under review

தேவமாதா அந்தாதி

From Tamil Wiki

தேவமாதா அந்தாதி (1873) இயேசு பெருமானின் அன்னையான மேரி மீது பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை.

வெளியீடு

தேவமாதா அந்தாதி நூல் 1873-ல் வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

தேவமாதா அந்தாதி நூலை இயற்றியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை. வேதநாயகம் பிள்ளை, கத்தோலிக்கச்‌ சபையைச்‌ சேர்ந்தவர்‌. அக்டோபர் 11, 1826-ல் பிறந்தார். முதன்‌ முதலாகத்‌ தமிழில்‌ புதினம்‌ எழுதினார். இவர் இயற்றிய கீர்த்தனைப் பாடல்களுள் ’சர்வ சமய சமரசக்‌ கீர்த்தனைகள்‌’ குறிப்பிடத்தகுந்த ஒன்று. பிரதாப முதலியார் சரித்திரம், நீதிநூல், திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, பெரியநாயகி அம்மன் பதிகம், சுகுணாம்பாள் சரித்திரம், சித்தாந்த சங்கிரகம், பெண் மனம், பெண் கல்வி மற்றும் பெண் மதிமாலை போன்றவை வேதநாயகர் எழுதிய பிற நூல்கள். வேதநாயகம் பிள்ளை ஜூலை 21, 1889-ல் காலமானார்.

வேதநாயகம் பிள்ளை எழுதிய குறிப்பிடத்தகுந்த நூல்களில் ஒன்று தேவமாதா அந்தாதி.

நூல் அமைப்பு

தேவமாதா அந்தாதி நூறு வெண்பாக்களால் ஆனது. அந்தாதி வடிவில் பாடப்பட்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் அமைந்துள்ளது. நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில் அமைந்துள்ள வெண்பாக்கள், பல்வேறு பெயர்களில் வணங்கப்படும் மாதாவின் பண்புகளைப் பேசுகின்றன. எஞ்சியுள்ள பாக்கள் பக்தரின் இறை வேண்டலாக அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

தேவமாதா அந்தாதி பக்திச்சுவை, இலக்கியச் சுவையுடன் பாடப்பட்டுள்ளது. மாதாவின் அருளை வேண்டும் புலவர், 'புத்தமுதே', 'கதி நிலையே', 'சோதி உரு சேகரியே', 'ஓதற்கு அரியாளே', 'துறவோர் நாடும் சுகமே', 'மறை புகழும் மாண்பாளே' எனப் பல்வேறு அடைமொழிகளால் மாதாவைச் சிறப்பித்துள்ளார். மாதாவை 'பெரியநாயகி', 'மங்கள மாதா', 'பிரகாச மாதா', 'நம்பிக்கை மாதா', 'இருதயமாதா', 'பரிபூரண மாதா', 'நட்சத்திர மாதா', 'சகாய மாதா', 'இளைப்பாற்றி மாதா', 'மதுரநாயகி மாதா', 'சலுகை மாதா', 'பனிமாதா', 'ஜெயமாதா', 'மாதரசு மாதா', 'மகிமை மாதா', 'சலேத்து மாதா', 'தயை மாதா', 'பொறுமை மாதா' எனப் பல்வேறு பெயர்களில் புகழ்ந்து பாடியுள்ளார்.

பாடல்கள்

இறை வேண்டுதல்கள்

தானே இருக்கும் தனிப்பொருளை ஈன்றவளே
தேனே இருக்கும் மொழிச்செல்வியே - நானே
அபகாரத் தானேனும் ஆள் என்று அடுத்தேன்
உபகாரத் தாயே உனை

பேசுவதெல்லாம் பொய்யே பேணுவதெல்லாம் பவமே
ஏசுவதெல்லாம் மறையே என் தாயே - காசினியில்
நீயே இரங்கி நெறியை அருளாயேல்
நாயேனுக்கு (உ)ண்டோ நலம்!

நலம் இல்லேன் ஞானம் இல்லேன் நை வினையை நீக்கப்
பலம் இல்லேன் பண்பில்லேன் பாடும் - புலம் இல்லேன்
என் தாயே நீ தான் இனியரையே கைவிடேன்
என்றாயே ஆள்வாய் இனி

யார் இடத்தில் அம்மா நீ பண்டு பிறவாதிருந்தால்
ஆரிடத்தில் ஐயர் அவதரிப்பார் - நீரிடத்தில்
அல்லாது உண்டாமோ அரவிந்தம் வானில் அன்றி
நில்லாது சூரியனும் நேர்

உசாத்துணை


✅Finalised Page