under review

பிரதாப முதலியார் சரித்திரம்

From Tamil Wiki

To read the article in English: Prathapa Mudaliar Sarithiram. ‎

பிரதாப முதலியார் சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826- 1889). அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்நாவலின் கதாநாயகன் பிரதாப முதலியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை சொல்வதாக அமைந்த நாவல். பெண்விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பேசும் சமூக மிகுகற்பனை படைப்பு.

உருவாக்கம்

ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்றிருந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆங்கில நாவல்களைப் படித்து அது போல தமிழில் எழுத விரும்பினார். தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்ற குறையை நீக்குவதற்காக இதை எழுதுவதாக நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் அவர் எழுதிய நீதி நூல், பெண்மதிமாலை, சர்வ சமய சமரசக் கீர்த்தனம் போன்ற செய்யுள் நூல்களில் எழுதியிருந்த அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதுவதாகவும் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

வசன காவியம் என்றே தனது நாவலைக் குறிப்பிடும் வேதநாயகம் பிள்ளை அறநெறிக்கருத்துகளை சொல்லும் அதே நேரம் வாசகர்களின் ரசனையை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டுமென எண்ணி நகைச்சுவைப் பகுதிகளையும் இதில் எழுதியுள்ளார்.

பதிப்பு

1857-ல் எழுதப்பட்ட இந்நாவலின் முதற்பதிப்பு 1879-ல் வெளியாகியது. இந்த நாவல் அடைந்த புகழின் காரணமாக பல பதிப்புகளும், திருத்தங்களுடன் கூடிய மறுபதிப்புகளும் வெளியாகி இருக்கின்றன. 1819-ல் மூன்றாவது பதிப்பு வெளியானது. 1914-ல் வெளிவந்த ஐந்தாம் பதிப்பில் அதன் பதிப்பாசிரியராக இருந்த வேதநாயகம் பிள்ளையின் மகன் வி. ஞானப்பிரகாசம் பிள்ளையால் முதல் முறையாக சில பிழை திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு முகவுரையும் சேர்க்கப்பட்டது. 1917-ல் வெளிவந்த ஏழாம் பதிப்பு ஆயிரத்து ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்டது. அதில் வேதநாயகம் பிள்ளையின் பேரர்கள் நடத்திய மாயவரத்தைச் சேர்ந்த வி. ஜி. ஆரோக்கியசாமி & ப்ரதர்ஸ் பதிப்பகம் மேலும் சில திருத்தங்கள் செய்து வெளியிட்டது.

வேதநாயகம் பிள்ளையால் அந்தக் கால இயல்புக்கேற்ற தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்த இந்த நாவல் 1948-ல் தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட பதிப்பில் வடமொழிவ் சொற்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு முற்றிலும் மாற்றி வெளியிடப்பட்டது. இச்செயல் பின்னர் தமிழ் எழுத்தாளர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. க.நா. சுப்ரமணியம் இதனை 'வன்முறைச் செயல்’ என்று குறிப்பிட்டு கண்டித்திருக்கிறார். இவ்விதம் ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் விதமாக சக்தி காரியாலயம் 1957-ல் மீண்டும் ஒரு மாற்றமில்லாத முழுப் பிரதியை வெளியிட்டது.

1979-ல் இந்நாவலின் நூற்றாண்டு நினைவு சிறப்புப் பதிப்பு வேதநாயகம் பிள்ளையின் பேரன் வே.ஞா.ச. இருதயநாதனால் பதிப்பிக்கப்பட்டது.

மொழியாக்கம்

 • பிரதாப முதலியார் சரித்திரம் மீனாட்சி தியாகராஜன் மொழியாக்கத்தில் 2005-ம் ஆண்டு ’தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் பிரதாப முதலியார்’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.
 • பேராசிரியர் வின்செண்ட் M. லாரன்ஸ் என்பவரின் மொழியாக்கத்தில் எதிர் வெளியீடாக ஆங்கிலத்தில் 2016-ல் வெளியாகி இருக்கிறது.
 • தி அட்வென்சர்ஸ் ஆஃப் ப்ரதாபன் என்ற பெயரில் அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இது இந்திரா அனந்தகிருஷ்ணன் என்பவரால் எழுதபட்ட நாவலின் சுருக்கமான தழுவல் ஆகும். இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.
 • பிரதாப முதலி – தமிழு சாகித்யத மொதலனேய காதம்பரி [1] என்ற பெயரில் 1957-ல் மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

கதைச்சுருக்கம்

பிரதாப முதலியார் சரித்திரம்

இந்நாவல் பிரதாப முதலியார் என்பவரை கதாநாயனாகக் கொண்டு அவரது தற்கூற்றாக எழுதப்பட்டுள்ளது. அவர் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படி சேர்ந்தார்கள் என்பதும் இதன் கதைக்களம்.

பிரதாப முதலியாரின் குழந்தைப்பருவத்தில் இருந்து கதை துவங்குகிறது. இந்நாவலின் கதைநாயகி ஞானாம்பாள். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாக கல்வி கற்கிறார்கள். அவளை இளமை முதலே காதலிக்கும் பிரதாப முதலியார் அவளையே மணந்துகொள்கிறான். ஆனால் அதற்கு முன்னர் திருமணம் நிகழ்வதிலேயே பல சிக்கல்கள் வருகின்றன. திருமணத்துக்குப் பிறகு வீட்டோடு மருமகனாக இருக்க வேண்டுமென ஞானாம்பாளின் தந்தை சம்பந்த முதலியார் சொல்கிறார். அதை பிரதாப முதலியாரின் தந்தை கனகாச்சல முதலியார் ஏற்க மறுப்பதால் திருமண ஏற்பாடு நின்று போகிறது.

பிரதாப முதலியார், ஞானாம்பாள் இருவருக்கும் வேறு இடங்களில் முறையே மணமகளும் மணமகனும் நிச்சயம் செய்யப்படுகிறது. இரண்டு குடும்பங்களுக்கும் தொடர்புடைய உறவினர் இறந்து போகவே திருமணம் மீண்டும் தடைப்படுகிறது. இரண்டு குடும்பத்தினரும் தத்தமது சம்பந்திகளுக்கு குறித்த நாள் அன்று திருமணம் நடைபெற இயலாதென கடிதம் அனுப்புகிறார்கள். ஆனால் அது இருவருக்கும் சென்று சேராமையால் அந்த இரு குடும்பங்களும் நிச்சயித்த தினத்தன்று திருமணம் நடக்க இருந்த ஊருக்கு வருகிறார்கள். சம்பந்திகளை சரியாக அறிமுகம் செய்திருக்காத நிலையில் அவ்விரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் சம்பந்தி என்று எண்ணிக் கொள்கிறார்கள். பிரதாப முதலியாருக்கு பேசிய பெண்ணுக்கும் ஞானாம்பாளுக்குப் பேசிய மணமகனுக்கும் திருமணம் நடந்து விடுகிறது.

பிரதாப முதலியார் சரித்திரம்

அதன் பிறகு ஒரு நாள் ஞானாம்பாளை மணக்க விரும்பிய வேறொருவர் அவளை ஆள் வைத்து கடத்த முயல்கிறார். அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பும் ஞானாம்பாளை பிரதாப முதலியார் மீட்டு வருகிறான். இதனால் மனம் மாறிய ஞானாம்பாளின் தந்தை பிரதாப முதலியாருக்கு அவளை மணமுடித்து வைக்கிறார். பின்னர் வேட்டை காணச் சென்ற பிரதாப முதலியார் அண்டை நாடாகிய விக்கிரமபுரியில் அநீதியான முறையில் சிலரால் வழக்குத் தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவனைப் பிரிந்த ஞானாம்பாள் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, ஆண் வேடமிட்டு, காட்டில் அலைந்து திரிகிறாள். இதற்கிடையில், அந்த அண்டை நாடு அரியணைக்குரிய வாரிசை இழக்கிறது. அவர்களது வழக்கப்படி, பட்டத்து யானை ஒரு புதிய அரசனை மாலையிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். யானை காட்டுக்குள் அலைந்து திரிந்து ஆண்வேடமிட்டிருந்த ஞானாம்பாளுக்கு மலர் மாலை அணிவிக்கிறது. விரைவில், அவள் அந்நாட்டின் அரசனாக அறிவிக்கப்பட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.

ஆண் வேடத்தில் அரசு புரியும் ஞானாம்பாள் தன் கணவன் அங்கு சிறைபட்டிருப்பதை அறிந்து வழக்கை விசாரித்து நியாயம் வழங்குகிறாள். பிரதாப முதலியாரை துணை அரசனாக்கி ஆண்டு வருகிறாள். அந்நாட்டின் இளவரசி (முந்தைய மன்னனின் மகள்) ஆண் வேடமிட்டிருக்கும் ஞானாம்பாளை மணக்க விரும்புகிறாள். ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் இரவோடிரவாக அங்கிருந்து நீங்குகிறார்கள். தான் ஒரு பெண் என்பதை அந்த இளவரசியிடம் கடிதம் எழுதி தெரிவித்து அவளுக்கே முடிசூட்டி வைக்கிறார்கள். இருவரும் தங்கள் ஊராகிய சத்தியபுரிக்கு திரும்பும் வழியில் ஞானாம்பாளுக்கு அம்மை நோய் தாக்குகிறது. அவள் இறந்து போனதாக மருத்துவர்கள் அறிவித்துவிட அனைவரும் துயரத்துடன் ஊர் திரும்புகிறார்கள். பின்னர், அவள் இறக்கவில்லை, நோயின் கடுமையில் மயக்கம் அடைந்திருந்தவளை இறந்து போனதாக தவறாகத் தெரிவித்து விட்டதாக தெரிய வருகிறது. அனைவரும் மகிழ்சியோடு சத்தியபுரியில் வாழ்கிறார்கள்.

இதுவே மையக்கதை என்றாலும் பல்வேறு கிளைக் கதைகளோடு நாவல் பயணிக்கிறது. கற்பாலங்காரி சரிதம், கருணானந்தம்பிள்ளை மோசம்போன கதை, ஒன்பது விக்ரகங்களின் கதை, ஆண்டிச்சியம்மன் சரித்திரம், கெட்ட ஸ்த்ரீ நல்ல ஸ்த்ரீ உதாரணக் கதைகள், இரண்டுதாரக்காரன் பாடு, புண்ணியகோடிச் செட்டியார் சரித்திரம் போன்ற துணைக்கதைகள் இதிலுள்ளன.

கதைமாந்தர்

 • பிரதாப முதலியார் - கதைநாயகன். ஞானாம்பாளின் இளமைக்காதலன், கணவன்.
 • ஞானாம்பாள்- கதைநாயகி. அழகும், அடக்கமும், அறிவும், கொடையும், பெருந்தன்மையும், இனிமையாகப் பேசும் இயல்பும், சொற்சாதுர்யமும் நிறைந்த பெண். கணவனை நேசிப்பவள். மாறுவேடத்தில் ஒரு நாட்டையே நிர்வகிக்கும் திறன் கொண்டவள்.
 • சுந்தரத்தண்ணி - பிரதாப முதலியாரின் அம்மா. ஞானம் உடையவள். ஆண்களுக்கு அறிவுரை கூறும் ஆற்றல் கொண்டவள். அவளது துணிவையும் வழக்காடும் திறனையும் சென்னை கவர்னரே பாராட்டுகிறார்.
 • கனகாச்சல முதலியார் - பிரதாப முதலியாரின் தந்தை. செல்வந்தராயினும் பொறுமை மிக்கவர்.
 • சம்பந்த முதலியார் – ஞானாம்பாளின் தந்தை. செல்வத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். ஞானாம்பாளால் மாற்றம் அடைகிறார்.
 • கனகசபை - பிரதாப முதலியாரின் நண்பன்.
 • தேவராஜ பிள்ளை – ஆதியூரின் தலைவர். கனகசபையின் தந்தை. அறிவார்ந்தவர், பிரதாப முதலியார்-ஞானம்பாள் இருவருக்கும் பல விதங்களில் உதவுபவர்.

மதிப்பீடு

பெங்களூரில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த "தி ஹார்வெஸ்ட் ஃபீல்ட்" என்னும் இதழ் மார்ச் 1886 இதழில் "இந்தப் புத்தகம் தமிழ் சிந்தனை மற்றும் இலக்கியத்தில் தெளிவான முன்னேற்றத்தின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் இதில் இடம்பெறும் தமிழ் பேச்சில் மேற்கத்திய சிந்தனைப் போக்கு இடம்பெறுகிறது. இது சிறந்த குடும்பப் பாங்கான புத்தகம் மற்றும் நன்கு திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது" என்று இந்நாவல் வந்த காலகட்டத்தில் மதிப்புரை வெளியாகியது.

"பிரதாபமுதலியாரின் நகைச்சுவை நிறைந்த அனுபவங்களுக்கிடையே ஆன்மிக அறிவுரைகளை வேதநாயகம் பிள்ளை ஆங்காங்கே இணைத்திருப்பது அவருடைய கதைசொல்லும் திறனுக்கு தனிச்சிறப்பளிக்கிறது’ என்று தமிழ்நாவல் நூலில் சிட்டி-சிவபாதசுந்தரம் கருத்துரைக்கிறார்கள்.

இந்நாவல் நீண்ட வாக்கிய அமைப்புகளும், ஏராளமான உருவகங்களும், பழமொழிகளும், அணிகளும் கொண்ட நடையில் அமைந்தது. அக்காலகட்டத்தில் புழங்கிய வடமொழிச் சொற்கள் அதிகம் புழங்கும் தமிழ் நடையில் எழுதப்பட்டது. பிரதாப முதலியார் சரித்திரம் விரிவான புறச்சூழல் சித்தரிப்பும், கதைமாந்தரின் இயல்புகளில் நுட்பமும் கொண்டது அல்ல. ஆரம்பகாலக் கதைகள் பலவற்றில் வருவது போல நிகழ்வுகள் நம்ப முடியாத அசாதாரணத் தன்மை கொண்டிருக்கின்றன. கதாபாத்திரங்கள் பலர் நீதி உபதேசக் கருத்துக்களையும், நீதிக்கதைகளையும் சொல்கிறார்கள். பல இடங்களில் நீதிக் கருத்துக்கள் கட்டுரைகள் போல தொடர்பின்றி ஆசிரியரின் குரலாக இடம்பெறுகின்றன. இன்னும் சில கதாபாத்திரங்கள் அதற்கென்றே கதையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பிரதாப முதலியாரின் ஆசிரியராக வரும் கனகானந்த பிள்ளை பல மூடவழக்கங்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்வதற்காகவே வரும் கதாபாத்திரமாக தோன்றுகிறது. மையக்கதை ஓட்டத்திலிருந்து விலகி பல உபகதைகளும் நாவலில் வருகின்றன.

இந்நாவலின் வழியாக அன்றிருந்த சமூக அரசியல் நிலைமைகளை ஒரளவு அறிந்து கொள்ள முடிகிறது. கதை நிகழும் காலகட்டம் முகலாய அரசு முடிவடைந்து ஆங்கிலேய அரசு காலூன்றிவிட்ட காலகட்டம். அதனால் இஸ்லாமிய அரசர்களின் கீழ் திவான்களாக இருந்து செல்வந்தர்களாக ஆகியவர்களின் குடும்பங்கள், பாளையப்பட்டு ஆட்சியாளர்களின் கதைகள் இதில் வருகின்றன. 1848-ல் இருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) ஆண் வாரிசின்றிப் போகும் நாடுகளில் ஆண் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது ஏற்கப்படவில்லை என்பதன் பாதிப்பும் இந்த நாவலில் வருகிறது. சமுதாயத்தில் ஆங்கிலத்தின் மீது உருவாகி பெருகி வரும் மோகமும் தமிழறிஞர்களை ஆங்கிலம் கற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதன் சித்திரமும் வருகின்றன. மேலை கலாச்சாரத்தின் மீது பெரும் பற்று கொண்டு மக்கள் நாத்திகவாதம் பேசத் துவங்குவதும் வருகிறது. பாளையப்பட்டு ஆட்சியாளர் குடும்பத்தில் வாரிசுகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற தகவல்களை இக்கதையில் காண முடிகிறது. மேலும் அன்று பிரிட்டிஷார் உருவாக்கியிருந்த நீதிமன்ற நடைமுறையில் நிலவிய ஊழல்கள் ஆகியவையும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

பெண் கல்விக்கும் சுதந்திரத்துக்கும் அளித்த முக்கியத்துவம், ஆணுக்கு இணையான நிர்வகிக்கும் திறனும் சொற்சாதுர்யமும் கொண்ட பெண் கதைமாந்தர் சித்தரிப்புகள் ஆகியவற்றால் இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது. வடிவரீதியாக இது இந்திய கதைக்கொத்துகளான பட்டிவிக்ரமார்க்கன் கதை போன்றவற்றுக்கு அணுக்கமானது. அக்காலத்தில் இந்த வடிவம் நாவலுக்கு புறம்பானது என விமர்சகர்களால் கருதப்பட்டாலும் இன்று நாவல் என்பது ஒற்றை ஒழுக்குள்ள கதையாக இருக்கவேண்டியதில்லை என்றும், கிளைகளாகவும் குறுங்கதைகளாகவும் விரிந்து செல்லும் வடிவம் நாவலுக்கு உகந்ததே என்றும் ஆகிவிட்டிருப்பதனால் இந்நாவல் வடிவரீதியாகவும் முன்னோடியானது எனலாம். இந்தியாவின் மரபான கதைத்தொகை வடிவங்களில் இருந்து இந்தியத்தன்மை கொண்ட ஒரு நாவலை உருவாக்குவதற்கு இது வழிகாட்டுகிறது.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page

 1. ’பிரதாப முதலி – தமிழு சாகித்யத மொதலனேய காதம்பரி’ [1]