under review

மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை

From Tamil Wiki
மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை

மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை (பக்கிரியா பிள்ளை) (1866 - நவம்பர் 2, 1937) ஒரு லய இசைக் கலைஞர். கொன்னக்கோல் என்ற கலையை உருவாக்கி அதைக் கச்சேரிகளில் பிரபலப்படுத்தியவர்.

இளமை, கல்வி

நாட்டியக் கலையில் சிறந்த நட்டுவனார்கள் நிறைந்த குடும்பத்தில் சொக்கலிங்க நட்டுவனார் - பார்வதியம்மாள் இணையரின் இரண்டாவது மகனாக பக்கிரிப் பிள்ளை பிறந்தார்.

ஐந்து வயதில் தந்தையை இழந்த பக்கிரிப் பிள்ளைக்கு அவரது சிறிய தந்தை சாமிநாத நட்டுவனார் நாட்டியக் கலையைக் கற்பித்தார். நட்டுவனாராக நாட்டியங்களை நிர்வகித்து வந்த பக்கிரிப் பிள்ளைக்கு நாட்டிய ஆசானாவதில் விருப்பம் இல்லாமல் பதினெட்டாவது வயதில் சுவர்ணத் தவில்காரரிடம் ஒராண்டு தவில் கற்றார்.

தனிவாழ்க்கை

பக்கிரிப் பிள்ளையின் மூத்த சகோதரர் கோவிந்தசாமிப் பிள்ளை ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

பக்கிரிப் பிள்ளை தங்கச்சியம்மாள் என்பவரை மணந்து வைத்தியலிங்கம் என்ற மகனும் அம்மணியம்மாள் (கணவர்: மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மகன் முத்தையா பிள்ளை) என்ற மகளும் பிறந்தனர். வைத்தியலிங்கம் பிள்ளை நாதஸ்வரக்கலைஞராக இருந்து பின்னர் கொன்னக்கோல் கலையில் ஈடுபட்டார்.

இசைப்பணி

பக்கிரிப் பிள்ளை மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையின் குழுவில் சில காலம் தவில் கலைஞராக இருந்தார். ஒரு மனவருத்தம் காரணமாக அக்குழுவில் இருந்து விலகினார். பின்னர் வழிவூர் முத்துவீர் பிள்ளை எனும் தவில் கலைஞருடன் நிகழ்ந்த தொழில் முறை சவாலில் தோல்வியடைந்தார். இக்காரணங்களினால், தவில் வாசிப்பினை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். மிருதங்கம் கற்க எண்ணி கடம் கலைஞர் பழனி கிருஷ்ணையரிடம் மாணவராகச் சேர்ந்தார். ஆனால் பக்கிரிப் பிள்ளையின் குரல்வளத்தைக் கண்ட கிருஷ்ண ஐயர், அவருக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார்.

இக்காலகட்டத்தில் எக்கலையிலுமே நிலைத்திருக்க முடியாமல் இருப்பது ஏற்படுத்திய மனவருத்தம் காரணமாக, தற்கொலை முயற்சியினை மேற்கொண்டார் பக்கிரிப் பிள்ளை. அப்போது ஜலதரங்கம் ராமனையா செட்டி என்பவரின் மூலமாக காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் அறிமுகம் பக்கிரியாப் பிள்ளைக்குக் கிடைத்தது. பக்கிரிப் பிள்ளையும் நாயனாப் பிள்ளையும் நண்பர்களாயினர். பக்கிரிப் பிள்ளையின் லய ஞானத்தை வியந்த நாயனாப்பிள்ளை தனது கச்சேரிகளில் லயக் கலைஞராக இடம்பெறுமாறு வேண்டிகொண்டார். 1910-ம் ஆண்டில் நாயனப் பிள்ளையின் குழுவில் கொன்னக்கோல் கலைஞராக இடம்பெற்றார் பக்கிரிப் பிள்ளை. நாயனப் பிள்ளையின் மறைவுவரை அக்குழுவில் இருந்தார்.

திருப்புகழ் மீதும் அருணகிரிநாதர் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்கிரிப் பிள்ளை மன்னார்குடியில் அருணகிரிநாதருக்கென்று மடம் ஒன்றினை நிறுவி, பிப்ரவரி 10, 1936 அன்று குடமுழுக்கு செய்தார்.

மாணவர்கள்

லய சம்பந்தமான விஷயங்களில் யாருக்கு சந்தேகங்கள் இருந்தாலும் பக்கிரிப் பிள்ளையை அணுகுவார்கள். நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அடிக்கடி பக்கிரிப் பிள்ளையிடம் சென்று தன் ஐயங்களைப் போக்கி கொள்வார். பக்கிரிப் பிள்ளையைத் தன் மானசீக குருவாகக் கொண்டிருந்தார் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

மன்னார்குடி பக்கிரிப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

மறைவு

மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை நவம்பர் 2, 1937 அன்று மன்னார்குடியில் காலமானார்.

இணைப்புகள்

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page