பெண்மதிமாலை
பெண்மதிமாலை (1869) பெண்களுகான நீதி கூறும் நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை.
வெளியீடு
பெண்மதிமாலை நூல், பெண்கல்வி மற்றும் பெண்மானம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை ஏஷியாடிக் பிரஸ்ஸில், 1869-ல் அச்சிடப்பட்டு வெளியானது. இந்நூல்களை இயற்றிப் பதிப்பித்தவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை.
பெண்மதிமாலை நூல் மட்டும் தனியாகவும், மேற்கண்ட நூல்களுடன் இணைந்தும், உரையுடனும் தொடர்ந்து பல்வேறு பதிப்பகங்களால் பலமுறை அச்சிடப்பட்டு வெளியானது.
ஆசிரியர் குறிப்பு
பெண்மதிமாலை நூலின் ஆசிரியர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை. தமிழின் முதல் நாவலான 'பிரதாப முதலியார் சரித்திரம்' நூலை இயற்றியவர். இவர் இயற்றிய பிற நூல்கள்: சுகுணசுந்தரி சரித்திரம், தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, சத்தியவேதக் கீர்த்தனை, சருவசமய சமரசக் கீர்த்தனை, தேவதோத்திரமாலை, சித்தாந்த சங்கிரகம், பெரியநாயகி அம்மன் பதிகம், பொம்மைக் கலியாணம்.
நூல் அமைப்பு
பெண்மதிமாலை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையைச் சேர்ந்த நூல். நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற நூலில் கீழ்க்காணும் பகுதிகள் இடம்பெற்றன.
- தெய்வ பத்தி
- குரு வணக்கம்
- தாய் தந்தையர் வணக்கம்
- கணவன் பத்தி
- கற்பு
- பாலரை வளர்த்தல்
- அனைவருக்கும் உதவுக
- ஞானம்
- பாவம்
- புண்ணியம்
தொடர்ந்த கீர்த்தனைப் பாடல்களில் பின் வரும் பகுதிகள் இடம் பெற்றன.
- பெண் பார்க்கத் தூதனுப்புதல்
- தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல்
- தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல்
உள்ளடக்கம்
"பிறந்த மனையிலும், புகுந்த மனையிலும் பெண்கள் சோம்பலின்றி வேலை செய்தல் வேண்டும்; வாழ்க்கைப்பட்ட பெண் இல்லாள் என்று சொல்லப்படுவதால் அவளே வீட்டுக்கு அதிபதி; அவள் கணவனுக்கும் மற்ற பெரியோருக்கும் பணிந்து நடக்க வேண்டும்; இல்லறம் நடத்தும் பெண்கள் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும்; மாதா பிதா குரு தெய்வம்; இவர்களிடம் அன்பும் பணிவும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும்" என்று தொடங்கி பெண்களுக்கான பல்வேறு அறங்கள் பற்றியும் நீதி பற்றியும், பெண்கல்வியின் இன்றியமையாமை பற்றியும் பெண்மதிமாலை கூறுகிறது.
"பெண்கள் குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்த்தல் வேண்டும்; கணவன் நல்வார்த்தையைத் தட்டக்கூடாது; மாமிமேல் வன்மம் காட்டக் கூடாது; தலையணை மந்திரம் தீது" எனப் பெண்களுக்கான பல்வேறு அறிவுரைகளைப் பெண்மதிமாலை குறிப்பிடுகிறது.
பாடல்
தாய் தந்தையர் வணக்கம்
மாதா பிதாவை வணங்கு - நாளும்
ஆதாரமாகவே யவர்சொல்லுக்கிணங்கு
தந்தை தாய் சாபம் பொல்லாது - அவர்
சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் நில்லாது
மாதா பிதாவுக்குத் துரோகம் - செய்யும்
பாதகரைச் சுற்றும் பாவம் அநேகம்
பெற்றவர் நேசத்தைத் தேடு அவர்
குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு
தாய்தந்தைக் குதவாத பிள்ளை - தனது
ஆயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை
கட்டியுனை ஆளாக்க தாமே முன்பு
பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே
உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு செய்யும்
பிள்ளையைத் தன்பிள்ளை யேபழிவாங்கும்
கடலைப் போல்மாதா சகாயம் - அதற்கு
உடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ஞாயம்
மதியிது மதியிது பெண்ணே - புண்ணிய
வதியல்லவோ நல்ல மகராசி கண்ணே
புண்ணியம்
மதியிது மதியிது பெண்ணே - புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே
புண்ணியஞ் செய்யலாம் நாளை - என
எண்ணி யிராதே இது நல்ல வேளை
புண்ணியம் பாவமல்லாது - இந்த
மண்ணில்நம் மிடமொன்றும் வந்துநில் லாது
மெய்கையி லேதருஞ் சோதி - செய்யும்
செய்கைகளை நீ தினம்பரி சோதி
தர்மத்தைப் பாவம்வெல் லாதே - துட்ட
காமத்துக் கஞ்சிக் கலங்கிநில் லாதே
அகந்தைகள் செய்யப் படாதே - பிறர்
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் புண்யம்வி டாதே
நற்குரு வேமனச் சாட்சி - அதன்
சொற்படி நடந்தாற் சுகநிலை யாட்சி
மேலழ கேகுணவழகு-வெறுந்
மேலழ காலென்ன சுகுணத்திற் பழகு
உத்தம குணமேயா பரணம்-தங்கக்
கொத்து நகைகளெல்லாங் கோதையே திரணம்
கீர்த்தனைகள் - பெண்களின் வேண்டுதல்
பல்லவி
வித்தையைப் படிப்பியுங்கள் - தயைசெய்து
வித்தையைப் படிப்பியுங்கள்.
அநுபல்லவி
உத்தம வான்களே சத்தியபி மான்களே
உங்கட்குக் கண்களான பெண்களா மெங்களுக்கு
சரணங்கள்
திருத்தமா வேலைகளெல் லாமுடிப்போம் - வேலை
தீர்ந்தபின் புத்தகங்க ளேபடிப்போம்
வருத்தம்நீர் படக்கண் டால்மனந் துடிப்போம் - கீத
வண்ணங்கள் பாடிக் கொண்டுகால் பிடிப்போம் - பாட
மாட்டோமோ வீணை
மீட்டோமோ நயங்
காட்டோமோ சும்
ஊட்டோமோ நல்ல
வரவுசெல வின்கணக் கெழுதிவைப்போம் - பல
வகைவகை யுடுப்புக ளுமக்குத் தைப்போம்
பரவும் பலதொழில் நீர்பண்ண வொப்போம் - நல்ல
பக்ஷணங் கறிகளுஞ் செய்யத் தப்போம் - நாங்கள்
படியோமோ இருள்
விடியோமோ மருள்
முடியோமோ அருள்
பிடியோமோ நல்ல....
மதிப்பீடு
எளிய தமிழில் அமைந்துள்ள பெண்மதி மாலையை, வேதநாயகம் பிள்ளை தனது மகளுக்கு அறிவுரை கூற விரும்பி எழுதினார் என்ற ஒரு கருத்து உள்ளது. பெண்மதிமாலை பெண்களுக்கான நீதிகளைக் கூறும் அற நூலாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:07:10 IST