under review

வே. இரா. மாதவன்

From Tamil Wiki
மாதவன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாதவன் (பெயர் பட்டியல்)
பேராசிரியர், முனைவர் வே. இரா. மாதவன்

வே. இரா. மாதவன் (முனைவர் வே. இரா. மாதவன்; பேராசிரியர் வே. இரா. மாதவன்) (ஏப்ரல் 06, 1952 - அக்டோபர் 08, 2023) கவிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், உரையாசிரியர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச்சுவடித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். 60-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் பதிப்பித்தார். கவிக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

வே. இரா. மாதவன், தமிழ்நாட்டின் வேலூரில், ஏப்ரல் 06, 1952 அன்று பிறந்தார். வேலூரில் பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் கற்றார். தமிழ், அறிவியல், கல்வியியல், சுவடியியல், சித்த மருத்துவம், ஓவியம் போன்ற பல துறைகளில் பட்டங்களும் பட்டயங்களும் பெற்றார். உலகத் தமிழாராயாச்சி நிறுவனத்தில், பேராசிரியர் பூ. சுப்பிரமணியத்திடம் சுவடியியலில் பயிற்சி பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறையில் ஆறு ஆண்டுகள் (1980-86) பணியாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச்சுவடித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

முனைவர் வே. இரா. மாதவன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

வே. இரா. மாதவன், ஆய்விதழ்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். அரிய பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பிப்பதையும், அரிய சித்த மருத்துவச் சுவடிகளைப் பதிப்பிப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். வே. இரா. மாதவன் எழுதிய 'தமிழில் தலபுராணங்கள்' (இரண்டு தொகுதிகள்) ஆய்வாளர்கள் பலருக்கும் பயன் தரும் நூலாக அறியப்படுகிறது. 1994-ல் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பெற்ற மாதவனின் அரிய சுவடிப் பதிப்பான 'அகத்தியர் வைத்திய காவியம் 1500' என்னும் பெருநூல், அத்துறை வல்லுநர்கள் பலரது பாராட்டைப் பெற்றன. 'வைத்திய சிந்தாமணி', 'குழந்தைகள் மகளிர் மருத்துவம்', 'தன்வந்தரி வைத்தியகும்மி 300' போன்ற இவரது நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பழந்தமிழ்நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய வரலாற்று ஆய்வில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். பல்கலைக்கழகங்களிலும் பல நிறுவனங்களிலும் பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 60-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் பதிப்பித்தார்.

விருதுகள்

  • 1982-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலுக்கான முதற்பரிசு - 'கண் மருத்துவம்' நூல்
  • 1983-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த மொழி இலக்கியம் பற்றிய ஆய்வு நூலுக்கான முதற் பரிசு - சித்திரக்கவிகள் நூல்
  • கவிக்காவலர்
  • நற்பதிப்பாசிரியர்
  • தெய்விக இயற்றமிழ் வேந்தர்

மறைவு

வே. இரா. மாதவன், அக்டோபர் 8, 2023 அன்று காலமானார்.

ஆவணம்

வே. இரா. மாதவனின் நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

வே. இரா. மாதவன், அரிய பழந்தமிழ்ச் சுவடிகளையும், சித்த மருத்துவச் சுவடிகளையும் பதிப்பித்தார். தமிழ்ச் சுவடியியலில், குழந்தை மருத்துவச்சுவடிகளை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவராக அறியப்படுகிறார். தமிழின் முன்னோடி சுவடிப் பதிப்பாசிரியர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

தமிழில் பதிப்பித்தவை
  • கண் மருத்துவம்
  • சித்திரக்கவிகள்
  • மீனாட்சியம்மன் திருப்புகழ்
  • விராலிமலை வேலவர் குறவஞ்சி
  • தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை (நான்கு தொகுதிகள்)
  • வைத்தீசுவரன் கோயில் பதிகங்கள்
  • திருவேங்கடவன். திருப்பாமாலை
  • டாக்டர் உ.வே.சா. செவ்வைச்சூடுவார் பாகவதப் பதிப்பு
  • அருந்தமிழ் நூற்காவலர் அடிகளார்
  • வறுமைக்கு விடை கொடுத்த ஏழேழு வெண்பாமாலை
  • வேலூர்ப் பதிகங்கள்
  • அகத்தியர் வைத்திய காவியம்
  • குழந்தைகள் மகளிர் மருத்துவம்
  • தன்வந்தரி வைத்தியக் கும்மி
  • தமிழில் தல புராணங்கள் (இரண்டு தொகுதிகள் - டாக்டர் வ. அய். சுப்பிரமணியம் அறக்கட்டளைச் சொற்பொழிவு 1992)
  • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய வீரகேரளம்புதூர் நவநீத கிருட்டிணன் கலம்பகம் - உரையும் பதிப்பும்
  • நலம் தரும் நாராயண கவசம்
  • திவ்விய தம்பதியர் புகழ்மாலை - சுவடிப்பதிப்பு
  • சென்னை கந்தகோட்ட முருகன் ஆறாறு மாலை
  • அருள்மிகு பல்கலை விநாயகர் போற்றி மாலை
  • தஞ்சை கோயிற் பாடல்கள் - சுவடிப்பதிப்பு
  • அருள்மிகு சந்தான ஈஸ்ரி திருப்பள்ளியெழுச்சி
  • அருள்மிகு சந்தான ஈஸ்வரி 1008 நாமாவளி
  • அருள்மிகு சந்தான ஈஸ்வரி சதகம்
  • அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் போற்றி மாலை
  • தமிழில் பதின்மர் சிவார்ச்சனை
  • சேக்கிழார் நூற்றந்தாதி - சுவடிப்பதிப்பு
  • வைத்திய சிந்தாமணி - சுவடிப்பதிப்பு
  • தணிகைவேள் பாரதியார் பிரபந்தத்திரட்டு - சுவடிப்பதிப்பு
  • தமிழில் தூது இலக்கியம்
  • தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - முதல் தொகுதி
  • தண்டபாணி சுவாமிகள் ஆய்வு மாலை - இரண்டாம் தொகுதி
  • குமரகுருபரர் ஆய்வு மாலை - முதல் தொகுதி
  • குமரகுருபரர் ஆய்வு மாலை - இரண்டாம் தொகுதி
  • குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்றாம் தொகுதி
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - முதல் தொகுதி
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வுமாலை - இரண்டாம் தொகுதி
  • பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • நான்மணிக்கடிகை - மூலமும் பழைய உரையும் - சுவடிப்பதிப்பு
  • சுவடிப் பதிப்பியல்
ஆங்கிலத்தில் பதிப்பித்தவை
  • Siddha Medical Manuscripts in Tamil
  • Heritage of the Tamils-Siddha Medicine
  • Heritage of the Tamils-Education and Vocation

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:14:57 IST