து ஆதரித்தார். கரந்தைத் தமிழ்ச சங்கம் கட்டிடம் கட்ட, நிலம் வாங்க பெத்தாச்சிச் செட்டியார் பொருளுதவி செய்தார். தமது ஜமீன் புலவர் திருஞானசம்பந்தக் கவிராயரைத் தஞ்சையில் தங்கச் செய்து, கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு பணித்தார். அதற்கான அனைத்துச் செலவுகளையும் தாமே ஏற்றுக் கொண்டார். அச்சங்கத்திற்குப் பெருமளவில் தமிழ் நூல்களை நன்கொடையாக வழங்கினார். அதனால்,

”எங்கள் சங்கத்தின் எழிற்புரவலனாய்
ஆயிரம் ஆயிரம் ஆயமாப் பொருளொடு
எண்ணில் அடங்கா தியல் நூலும்
பிறவும் அருளிய அறவுரு வாய
பெத்தாச்சி யாம் நற்றமிழ் வள்ளல்”

- என்று கரந்தை தமிழ்ச் சங்கத்தினரால் பாரட்டப்பட்டார். நூலகத்திற்கும் பெத்தாச்சிச் செட்டியாரின் நினைவாக, 'பெத்தாச்சி புகழ் நிலையம்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெத்தாச்சிச் செட்டியார் தனது வள்ளள்தன்மையால், ’பெத்தாச்சி வள்ளல்’ என்று போற்றப்பட்டார். பாளையங்கோட்டைச் சைவ சபைக்குப் பெரும் பொருளுதவி அளித்தார். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பெத்தாச்சி செட்டியார், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் உள்ளிட்ட பலரை ஆதரித்தார். முத்தையா பாகவதரை கரூருக்கு வரவழைத்து பல கச்சேரிகள் நிகழ்த்த ஏற்பாடு செய்தார். பல இடங்களிலிருந்தும் பன்னீரை வரவழைத்து பாகவதரைப் புனித நீராட்டி மகிழ்ந்தார்.

பெத்தாச்சி செட்டியாரின் பொருளுதவியால் கட்டப்பட்ட பாலம்

அரசியல்

பெத்தாச்சிச் செட்டியார், கரூர் நகராட்சியின் முதல் தலைவராகப் பணியாற்றினார். கரூர் நகராட்சியில் ஏழைகளுக்கு வரிவிதிப்பில் விலக்களித்தார். அக்காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபு மற்றும் அவர் மனைவி இருவரையும் கரூருக்கு அழைத்து நகராட்சி மூலம் சிறந்த வரவேற்பளித்தார். அவர்கள் வருகை நினைவாக ஞாபகார்த்த வளைவு (ஆர்ச்) ஒன்றையும் கட்டினார். அந்த வளைவானது, ஏப்ரல் 11, 1971 அன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை பெத்தாச்சி செட்டியார் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

பெத்தாச்சி ஞாபகார்த்த வளைவு

கல்விப் பணிகள்

பெத்தாச்சி செட்டியார் சிறந்த கல்வி வள்ளலாகத் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்காக, தம் வாழ்நாள் இறுதி வரை நிதி உதவி அளித்தார். ஸ்ரீரங்கம் பள்ளிக்கு நிதிக்கொடை அளித்து ஊக்குவித்தார், திருச்சி தேசியக் கல்லூரிக்குப் பெருநிதி அளித்து அதன் தோற்றத்திற்கும் நிலை பேற்றிற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரிக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடையாகக் கொடுத்து ஆதரித்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நிதி உதவிகள் அளித்து ஊக்குவித்தார்.

மறைவு

பெத்தாச்சி செட்டியார் கரூரையும், திருமாநிலையூரையும் இணைக்கும் விதத்தில் இடையில் ஒரு பாலம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். அதற்கு பெரும் பொருளுதவி செய்தார். ஆனால், 1919-ல் தொடங்கப்பட்ட அந்தப் பாலம் கட்டி முடிக்கும் பணி நிறைவடையும் முன்பே, ஏப்ரல் 30, 1924-ல் தனது 35-ம் வயதில், காலமானார்.

பெத்தாச்சிச் செட்டியாரின் மறைவுக்குப் பின், அவருடைய வழக்கறிஞர் ஸர். தேசிகாசாரியார், ஜில்லா போர்டின் தலைவராக இருந்தபோது, பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 2024 அப்பாலத்தின் நூற்றாண்டு.

விருது

  • திவான் பகதூர் பட்டம்

மதிப்பீடு

மு.சித. பெத்தாச்சி செட்டியார், சிறந்த கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். கல்வி நிலையங்களுக்குக் கொடையளித்தார். பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பிக்க உதவினார். தனது வள்ளல் தன்மை காரணமாக இதழாசிரியார்களாலும், புத்தக வெளியீட்டாளர்களாலும் போற்றப்பட்டார். மு.சித. பெத்தாச்சி செட்டியார், தமிழின் முன்னோடி இலக்கிய கொடையாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jun-2024, 19:05:17 IST