மதுரை மாரியப்ப சுவாமிகள்
- சுவாமிகள் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமிகள் (பெயர் பட்டியல்)
- மாரியப்பன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாரியப்பன் (பெயர் பட்டியல்)

மதுரை மாரியப்ப சுவாமிகள் (1902 - ஜூன் 19, 1967) தமிழிசைப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நாடக நடிகர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். நாடகங்கள், திரைப்படங்களில் சொந்தப்பாடல்கள் பாடினார். திரைப்படங்களுக்கு இசை அமைத்தார். இசைச்சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
மாரியப்ப சுவாமிகள் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் (முகவை) மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் மண்டலமாணிக்கம் ஊரை ஒட்டிய சிற்றூரான பல்லிமுட்டை என்ற ஊரில் பூச்சன் செட்டியார், அலமேலு இணையருக்கு மூன்றாவது மகனாக 1902-ல் பிறந்தார். வண்டியூர் மாரியம்மன் அருளால் பிறந்ததால் மாரியப்பன் என்ற பெயரை பெற்றோர்கள் இட்டனர். இஸ்லாமியப் பெரியவர் ஒருவரின் வழி கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
மாரியப்ப சுவாமிகளின் மூத்த மகன் மா.முருகேசன். இரண்டாவது மகன் மா. வீரபாகு. வீரபாகு மதுரைக் கவிஞர்களில் ஒருவர். மகள் வயிற்றுப் பேரன் அரங்ககிரிதரன். பாடலாசிரியர் கம்பதாசன் இவரின் மருமகன்.
முத்துராமலிங்கத் தேவர், எம்.கே.டி. பாகவதர், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, என்.எஸ்.கே, பி.டி. ராஜன், சி.என். அண்ணாத்துரை, எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் இவரின் நண்பர்கள்.
நாடக வாழ்க்கை
மாரியப்ப சுவாமிகள் ஏழு வயதில் பி.எஸ்.வேலு நாயரின் சண்முகானந்த நாடக சபையில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகள், நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றிய கம்பெனி இது. சங்கரதாஸ் சுவாமிகள் சமரச சன்மார்க்க நாடக சபை தோற்றுவித்தபோது நாடகங்களை இளம் நடிகர்களுக்குப் பயிற்றுவிக்கும் சட்டாம்பிள்ளையாக மாரியப்பனை அமர்த்தினார். பதினைந்து வயதிற்குள் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் மிகச்சிறந்த 'ராஜபார்ட்' ஆனார். பாலாமணி, பாலாம்பாள், அரங்கநாயகி போன்ற நாயகிகளை விட வயதில் சிறுவனானாலும் மாரியப்பன் தான் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார். பெரிய நடிகைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடி நடிக்கும் திறமையும், குரல் வளமும் உடற்கட்டும் மாரியப்பனுக்கு இருந்தன.
பாடலாசிரியர்
மாரியப்ப சாமிகள் தமிழ்ப் பாடல்களைத் தானே இயற்றி, இசை அமைத்து, ராக பாவத்துடன் பாடினார். இந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றதால், 'கவாய் மாரியப்பன்' (இந்தியில், 'கவையா' என்றால் சாஸ்திரீய பாடகர்) என்ற பெயர் பெற்றார். தனது பெயரை முத்திரையடியாக வைத்துப் பாடல்கள் பாடினார்.
தொடக்கம்
கேரளாவில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பாதி நாடகம் நடந்த போதே ஒப்பந்தக்காரர் பணத்துடன் ஓடிவிட மாரியப்ப சுவாமிகள் மனக்கலக்கம் அடைந்து நடந்தே திருச்செந்தூர் வந்தடைந்தார். கடற்கரையில் அமர்ந்து தன் நிலையை எண்ணி வருந்தினார். திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் சென்று அங்கு திருக்கியம்மாபேட்டை எனும் மகாகாளி கோவிலுக்குச் சென்று. அங்கே கீழே கிடந்த இரும்புத் தகட்டைக் கொண்டு தனது நாவை அறுத்துக் கொண்டார். மக்கள் இவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது அவர் வர மறுத்ததால் திருச்செந்தூர் கோவிலில் அமர வைத்தனர். தகவலறிந்த சங்கரதாஸ் சுவாமிகள் திருசெந்தூர் வந்தார். பின் முருகனிடம் "வகர இல்லில் வளரும் கந்தனே" எனும் பாடல் பாடி வணங்கி மாரியப்ப சுவாமிகளைக் குணப்படுத்த வேண்டி நின்றார். மூன்று ஆண்டு கோவில் வாசத்திற்குப் பின் நாக்கு வளர்ந்த மாரியப்ப சுவாமிகளின் வயது அப்போது பத்தொன்பது. முருகன் திருவருளால் பாடல்களை இயற்றும் திறனுடையவர் ஆனார் என்று கூறப்படுகிறது.
நாடகத்தில் நடிக்கும்போது வாலிபர்களுக்கு குரல் உடைந்து மாறும் பதினாறாம் வயதில் திருச்செந்துார் சென்று தன் நாக்கை அறுத்து, செந்தில் ஆண்டவன் சன்னிதியில் கிடந்தார். இரண்டு ஆண்டுகள் அந்தச் சன்னிதியை விட்டு வெளியேறாமல் இருந்தார். நாடக நடிகராக மட்டும் இருந்தவர் அதன்பின் இசைவாணராக ஆனார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
பாடல்கள்
மாரியப்ப சுவாமிகள் 'செந்திலாண்டவன் கீர்த்தனை' எனும் நூலைப் பாடினார். தமிழகம் முழுவதும் சென்று பாடல்கள் பாடி புகழடைந்தார். எல்லா இடங்களிலும் தானே இயற்றிய பாடல்களையே பாடினார். பல இசைக் கலைஞர்கள் குறிப்பாக நாதஸ்வரக் கலைஞர்கள் இவரது பாடல்களையே பாடி கச்சேரி நிகழ்த்தினர். இவரைப் பின்பற்றி பலரும் தனிப்பாடல்கள் பாடத் தொடங்கினர். என்.எஸ்.கிருஷ்ணனின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் 1942-ல் தமிழ்க்கலை மாநாடு நடந்தது. அங்கு நிகழ்ந்த அறிஞர்களின் சொற்பொழிவிற்குப் பின் மாரியப்ப சுவாமிகள் பாடினார்.
பாடல் நடை
பல்லவி
வயது முதிர முதிர ஆசை
வளரும் மாயம் ஒழிந்திடாதோ. (வ)
அனுபல்லவி
உயர்திரு மலைதனில் உறைபவா
உமையவள் தரும் சரவணபவ. (வ)
சரணம்
சத்திய மார்கத்திலே செல்லும் சிந்தை
சட்டெனமாறுவதும் என்ன விந்தை
அத்தனின் மாயை என்றால் அதுவும் நிந்தை
ஆரிடம் என் துயர் ஆற்றுவேன் எந்தை
அருளலாது அவனி மீது
அமரர் வாழும் வலிமையேது
கருணைமேவும் பரமஞான
கடவுளே என் அருமையான (வ)
திரை வாழ்க்கை
மாரியப்ப சுவாமிகள் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா போன்ற படங்களில் பாடல்கள் பாடினார். 1939-ல் தமிழில் முதல் வள்ளலார் பற்றிய 'ஜோதி அல்லது ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள்' திரைப்படத்தில் இசை அமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் பங்கேற்றார். 1944-ல் கே.ஆர். ராமசாமி அறிமுகமான 'பூம்பாவை' படத்திற்காகவும் பாடல்கள் எழுதினார்.
மாரியப்ப சுவாமிகள் ஆன்மிகம் கலந்த பாடல்களையே அதிகம் எழுதினார். 'நான் எனும் அகந்தை வேண்டாம்' (ஹரிகாம்போதி), 'என்னடி சொன்னார், எங்கும் புகழ் தங்கும் வேலன்' (அமீர்கல்யாணி), 'மாமதுராபுரி வாழ் மகராணியே' (பாகேஸ்வரி), 'ஆத்திகனோ நாத்திகனோ நான்' (ஹிந்தோளம்) போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.
மறைவு
மாரியப்ப சுவாமிகள் ஜூன் 19, 1967-ல் தன் மூத்த மகளின் வீட்டில் காலமானார். ஜூன் 21-ல் திருப்பரங்குன்றம் மலையின் பின்புறமுள்ள நிலையூரில் கிருபானந்த வாரியார் தலைமையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உசாத்துணை
- எனது நாடக வாழ்க்கை: டி.கே. ஷண்முகம்: tamilvu
- மயக்கும் இசைமணி மதுரை மாரியப்பசாமிகள் - கீற்று
- தமிழ் இசை பொழிந்த மாரியப்ப சுவாமிகள் : திரை உலகில் சங்கீத ஆளுமைகள் - தினமலர்
- வயது முதிர முதிர ஆசை | மதுரை மாரியப்பசுவாமிகளின் பாடல்
- Aada vaareer ennodu aada vaareer - MADURAI MARIYAPPA SWAMIGAL - AMARA GEETHAM - Youtube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2024, 21:26:37 IST