under review

நேரிசை வெண்பா

From Tamil Wiki

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நான்கடியாய், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா. நேரிசை வெண்பா இருகுறள் நேரிசை வெண்பா, ஆசிடை நேரிசை வெண்பா என இரண்டு வகைப்படும்.

நேரிசை வெண்பாவின் இலக்கணம்

  • நேரிசை வெண்பா, நான்கு சீர்கள் உள்ள நான்கடிகள் கொண்டதாய் வரும். ஈற்றடி மூன்று சீர்களைக் கொண்டிருக்கும்.
  • இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வரும்.
  • சீர்களில் இயற்சீர் மற்றும் வெண்சீரைக் கொண்டு அமையும்.
  • இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும்.
  • செப்பலோசை உடையதாய் இருக்கும்.
  • நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளைக் கொண்டு முடியும்
  • நான்கு அடிகளும் ஒரு விகற்பத்தில் அல்லது முன்னிரண்டடிகளும் பின்னிரண்டடிகளும் ஒவ்வொரு விகற்பம் என்று இரு விகற்பத்தில் அமையும்.
  • முதலடி, இரண்டாம் அடி, தனிச் சொல் எதுகை இவை மூன்றும் ஒரே எதுகையாக அமையும். இம்மூன்று எதுகைகளும் நேராக இசைந்து வருவதால் நேரிசை வெண்பா.

நேரிசை வெண்பா வகைகள்

நேரிசை வெண்பா இருகுறள் நேரிசை வெண்பா, ஆசிடை நேரிசை வெண்பா என இரண்டு வகைப்படும்.

இருகுறள் நேரிசை வெண்பா

இருகுறள் நேரிசை வெண்பா என்பது, இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்துக் கொண்டதாக, இடையில் தளை தட்டாத தனிச்சொல் கொண்டதாக, முதல் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் பெற்றதாக அமையும். இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா என இரண்டு வகையில் அமையும்.

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.

மேற்கண்ட பாடலில் நெல், புல், நல்லார், எல்லோர் என நான்கடிகளிலும் ஒரே வகை எதுகை பெற்று, அதற்கிணைந்த ‘தொல்’ என்னும் தனிச்சொல் எதுகையும் பெற்றிருப்பதால் இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா.

இரு விகற்ப நேரிசை வெண்பா

அறிவினால் மாட்சியொன் றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்ட தெவனாம் – பொறியின்
மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.

அறிவினால், பிறிதினால், என ஒரே வகை எதுகை கொண்டு, அதனோடு பொருத்தமுடைய ‘பொறியின்’ என்னும் தனிச்சொல் எதுகையுடன், ‘மணி, அணி’ என்ற வேறு வகை எதுகைகளைக் கொண்டிருப்பதால் இது இரு விகற்ப நேரிசை வெண்பா.

ஆசிடை நேரிசை வெண்பா

பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடிக்குப் பெயர் ஆசு. இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். அதனைச் சரிசெய்ய முதல் குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ அல்லது இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். அவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா, இருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா என இரண்டு வகைப்படும்.

ஒருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா

வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.

இப்பாடலில் முதல் குறள் வெண்பா, இலக்கண விதிப்படி ‘வாய்’ என்று முடிந்து, வஞ்சியான் என்ற தனிச்சொல் பெற்று அடுத்த வெண்பாவுடன் இணைந்து அமைய வேண்டும். ஆனால், அவ்வாறு அமைந்தால் தளை தட்டுவதுடன், ஓசையும் கெடும். அதனால் தளை தட்டாமல், இணைப்பிற்காக ‘நேர்ந்-தேன் ’ என்று இரண்டு அசைகள் சேர்க்கப்பட்டன. இப்போது வெண்பா இலக்கணப்படி தளை தட்டாமல் பாடல் அமைவதுடன் ஓசையும் சரியாகிறது. இவ்வாறு வருவதனால் இது ஆசிடை நேரிசை வெண்பா. நான்கடியும், தனிச்சொல்லும் ஒரே எதுகை அமைப்பில் (வஞ்சி) வருவதனால் இது ஒரு விகற்பத்தால் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை.

இப்பாடலில் முதல் குறள் வெண்பா, வெண்பா இலக்கணப்படி, முதல் இரண்டு அடிகளில் ’கண்' என்று முடிய வேண்டும். ஆனால் அவ்வாறு அமைந்தால் ஓசை கெட்டுத் தளை தட்டும். அதனால் ‘கண்’ என்பதுடன் ‘டும்’ என்ற அசை சேக்கப்பட்டது. தனிச் சொல் பெற்று அடுத்த குறள் வெண்பா இணைக்கப்பட்டது. நான்கடிகளில் முதல் இரண்டிகளில் ஒரு எதுகையும், அதனோடு இணைந்த தனிச்சொல் எதுகையும் (கணம், பிணம், மணம்) பெற்றது. அடுத்த இரண்டு அடிகளில் வேறோர் எதுகையும் (டுண், டொண்) அமைந்திருப்பதால் இது இரு விகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.

உசாத்துணை


✅Finalised Page