சித்தாந்த சங்கிரகம்
- சங்கிரகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சங்கிரகம் (பெயர் பட்டியல்)
- சித்தாந்தம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சித்தாந்தம் (பெயர் பட்டியல்)
சித்தாந்த சங்கிரகம் (1862), உயர்நீதி மன்றத் தீர்ப்புகளின் திரட்டு. பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய மாயூரம் முன்சீப். வேதநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்ட நூல். ஆங்கிலத்தில் மட்டுமே நீதிமன்றக் குறிப்புகளும், தீர்ப்புகளும் வெளியாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அதன் தேவையை உணர்ந்து வேதநாயகம் பிள்ளையால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
வெளியீடு
சித்தாந்த சங்கிரகம் நூல், 1805 முதல் 1861 வரையிலான உயர்நீதி மன்றத் தீர்ப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு. கிரேவ்ஸ் அண்ட் கோவால், 1862-ல், ஸ்காட்டிஷ் பிரஸில் அச்சிடப்பட்டது.
நோக்கம்
சித்தாந்த சங்கிரகம் நூல் இயற்றியதன் காரணம் குறித்து, நூலின் முகவுரையில் வேதநாயகம் பிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டார். "வக்கீல்களும், வியாஜியக்காரர்களும் நியாய பரிபாலக விஷயத்தில் எவ்வகையிலாவது சம்பந்தப்பட்ட இதரர்களும், சதர்க்கோர்ட்டாரவர்களுடைய சித்தாந்தங்களை ஸ்பஷ்டமாக அறிந்திருக்க வேண்டியது அவசியமென்பது ஸகலரும் அங்கீகரிக்கும்படியான விஷயமே தவிர வேறல்ல. ஆனால் அந்த விதிகள் அநேக புஸ்தகங்களில் சிதறிக் கிடக்கிற படியால், இங்கிலீஷ் பாஷை தெரிந்தவர்களும் அந்தப் புஸ்தகங்கள் ஸ்வாதீனம் உள்ளவர்களுங்கூட அந்த விதிகளை அறிந்து கொள்வது மஹா பிரயாசமாயிருக்கின்றது. அப்படியிருக்க இங்கிலீஷ் தெரியாத வியாஜியக்காரர்கள் சதர்க்கோர்ட்டின் சித்தாந்தங்களை வாசித்து அந்தப்படி அநுஷ்டாநம் செய்வது அசக்கியமானபடியால், நியாயப் பிரமாணப்படி செல்லாதென்று சதர்க்கோர்ட்டாரவர்களால் பல பிரகிருதங்களில் நிஷதிதம் செய்யப்பட்டிருக்கிற ஸ்வரூபத்தையுடைய வியவகாரங்களுடனேயும் சம்வாதங்களுடனேயும் கட்சிக்காரர்கள் அடிக்கடி கோர்ட்டுக்கு வருவதும் அதனால் விருதாவிரயத்திற்கும் சிரமத்திற்கும் அசெளக்கியங்களுக்கும் அவர்கள் உள்ளாவதும் ஆச்சரியமான காரியமல்ல. இந்த சந்தர்ப்பங்களையெல்லாம் அறியும்படியான சமயங்கள் என்னுடைய முன்சீப் உத்தியோக மூலமாக எனக்குக் கிடைத்திருப்பதால் 1805 முதல் 1861 வரையுள்ள சதர்க்கோர்ட்டின் ஸித்தாந்தங்களைத் திராவிட பாஷாரூபமாகச் செய்வது இங்கிலீஷ் தெரியாத நியாயாதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் பிரயோஜனகரமாயிருக்குமென்றெண்ணி, அந்தப்படி பாஷாந்தரம் செய்ய உடன்பட்டேன்."
நூல் அமைப்பு
சித்தாந்த சங்கிரகம் நூலில், அங்கீகாரம், அங்கீகார விபரீதம், அடகு, அடைமானம், அதிகார வரம்பு தொடங்கி வளர்ப்புப் புத்திரன், வாய்க்கால், வியாஜியம், விவாஹம், ஹிந்துக்கள் என 181 தலைப்புகளில் சட்டம் தொடர்பான செய்திகள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு வழக்கு விபரங்களும், தீர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் நிகழ்ந்த வழக்குகள் பற்றிய செய்திகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நூலிலிருந்து சில பகுதிகள்
அதிர்ஷ்டச் சீட்டு
லாட்டரிச் சீட்டின் கையொப்பக்காரர்கள் மாதாந்திரஞ் சில தொகை கொடுக்கிறதென்றும் ஒவ்வொரு மாதத்திலும் எவன் பெயரால் சீட்டு விழுகிறதோ அவன் அந்த மாதத்துத் தொகை முழுவதும் எடுத்துக் கொள்கிறதென்றுஞ் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாவது ௧௮௪௪ ௫.வது ஆக்டுக்கு விரோதமானதல்ல.
அங்கீகார விபரீதம்
நிலந்தன் வசத்தில் இருப்பதாகவும், மிராசுமாத்திரம் பதிய வேண்டுமென்றும் வியாச்சியஞ் செய்த வாதி பிற்பாடு நிலமுந்தன்வசமாக வேண்டுமென்று கேட்டுக் கொள்ளக்கூடாது.
தனக்கும் மற்றவர்களுக்கும் பாகம் நடந்து சில விஷயங்களில் அந்தப் பாகம் நிறைவேறியிருப்பதாக ஒரு காலத்தில் ஒப்புக் கொண்டவன் பிற்பாடு அந்தப் பாகத்தைப் பற்றி ஆட்சேபிக்கக் கூடாது
ஆலயம்
கோவிலில் தர்மகர்த்தர் முதலான உத்தியோகங்களைத் தலைமுறை தலைமுறையாய் நடப்பிவித்து வந்தவர்களே அந்த உத்தியோகங்களுக்குச் சர்வசுதந்தரம் உள்ளவர்கள். தேவஸ்தானங்கள் கலெக்ட்டர் விசாரணையில் இருந்தகாலத்தில் ஷூ உத்தியோகஸ்தர்களுக்குப் பிரதிகூலமாய்க் கலெக்ட்டர் செய்த யாதொரு செய்கையானது அவர்களுடைய பிதுரார்ஜித பாத்தியங்களை மாற்ற மாட்டாது. கோவிலின் பிதுரார்ஜிதமான உத்தியோகங்களைப் பற்றின வியாச்சியங்களைக் கோர்ட்டார் அங்கீகரிக்கலாம். (கஅரு0நம்ஙகூ)
சில கோவில்கள் சகலஜனங்களுக்கும் பொதுவாகவும் சில கோவில்கள் அவைகளைக் கட்டினவர்கள் முதலான சிலருக்குமட்டுஞ் சொந்தமாகவும் இருப்பதால் சிலருக்குமட்டுஞ் சொந்தமான கோவில்களைப்பற்றி அவர்கள்மட்டும் ஏகதேசத்தில் வியாச்சியங் கொண்டுவரலாம். (கஅருஙு-நம்-உரு.)
தென்கலை வைஷ்ணவர்களுடைய கோவிலின் எல்லைக்குள் வடகலை வைஷ்ணவர்களுக்கு நிலஞ் சொந்தமாயிருந்தாலுங் கூட அந்த நிலத்தில் வடகலையார் அவர்களுடைய வேதாந்தாசாரி விக்கிரகத்தைவைத்துப் பூஜைசெய்யக்கூடாது. ஆனால் அவர்களுடைய கிரகங்களில் விக்கிரகங்களை வைத்துப் பூஜைசெய்வதில் ஆட்சேபம் இல்லை. வடகலை வைஷ்ணவர்களுடைய கோவிலின் எல்லைக்குள் தென்கலையாரும் விக்கிரகங்களை வைக்கக்கூடாது.
பிதுரார்தஜிமான மிராசு பாத்தியமுள்ள கோவிலின் குருக்கள் பிரபலமான துர்மார்க்கஞ் செய்தால் மட்டும் அவனைத் தர்மகர்த்தா அந்த வேலையிலிருந்து தள்ளலாமே அல்லாமல் அற்பக் குற்றங்களுக்காகத் தள்ளக்கூடாது. நிஷ்காரணமாய்த் தள்ளப்பட்ட மிராசு பாத்தியமுள்ள குருக்கள் கோர்ட்டில் வியாச்சிய மூலமாய் ஞாயம் பெற்றுக்கொள்ளலாம். (கஅருசம்-அ)
மதிப்பீடு
சட்டம் பற்றி அறியாமல், ஆங்கிலப் புரிதலும் அல்லாமல் மக்கள் வீணான வழக்குகளில் இறங்கி பொருள் இழப்புக்கும் கால இழப்புக்கும் மனதுத்துயருக்கும் உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட நூல் சித்தாந்த சங்கிரகம். சட்டம் சார்ந்த தமிழ்க் கலைச்சொற்கள் பிற்காலத்தில் உருவாகவும் இந்நூல் பயன்பட்டது. சட்டங்கள் பற்றி, வழக்குகள் பற்றி, நிர்வாகம் மற்றும் தீர்ப்புகள் பற்றி விரிவாகத் தமிழில் அறிமுகம் செய்து எழுதப்பட்ட சட்டத் தமிழின் முன்னோடி நூலாகவும், முதல் நூலாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
- சித்தாந்த சங்கிரகம்: மாயூரம் முன்சீப் ச. வேதநாயகம் பிள்ளை: தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு - கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள்: தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
13-Jul-2024, 09:45:08 IST