மீனாட்சியம்மன் திருப்புகழ்
- திருப்புகழ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருப்புகழ் (பெயர் பட்டியல்)
மீனாட்சியம்மன் திருப்புகழ் (பதிப்பு: 1983), அன்னை மீனாட்சியின் பெருமையை, சிறப்பை திருப்புகழ்ச் சந்த வடிவில் கூறும் இலக்கிய நூல். இந்நூலைப் பதிப்பித்தவர் வே. இரா. மாதவன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை வெளியிட்டது.
வெளியீடு
மீனாட்சியம்மன் திருப்புகழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஓலைச்சுவடிக் களஞ்சியத்திலிருந்து நேரடியாகப் பதிப்பிக்கட்ட நூல். 1983-ல், இந்நூலைப் பதிப்பித்தவர் வே. இரா. மாதவன்.
தோற்றம்
மீனாட்சியம்மன் திருப்புகழ் சுவடியில், "1879-ம் வருஷம் பிப்ரவரி மாதம் 11-ம் நாள் வெகுதானிய வருஷம் தை மாதம் 30-ம் நாள் காருக்குரிச்சியிலிருக்கும் வெங்கடாசலமய்யன் மீனாட்சியம்மன் திருப்புகழ் தனதுக்கு எழுதிக் கொண்டேன்". என்ற குறிப்பு உள்ளது. இதன் மூலம் இந்நூல் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களால் அறியப்படுகிறது.
ஆசிரியர் குறிப்பு
மீனாட்சியம்மன் திருப்புகழ் நூலை எழுதியவரின் பெயரைப் பற்றி முழுமையாக அறிய இயலவில்லை. சுவடிக் குறிப்பின் மூலம் 'மீனாட்சிதாசன்' என்பதாக அறியப்படுகிறது.
நூல் அமைப்பு
மீனாட்சியம்மன் திருப்புகழில் 104 பாடல்கள் உள்ளன. முதலில் நேரிசை வெண்பாவால் ஆன காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து 104 திருப்புகழ் பாடல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு பாடலும் நான்கடிகளைக் கொண்டுள்ளது. சில பாடல்கள் மிகவும் நீண்டதாகவும், சில பாடல்கள் குறுகியதாகவும் உள்ளன.
உள்ளடக்கம்
அன்னை மீனாட்சியின் பெருமையைக் கூறும் மீனாட்சியம்மன் திருப்புகழ் நூலில் சிவன் மற்றும் திருமாலைச் சிறப்பித்துக் கூறும் பாடல்களும் இடம் பெற்றன. அருணகிரிநாதரால் வழங்கப்பட்ட திருப்புகழ் பாடல் வடிவ அமைப்பினையே மீனாட்சியம்மன் திருப்புகழ் நூலும் பின்பற்றியது. பல பாடல்கள் வெவ்வேறு சந்தங்களில் இடம்பெற்றன. 80-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகளை இந்நூல் கொண்டுள்ளது.
எளிய சொற்களுடனும், இனிய சந்தத்துடனும் அமைந்துள்ள மீனாட்சியம்மன் திருப்புகழ் நூல், மீனாட்சியம்மனின் சிறப்புக்களையும் அன்னை பராசக்தியின் பெருமைகளையும் மிக விரிவாகக் கூறுகிறது. இதிகாச, புராணச் செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.
மதுரை மீனாட்சி அன்னையின் திருவுருவச் சிறப்பு, திருவடிச் சிறப்பு, திருவருட்பெருக்கால் ஏற்படும் நன்மைகள், பிறவித் துன்பம் நீங்குவதற்கு வழி, எல்லாத் தெய்வங்களையும் விடச் சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்கும் அன்னையின் பெருமை போன்ற செய்திகள் அன்னை மீனாட்சியம்மன் திருப்புகழ் நூலில் இடம்பெற்றன.
பாடல் நடை
அன்னையின் அருட் செயல்கள்
தரித்த சிறுபிறை வடித்த சடைமுடி
தனக்கு மலரரு கெருக்கு மணியர
விருக்கு னதியிதழ் தமக்கு வடிவது வெனவேதான்
சமைத்த பருவரு ததத்தி லனுதினம்
நினைத்த படிதிரு குணத்தில் விதமுணர்த்
தவற்றில் நிலைபெற விதித்த குருவொரு முதலாகி
புரித்த திரிபுர மெரித்து மதனனை
விழித்த திறமது மிதித்து முயலகன்
நெளித்து முதுகினை வளைத்த செயலது வொருபாதம்
சினத்து மறலியை யுதைத்து மயிடகன்
வரத்தை யவனுட தரத்தை யுயிர்கொடு
சிரத்தை நெருடிய கரத்தி பயிரவி திரிசூலி
விரித்த கதிர்மணி பதித்த நவநிதி
கதித்த மழுமறி யுதித்த விடமிசை
விதித்த படியொரு யெழுத்தை மனதினில் மறவேனே
விசுத்தி நிலையது கசத்து நடுவிடை
கருப்பு ருவசுழி வெருப்பு மலைதுலை
விளக்கி யொளிவெளி பழக்கி வழிதொகை யருள்வாயே
மதித்த கதிரவ னுதித்து வருவது
பெருத்த புவியொடு வுதித்த பரிசிலை
மதிக்கு முடல்சிறு பிறைக்குள் வளர்மதி யறியேனே
மடித்த இதழது கடித்த யெயிறொடு
வருத்தி யொருவெம னிருக்கி வருகென
வழைக்கு மொருபொழு தெனக்கு மடியருள் உமையாளே
ஆவணம்
மீனாட்சியம்மன் திருப்புகழ் நூல், தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
மீனாட்சியம்மன் திருப்புகழ் நூல், சந்த நயங்களுடன் இனிய, எளிய தமிழில் இயற்றப்பட்டுள்ளது. அன்னை மீனாட்சியின் புகழ்பேசும் நூல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவும், அன்னை மீனாட்சி மீது திருப்புகழ் பாடல் அமைப்பில் பாடப்பட்ட முதல் நூலாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:39:04 IST
