under review

பாலாமணி அம்மாள்

From Tamil Wiki
கும்பகோணம் பாலாமணி - நன்றி ரோலி புக்ஸ்

பாலாமணி அம்மாள் (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) நாடகக்கலைஞர். நாடக உலகின் முன்னோடிகளில் ஒருவர். நாடகஅரசி என அழைக்கப்பட்டார். கும்பகோணத்தில் முதன் முதலாகப் பெண்களையே முழுக்க வைத்து பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி என்ற குழுவைத் தொடங்கி நாடக அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக்குறிப்பு

பாலாமணி அம்மாள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். முறையாக பரத நாட்டியம், இசை, நாடகம் கற்றார். இசைவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். குல வழக்கப்படி நவாபின் அரண்மனையில் வளர்ந்தார். நவாபின் மனம் கவர்ந்தவர்களில் முக்கியமானவர். அவர் இறந்தபின் கலையில் முழுமையாக ஈடுபட்டார்.

திருமணம் தன் நாடக வாழ்வைப் பாதிக்கும் என்பதால் பாலாமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. பாலாமணி நாடக உலகில் உச்சத்தில் இருக்கும்பொழுது, கும்பகோணத்தில் அவருக்கு மிகப்பெரியமாளிகை இருந்தது. நீச்சல் குளம், நீரூற்று, மயில்கள், மான்கள், இருக்கும் தோட்டம், 40-50 பணியாளர்கள் என அரண்மனை போன்ற மாளிகையில் இருந்தார்.

சமூக சேவை

பாலாமணி அம்மாள் நாடகத்தொழில் மூலமாகக் கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை ஆதரவற்ற பெண்களுக்கும், கோவில் திருப்பணிக்களுக்கும் செலவழித்தார். நாடக்குழுவில் ஆதரவற்ற பெண்களுக்கு இடமளித்தார். அவரது மாளிகையில் நாள் முழுவதும் வருவோருக்கெல்லாம் உணவளிக்கப்பட்டது. 'ஏழை எளியவர்களுக்கு பாலாமணியின் இல்லத்திற்கு வழி தெரியும்’ என ஜூலியன் வியோ தனது நூலில் குறிப்பிட்டார்.

பாலாமணி அம்மாள்

நாடக வாழ்க்கை

19-ம் நுாற்றாண்டின் இறுதியில் ஆண்கள், பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி.பி.ஜானகி அம்மாள், பி.ரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி.ராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில், பாலாமணி அம்மாள் குறிப்பிடத்தக்கவர்.

நாடகத்திற்காக முதன்முதலாக பெட்ரோமேக்ஸ் விளக்கு பயன்படுத்தினார். [1]. சங்கரதாஸ் சுவாமிகளின் மறைவிற்கு பிறகு தங்களின் நாடகங்களில் வசூல் குறைந்ததால், பாலாமணியின்குழுவினரை சிறப்பு நாடகம் போட அழைத்ததாக ஔவை டி.கே.ஷண்முகம் குறிப்பிடுகிறார். பாலாமணியின் குழுவினர் 'டம்பாச்சாரி’ நாடகம் போடுவதில் பிரசித்து பெற்றிருந்ததாகவும், முதிர்ந்த வயதில் பாலாமணியே டம்பாச்சாரியாக நடித்ததையும் குறிப்பிட்டு, அந்நாடகம் பெரு வெற்றி பெற்று, வசூலாகி தங்களின் நாடக்குழுவிற்கு உதவியதை டி.கே. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

பாலாமணி அம்மாள் நாடகக்கம்பெனி

கும்பகோணத்தில் முதன் முதலாகப் பெண்களையே முழுக்க முழுக்க வைத்து "பாலாமணி அம்மாள் நாடகக்கம்பெனி" என்ற குழுவைத் தொடங்கினார். அதில் எழுபது பெண்கள் பணியாற்றினார்கள். இவரது கம்பனியின் ஆசிரியர் எம். கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தையார்). நகைச்சுவை நடிகர் சி.எஸ். சாமண்ணா கம்பனியின் நிர்வாகியாகவும், நடிகராகவும் இருந்தார். பாலாமணி, சமூக, சமுதாய சீர்திருத்த நாடகங்களை நடத்திய முன்னோடிகளில் ஒருவர். இவர் நடத்திய நாடகங்களில் ஒன்றான 'டம்பாச்சாரி விலாசம்’, தமிழின் முதல் சமூக நாடகாமக கருதப்படுகிறது. 'டம்பாச்சாரி விலாசம் நாடகம்' பலமுறை மேடையேற்றப்பட்டு அதிக வருமானத்தை அளித்தது. முழு சமஸ்கிருத நாடகங்களை நடத்தினார். சமஸ்கிருத பாடல்கள் பாடினார். மேண்டலின் வாசித்தார். பாலாமணி பல பழைய சமஸ்கிருத நாடகங்களை மீண்டும் மேடையேற்ற திட்டமிட்டார்.

பாலாமணி ஸ்பெஷல் எக்ஸ்ப்ரஸ்

1900-களில் இவர் புகழின் உச்சத்தில் இருந்தபோது, பாலாமணியின் நாடகத்தைப் பார்க்க மாயவரம், திருச்சியிலிருந்து மக்கள் கும்பகோணம் வருவதற்காக, 'பாலாமணி ஸ்பெஷல் எக்ஸ்ப்ரஸ்’ என்ற சிறப்பு ரயிலை இயக்கியிருக்கிறது, தென்னிந்திய இரயில்வே நிர்வாகம். அவர் பயன்படுத்தியது போல இருக்கும் பொருட்களை, பாலாமணி புடவை, பாலாமணி வளையல், சாந்து என வியாபாரிகள் விளம்பரப்படுத்தி விற்றிருக்கிறார்கள்.

கும்பகோணம் பாலாமணி - நன்றி ரோலி புக்ஸ்

விவாதம்

பாலாமணி நடத்திய நாடங்களில் 'தாரா ஷஷாங்கம்’ பெரு வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பெரும் விவாதத்தையும், கிளப்பியது. அந்நாடகத்தில், தாரா என்னும் தேவகன்னிகை பூவுலகில் ஒரு ராணியாகப் பிறக்க சபிக்கப்படுகிறாள். ஒரு காட்சியில் சாபவிமோசனம் பெறுவதற்காக அவளுடைய காதலன் சந்திரனுக்கு, தாரா நிர்வாணமாக வந்து எண்ணெய் தேய்த்து விடுவாள். பாலாமணி துணிச்சலாக அக்காட்சியில் நடிக்க முடிவுசெய்தார். அக்காட்சியில் எப்படி நடித்தார் என்பதைப் பற்றி வெவ்வேறு பதிவுகள் இருந்தாலும், அக்காட்சிக்காவே இந்நாடகம் பெருவெற்றி பெற்றது.

இந்நாடகம், ஒழுக்கம் மற்றும் தணிக்கை தொடர்பான விவாதங்களை உருவாக்கியது. பாலாமணி இறந்து பத்து வருடங்கள் பின்னால் 1944--ம் ஆண்டு ஈரோட்டில் பார்ததசாரதி ஐயங்கார் என்பவரின் தலைமையில் நடந்த மாநாட்டில், 'தாரா ஷஷாங்கம்’ ஒரு ஒழுக்கக்கேடான நாடகம் என்று தடை செய்யப்பட்டது.

மறைவு

பாலாமணி அவருடைய இறுதிக்காலத்தில் வறுமை காரணமாக கும்பகோணத்திலிருந்து, மதுரைக்கு சென்று ஒரு குடிசை பகுதியில் தங்கினார். அங்கு நோயுற்று தன் அறுபது வயதில் 1930-களின் ஆரம்பத்தில் காலமானார். அவருடைய குழுவில் பணியாற்றிய சி.எஸ் சாமண்ணா பாலாமணியின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டு, பலரிடம் நிதி வசூல் செய்து இறுதிச் சடங்கை நடத்தினார்.[1]

பாலாமணி அம்மாள்

அரங்கேற்றிய நாடகங்கள்

  • தாரா ஷஷாங்கம்
  • மனோகரா
  • டம்பாச்சாரி விலாசம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. 1.0 1.1 Drama Queens: Women Who Created History on Stage – Veejay Sai

இதர இணைப்புகள்

  1. Larger than Rajini: The 19th-century stage actress who drove to her performances in a silver chariot
  2. The resurrection of Balamani
  3. Forgotten 'Queen of Tamil Theatre’ Took The Art Of The Devadasis To The World



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jan-2023, 06:54:42 IST